Enable Javscript for better performance
வாக்குப்பதிவு: பதற்றமான பகுதிகளில் கூடுதல் துணை ராணுவப் படை பாதுகாப்பு திரைக் காட்சிகள் ரத்து- Dinamani

சுடச்சுட

    

    வாக்குப்பதிவு: பதற்றமான பகுதிகளில் கூடுதல் துணை ராணுவப் படை பாதுகாப்பு திரைக் காட்சிகள் ரத்து

    By dn  |   Published on : 15th May 2016 09:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வாக்குப்பதிவு நாளில் அசம்பாவிதங்கள் ஏற்படாதவாறு தடுக்க பதற்றமான பகுதிகளில் கூடுதல் துணை ராணுவப் படை பாதுகாப்பு போடப்படும் என்று மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான ஜவஹர் தெரிவித்தார்.

     புதுவை சட்டப்பேரவைக்கான தேர்தல் வாக்குப்பதிவு மே 16-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை புதுச்சேரி தேர்தல் துறை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கைகள் குறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி ஜவஹர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது:

     தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் எந்தெந்த வாக்குச்சாவடிக்கு எந்தெந்த வாக்குப்பதிவு அதிகாரிகள் செல்வது என குழுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஆணைகள் ஞாயிற்றுக்கிழமை காலை வழங்கப்படும். வாக்குச்சாவடிகளில் தலா 4 அதிகாரிகள் இருப்பார்கள். 1200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளில் கூடுதலாக ஒரு அதிகாரியும், விவிபாட் இயந்திரம் உள்ள வாக்குச்சாவடியில் கூடுதலாக ஒரு அதிகாரியும் இருப்பார்கள். நுண்பார்வையாளர்களை வாக்குச்சாவடிகளுக்கு பிரிக்கும் பணியும் முடிந்துள்ளது.

     உழவர்கரை வசந்தராஜா திரையரங்கில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளதால் ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி முதல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பிற திரையரங்குகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வாக்குப் பதிவு நாளில் காட்சிகள் திரையிடக்கூடாது. வாக்குப்பதிவு நாளில் புதுச்சேரி குடிமைப்பணி அதிகாரிகள் பகுதிவாரியாக மாஜிஸ்திரேட்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

     மாற்றுத்திறனாளிகள்: மாற்றுத்திறனாளிகளை வீடுகளில் இருந்து வாக்குப்பதிவு மையத்துக்கு அழைத்து வர உதவ வேண்டும் என 250 பேர் கோரியுள்ளனர். அவர்களுக்காக 250 சக்கர நாற்காலிகள் தயார் நிலையில் உள்ளன. மேலும் இந்த பணியை மேற்கொள்ள 960 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்காக தொகுதிக்கு ஒரு வாகனம் ஒதுக்கப்பட்டுள்ளது.

     இதுவரை 93.32 சதவீதம் பேருக்கு பூத் ஸ்லிப்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. பூத் ஸ்லிப் பெறாதவர்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் கூடுதலாக ஒரு அடையாள அட்டையை கொண்டுவர வேண்டும்.

     தபால் வாக்கு செலுத்த தகுதியுடைய 8422 பேரில் 6008 பேர் தபால் வாக்குகள் செலுத்தியுள்ளனர். இது 71 சதவீதமாகும். வாக்குகள் எண்ணும் நாள் வரையில் தபால் வாக்குகளை அனுப்பலாம்.

     இதுவரை ரூ. 6.02 கோடி பறிமுதல் செய்யப்பட்டதில், ஆவணங்களை சரிபார்த்து ரூ. 4 கோடி திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை வருமான வரித்துறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் சனிக்கிழமையன்று நெல்லித்தோப்பில் ரூ. 20 ஆயிரம், மடுகரையில் ரூ. 1.10 லட்சம், கருவடிக்குப்பத்தில் ரூ. 1 லட்சம், ஆராய்ச்சிக்குப்பத்தில் ரூ. 2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

     கூடுதல் பாதுகாப்பு: புதுவையில் 226 வாக்குச்சவாடி மையங்கள் தொடர்புடைய 126 பகுதிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் கூடுதலாக துணை ராணுவப் படை பாதுகாப்பு போடப்படும். புதுவையில் 320 பார்கள், 100 சாராயக்கடைகள், 50 மதுபான சேமிப்புக் கிடங்குகளுக்கு முன்னெச்சரிக்கையாக சீல் வைக்கப்பட்டுள்ளன.

     வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் சுமார் 7 பேரை நேரடியாக தொடர்பு கொண்டுள்ளோம் என்றார் ஜவஹர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai