தமிழகம் வரும் பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்க விவசாயிகள் முடிவு
By DN | Published On : 02nd May 2016 08:11 AM | Last Updated : 02nd May 2016 08:11 AM | அ+அ அ- |

தேர்தல் பிரசாரத்துக்கு தமிழகம் வரும் பிரதமர் நரேந்திரமோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்க விவசாயிகள் முடிவெடுத்துள்ளனர்.
திருவாரூரில் நடைபெற்ற தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு, சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழ்நாட்டில் காவிரி டெல்டா தொடர்ந்து போராட்டக் களமாக மாறி வருகிறது. கர்நாடக அரசு நடுவர் மன்றத்தை மதிக்காமல் காவிரியின் குறுக்கே ராசிமணல், மேகேதாட்டு பகுதியில் புதிய அணை கட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
குடிநீóர்ப் பிரச்னையென காரணம் காட்டி அம்மாநில விவசாயிகளைத் தூண்டிவிட்டு ரூ. 5,000 கோடியில் புதிய அணை கட்ட வரைவுத் திட்டம் தயாரித்திருப்பதுடன், அணை கட்ட பூமி பூஜையும் போடப்பட்டுள்ளது.
இந்த அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் வர வாய்ப்பில்லை. ஏற்கெனவே கிருஷ்ணராஜ சாகர் அணையில் 49 டிஎம்சி தண்ணீர் தேக்கப்படும் நிலையில் புதிய அணையில் 60 டிஎம்சி தண்ணீர் தேக்கினால் தமிழகம் வஞ்சிக்கப்படும்.
இதை உடனடியாக மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். ஆனால் அரசியல் காரணத்துக்காக மத்திய அரசு இந்த விவகாரத்தில் மவுனம் காத்து வருகிறது.
கர்நாடக அரசின் இந்த அணை கட்டும் திட்டத்தைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை (மே 3) கிருஷ்ணகிரி அருகே ஜுஜுவாடியில் தமிழக விவசாயிகளின் உண்ணாவிரதப் போராட்டம் தடையை மீறி திட்டமிட்டபடி நடத்தப்படும்.
மேலும், மத்திய அரசு காவிரி இறுதித் தீர்ப்பை அமல்படுத்தாமலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமலும் கர்நாடக அரசுக்கு சாதகமாக செயல்பட்டு வருகிறது. உச்சநீதிமன்றம் தானே முன்வந்து இது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் நிலையில், காவிரியின் குறுக்கே அணை கட்டும் கர்நாடக அரசின் செயலை தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்விவகாரத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து மவுனம் காத்து வருவது வருத்தமளிக்கிறது. எனவே, தமிழக விவசாயிகளை வஞ்சித்துவிட்டு, தமிழக விவசாயிகளிடம் வாக்கு கேட்பதற்காக தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிராக விவசாயிகளை ஒன்று திரட்டி பிரதமர் எங்கு வருகிறாரோ அங்கு போராட்டம் நடத்தப்படும் என்றார் பாண்டியன்.