Enable Javscript for better performance
ஓட்டுக்குப் பணம்:  செய்வதறியாமல் திணறும் தேர்தல் ஆணையம்? மக்களின் கடைசிகட்ட மனநிலை?- Dinamani

சுடச்சுட

    

    ஓட்டுக்குப் பணம்:  செய்வதறியாமல் திணறும் தேர்தல் ஆணையம்? மக்களின் கடைசிகட்ட மனநிலை?

    By ஜங்ஷன் - intro  |   Published on : 15th May 2016 09:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    note_vote

    ஊழலை எதிர்க்க வேண்டிய மக்களையே ஊழல்வாதிகளாக்குவது. இது தான் அரசியல்கட்சிகளின் அதிரடித் திட்டம்.

    100 நாள் வேலைதிட்டத்தில் வேலைக்குச் செல்லாமலே கையெழுத்து மட்டும் போட்டால் போதும். 75 ரூபாய் தந்துவிடுவார்கள்.  கணவன் மனைவிக்குச் சேர்ந்து மொத்தம் ரூ150 ரூபாய் கிடைத்துவிடும்.

    கணவன் டாஸ்மாக் கடைக்குச் சென்றுவிடுவார். மனைவி சிக்கன் கடைக்குச் சென்றுவிடுவார். இலவச அரிசியும் ரேஷன் கடையில் கிடைத்துவிடும்.

    இலவச அரிசியில் சோறு, சிக்கன், மது எல்லாம் சேர்ந்துவிட்டது.  இலவசமாகக் கிடைத்த தொலைக்காட்சிக்கு முன்னர் உட்கார்ந்து கொண்டு மனைவி தொடர் நாடகங்கள் பார்ப்பார். கணவர் கிரிக்கெட் பார்ப்பார்.

    இப்படியும் பல குடும்பங்கள் பல நாட்களாய்ப் பிழைப்பை ஓட்டுகிற வாழ்க்கை முறையைப் பல வீடுகளில் பார்க்கலாம்.

    ஒரு வாழைப்பழ வியாபாரி இருந்தார். அவர் படிப்பறிவே இல்லாதவர். காலையில் தூங்கி எழுந்ததும் 100 ரூபாயை எடுத்துச் சென்று ஒரு வாழைத்தாரை வாங்கினார். மொத்தம் 100 நல்ல பழங்களைத் தள்ளுவண்டியில் கொண்டு சென்றார். ஒரு பழத்தை 2 ரூபாய்க்கு விற்றார். மொத்தம் ரூ200 அவருக்குக் கிடைத்து. அதாவது 100 ரூபாய் முதலீடு செய்தார், 2 மணி நேரத்தில் அந்த 100ரூபாயை 200 ரூபாயாக மாற்றினார். 100 ரூபாய் லாபம் கிடைத்தது.

    படிப்பறிவில்லாத ஒரு வியாபாரி 100 ரூபாயை வைத்துக் கொண்டு 2 மணி நேரத்தில் 2 மடங்காக உயர்த்துகிற திறமையைப் பெற்றிருக்கிறார்.

    பட்டம் படித்த ஒரு இளைஞரிடம் ஒரு இலட்சம் தருவோம். அந்த ஒரு லட்சத்தை இரண்டு லட்சமாக அந்த இளைஞரால் மாற்ற முடியும்? அப்படி மாற்றுவதற்கு இந்த இளைஞருக்கு எத்தனை நாட்கள் தேவைப்படும்? 7 நாட்கள் அல்லது 30 நாட்கள் அல்லது 365 நாட்கள்?

    சரி 365 நாட்களையே வைத்துக் கொள்வோம். ஒரு படித்த இளைஞனிடம் ரூபாய் ஒரு லட்சத்தைக் கொடுத்தால் அந்த இளைஞனால் ஒரு வருடத்தில் அந்த ஒரு லட்சத்தை இரண்டு லட்சமாக மாற்ற முடியும் என்று நம்புவோம்.

    அப்படியெனில் 10 இளைஞர்களிடம் 10 லட்சம் கொடுத்தால், ஒரு வருடத்திற்குள் அந்தப் பத்து லட்சம் இருபது லட்சமாக மாறிவிடும் அல்லவா?

    அப்படியெனில் 100 இளைஞர்களிடம் 1 கோடி ரூபாயைக் கொடுத்தால் அந்தப் பணம் 2 கோடிரூபாயாக மாறிவிடும். 1000 இளைஞர்களிடம் 10 கோடி ரூபாய் கொடுத்தால் 20 கோடி ரூபாயாக மாறிவிடும். 10000 இளைஞர்களிடம் 100 கோடி கொடுத்தால் அந்த 100 கோடி ரூபாய் 200 கோடி ரூபாயாக மாறிவிடும்.

    1 லட்சம் இளைஞர்களிடம் 1000  கோடி ரூபாயைக்  கொடுத்தால்  அந்த ஆயிரம் கோடி, 2000 கோடியாகிவிடும் அல்லவா?

    அதாவது நமது அரசாங்கம் ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்தால் 1 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும். அந்த ஆயிரம் கோடி ரூபாய் இரண்டாயிரம் கோடி ரூபாயாகப் பெருகும்.

    அந்த இரண்டாயிரம் கோடி ரூபாயிலிருந்து அந்த ஒரு லட்சம் இளைஞர்களுக்கு ஆண்டிற்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்தாலும், ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு அப்படியே இருக்கும்.

    ஒரு லட்சம் இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்காக  ஓராயிரம் கோடியை முதலீடு செய்ய அரசாங்கம் தயாராக இருந்தால் இளைஞர்கள் தங்கள் குடும்பத்தை காப்பாற்ற முடியும். தங்களுக்கு வேண்டிய வீட்டுப் பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும். ஆனால் அரசாங்கம் 1000 கோடி ரூபாயை இலவசங்களுக்காக முதலீடு செய்தால் என்ன நன்மை கிடைத்துவிடப் போகிறது.

    ஆண்டாண்டு காலமாக மக்கள் அடிமைகளாகவே இருக்க வேண்டும். இலவசத் திட்டங்களை எதிர்பார்த்துக் கொண்டு கையேந்தி இருக்க வேண்டும். இவர்களைச் சிந்திக்க விட்டுவிடக் கூடாது.இது தான் அரசியல்கட்சிகளின் திட்டம்.

    365 நாட்களும் ஓய்வில்லாமல் சம்பாதித்தாலும் சம்பாதிக்காவிட்டாலும் தேர்தல் நேரத்தில் கிடைக்கக் கூடிய ஒரு நாள் அரைநாள் சம்பளத்திற்கு ஈடான ஓட்டுக்குப் பணம் என்கிற அயோக்கியத்தனத்திற்கு மக்கள் உடந்தையாக இருக்கிறார்கள். தவறுக்கு உடந்தையானவர்களைக் கையாட்களாக வைத்துக் கொண்டுதான் அரசியல்கட்சிகள் தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்கின்றன.

    உள்ளாட்சித் தேர்தல்களிலும், வி.ஐ.பி தொகுதி தேர்தல்களிலும். இடைத்தேர்தல்களிலும் ஓட்டுக்குப் பணம் கொடுக்கப்பட்ட காலம் ஒன்று உண்டு. ஆனால் 2009 மக்களவைத் தேர்தலிலிருந்து தான் பொதுத் தேர்தல்களிலும் ஓட்டுக்குப் பணம் என்கிற அவமானத்திற்குரிய செயல் அரங்கேறி வருகிறது.

    65616 வாக்குச் சாவடிகள். ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 20க்கும் மேற்பட்ட தெருக்குள், சந்துக்கள். ஒரு தொகுதியில் குறைந்தபட்சம் 4000க்கும் மேற்பட்ட தெருக்கள் மறைவிடங்கள் உள்ளன. அத்தனை இடங்களுக்கும் தேர்தல் ஆணையத்தால் பறக்க முடியுமா?

    ஒரு தொகுதியில் 200 வாக்குச் சாவடிகள் இருக்கிறது என்றால் 200 பறக்கும் படையை நிறுவினாலும் பணப்பட்டுவாடைவைத் தடுக்க முடியாது. காரணம் என்ன? மக்கள் உடந்தையாக இருக்கிறார்கள். பணம் கொடுப்பவர்களைத் தட்டிக் கேட்கவேண்டியவர்கள். திருட்டுத் தனமாகப் பெற்றுக் கொள்கிறார்கள். தேர்தல் ஆணையத்தால் என்ன செய்ய முடியும்.

    பணநாயகத்தால் ஜனநாயகம் தோல்வியடைகிறது என்று சொல்கிறார்கள். உண்மை அதுவல்ல. ஜனநாயகத்தால் தான் பணநாயகம் வெற்றி பெறுகிறது. இதனால் தான் தந்தை பெரியார் சொன்னார். ஜனநாயகம் என்பது இந்த நாட்டை அரித்துக் கொண்டிருக்கும் நோய் என்று. மக்களை நோய் பிடித்தவர்கள் என்று அச்சப்படாமல் சுட்டிக்காட்டும் துணிச்சல் தந்தை பெரியாருக்கே இருந்தது. மூளைக்கு விலங்கிடப்பட்டவர்கள் மக்கள்.

    அவர் சொன்னதில் தவறென்ன இருக்கிறது,

    இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைத் தந்த அம்பேத்கரையும், தமிழகத்தில் கல்வி கண் திறந்த காமராசரையும், பேரறிஞர் அண்ணாவையும் தோற்கடித்தவர்கள் தானே இந்த மக்கள்.

    ஓட்டுக்குப் பணம் என்பதைச் சட்டம் போட்டுத் திருத்த முடியாது. பறக்கும் படைகளை வைத்துத் தடுக்க முடியாது.

    மக்களாகத் திருந்த வேண்டும். இந்திய விடுதலைக்காக எத்தனை பேர் உயிர் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். துப்பாக்கியால் சுட்டுத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.  அவர்களின் தியாகத்தை வாக்காளர்கள் நினைத்துப் பார்க்க வேண்டாமா?

    ஓட்டுக்குப் பணம் வாங்கிய வாக்காளர்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான். எந்தக் கட்சி உங்களுக்குப் பணம் கொடுத்ததோ அந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடக் கூடாது.

    வாக்காளர்களுக்குத் துணிச்சல் வர வேண்டும் என்றால், வ.உ.சி. செக்கிழுத்ததை நினைவில் கொண்டுவர வேண்டும். பகத்சிங் தூக்குக் கயிறை முத்தமிட்டதை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

    நமதான வாக்கு. நமக்கான எதிர்காலம். நன்மக்களாக முடிவெடுங்கள்.நல்லாட்சியை உருவாக்குங்கள்.

    கடைசிகட்டத்தில் மக்களின் மனநிலை மாறுமா? பணத்திற்கு ஓட்டு என்கிற அடிமைச் சிந்தனையை உடைத்தெறிவார்களா? எதிர்பார்ப்போம்.

    சி.சரவணன், 9976252800 senthamizhsaravanan@gmail.com

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai