புதன்கிழமை 19 டிசம்பர் 2018

மண்ணில் நைட்ரஜன் சத்தை அதிகரிக்க உதவும் கோடை உழவு!

Published: 05th April 2018 12:47 AM

திருநெல்வேலி: கோடை உழவின் மூலம் மண்ணில் நைட்ரஜன் சத்தை அதிகரிக்கலாம் என, வேளாண் துறையினர் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக வேளாண் துறை அதிகாரிகள் கூறியது: வடகிழக்குப் பருவ மழைக்குப் பின்னர் ஒருபோக நெல் சாகுபடி தாமிரவருணி பாசனப் பகுதிகளிலும், குளத்துப் பாசனப் பகுதிகளிலும் முடிந்துள்ளன. இப்போது எந்தவொரு கால்வாயிலும் நீர்வரத்து இருக்காது. இதைப் பயன்படுத்தி கோடை உழவு செய்ய வேண்டியது மிகவும் அவசியம். கோடைஉழவால் மண்வளம் அதிகரிக்கும். மழைநீரால் கிடைக்கும் நைட்ரஜன் சக்தி மண்ணில் நிலைப்படுத்தப்படும். அடுத்த சாகுபடிக்கான உரத் தேவையைக் குறைக்கும். நீரை நிலத்தில் தக்க வைக்கும். பூச்சித் தொல்லையைக் குறைக்கும். களைகள் பெருமளவு கட்டுப்படுத்தப்படும்.
முன்பருவ விதைப்புக்கேற்ற சூழல் உருவாகும். ஏற்கெனவே உழுத வயலில் மறு உழவு செய்து விதைப்பது சுலபமாகி, அடிமண் இறுக்கம் நீங்கி, நீர்கொள்திறன் கூடி, விளைச்சல் அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கோடை உழவால் மண்ணுக்கு கடியில் காணப்படும் கூட்டுப்புழுக்கள் மேற்பரப்பில் தள்ளப்பட்டு பறவைகளுக்கு இரையாக்கப்படுவதுடன், வெயிலில் செத்து மடிகின்றன. களைகளின் வேர்ப்பகுதி களையப்பட்டு முளைப்புத்திறன் வெகுவாக குறைக்கப்படுகிறது.
கோடை உழவு செய்யப்படாத வயல்களில் மேல் மண் அரிமானம் ஏற்படுவதோடு மண்ணிலுள்ள ஊட்டங்களும் விரயமாகும். கோடை உழவில் மண்ணரிப்பு தடுக்கப்பட்டு வயல்களிலேயே மழைநீர் சேகரிக்கப்படுவதால் நிலப்பரப்பின் கீழ் ஈரப்பதம் காத்து பூச்சிகள், பூஞ்சாணங்கள் கட்டுப்படுத்தப்படும்.
உழவுக் கருவிகள்: உழவுக் கருவிகள் அவற்றின் பயன்பாட்டைப் பொருத்து பல வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மேல்மட்ட மண்ணைத் திறந்து இளக்கமாக மாற்றுவது கலப்பைகள். இவை பொதுவாக முதன்மை உழவுக்குப் பயன்படுகின்றன. மரத்தாலானவை, இரும்பு அல்லது மண் புரட்டும் கலப்பை, சிறப்பு கலப்பை என கலப்பைகள் 3 வகைப்படும்.
1. நாட்டுக் கலப்பை என்பது இரும்புக் கொழுமுனையுடன் மரத்தால் செய்யப்பட்டது. இது உடற்பகுதி, தண்டுப்பகுதி, கைப்பிடி என 3 பகுதிகளை உள்ளடக்கியது. இது எருதுகளைக் கொண்டு உழுவதற்கு பயன்படுகிறது. இது மண்ணைப் புரட்டாமல் உழுகிறது. உழுதல் முழுமையாக இருக்காது, ஏனென்றால் சில நேரம் இரண்டு சால்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இருக்கும் வரிசையில் விட்டுப்போக வாய்ப்பு உள்ளது. குறுக்கு உழவால் இதுபோன்று ஏற்படாமல் தடுக்கலாம். இருந்தபோதும் சிறிய சதுரப் பரப்புகள் விட்டுப்போக வாய்ப்பு உள்ளது.
2. மண் புரட்டும் கலப்பை இரும்பாலானது. ஒன்று அல்லது இரண்டு ஜோடி மாடுகளைக் கொண்டு உழுவதற்கு பயன்படுகிறது. மாடுகளின் எண்ணிக்கை மண்ணின் தன்மையைப் பொருத்து இக்கலப்பை டிராக்டர் கொண்டு உழுவதற்கு ஏற்றது. வளைப்பலகை, கொழுமுனை, சால் சுவரின் மீது செல்லும் பாகம் (நிலப்பக்கப் பகுதி) இணைக்கும் தண்டு இணைப்புச் சட்டம், பிராக்கட், கைப்பிடி போன்ற பாகங்களை வளைப்பலகைக் கலப்பை கொண்டுள்ளது. இவ்வகைக் கலப்பையில் சால்கள் நேர்த்தியாக அமைவதோடு நன்றாக மண் புரட்டப்படும். அனைத்துப் பகுதியும் உழப்படும். மாடுகளால் உழுவதற்கு பயன்படுத்தப்படும் வளைப்பலகை கலப்பை சிறியதாக 15 செ.மீ. ஆழம் வரை உழக்கூடியதாக இருக்கும். டிராக்டரில் இணைக்கப்படும் வளைப்பலகை கலப்பை 2 கலப்பைகளை கொண்டது மற்றும் இது 25 முதல் 30 செ.மீ. ஆழம் வரை உழும் தன்மை கொண்டது.
சட்டிக் கலப்பை பொதுவாக பயன்படுத்தப்படும் வளைப் பலகைக் கலப்பையை சிறிது ஒத்துள்ளது. உருளக்கூடிய பெரிய குழிவான சட்டிக் கலப்பை வளைப்பலகைக் கலப்பையில் உள்ள கொழுமுனை, வளைப்பலகைக்கு பதிலாக பொருத்தப்பட்டுள்ளது. சட்டிக் கலப்பை வயலில் உள்ள மண்ணை நன்றாக அள்ளி ஒருபக்கமாக புரட்டுகிறது. பொதுவாக சட்டிக் கலப்பை 60 செ.மீ. விட்டம் கொண்டது, இது 30-35 செ.மீ. அளவான மண்ணை திருப்பக்கூடியது. பொதுவாக அதிக களையுள்ள வயல்களில் பயன்படுத்தப்படுகிறது. ஏனென்றால் சட்டிக்கலப்பை களைகளை நன்றாக வெட்டி மண்ணுடன் கலக்கச்செய்கிறது. சட்டிக் கலப்பை கற்கள் அற்ற நிலையில் நன்றாக உழும். வளைப்பலகை கலப்பையில் உள்ளதுபோன்று இதில் மண் கட்டிகளை தனியாக உடைக்கத் தேவையில்லை.
திருப்பிப்போடும் கலப்பை அல்லது ஒருவழிக் கலப்பையில் அடிப்பகுதி வளைப்பலகைக் கலப்பையில் இருப்பதுபோல இணைக்கப்பட்டிருக்கும். கொழுமுனை இடது புறத்தில் திருப்பியவாறு இணைக்கப்பட்டிருக்கும். இவ்வகை அமைப்பு மேடான நிலத்தில் திருப்பிப் போட்டவாறு உழ உதவுகிறது. எனினும் இவ்வகை கலப்பை ஒருபக்கமாகவே மண்ணைத் திருப்பி போட்டு உழுகிறது.
3. சிறப்புக் கலப்பைகள்: ஆழக் கலப்பைகள் கடின மண் தட்டுகளை மண் மேற்பரப்புக்குக் கொண்டுவராமல் உடைக்க ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆழக்கலப்பையின் ஒருங்கிணைக்கும் பகுதி 'வி' வடிவில் குறுகியும் கொழுமுனை அகன்றும் காணப்படுவதால் ஆழப்பகுதியில் உள்ள கடின மண்ணை உடைக்கும். அதேநேரம் மண்ணில் குறைவான உழவே இருக்கும்.
உளிக்கலப்பை கடின அடி மண்ணை உடைக்கவும். ஆழமான உழவிற்கும் (60-70 செ.மீ.) அதே சமயம் குறைவான மேற்பரப்பு மண் பாதிப்புடன் உழுவதற்கு பயன்படுகிறது. உளிக் கலப்பையின் இணைப்புப் பகுதி (உடற்பகுதி) மிகச் சிறியதாகவும், மாற்றி அமைக்கும் கொழுமுனைகளைக் கொண்டதாகவும், இருப்பதினால் மண் மேற்பரப்பில் மிகக் குறைவான பாதிப்பே ஏற்படுகிறது. இவ்வகைக் கலப்பையில் மாற்றி அமைக்கக்கூடிய கொழு முனை இருப்பதினால், மேற்பரப்பில் உழுவதற்கு ஏற்றவாறு அமைகிறது.
சால் கலப்பையில் இரண்டு வளைப் பலகைகள் காணப்படுகின்றன. அவற்றில் ஒன்று மண்ணை வலப்புறமாக தள்ளுகிறது. மற்றொரு பலகை, மண்ணை இடப்புறமாக புரட்டுகிறது. இரண்டு வளைப்பலகைக்கும் கொழு முனை பொதுவாக காணப்படுகிறது. இரண்டு சால் கலப்பைகள் 150 செ.மீ இடைவெளிக் கொண்டதாக இணைக்கப்படும்போது அகன்ற சால் மற்றும் வரப்புகளை அமைக்க உதவுகிறது.
சுழல்கலப்பை என்பது மண்ணைப் பிளந்து கட்டிகளை உடைக்கிறது. மண்ணைப் பிளக்க கத்திபோன்ற கொழுமுனைகள் பயன்படுகின்றன. இவ்வகை கலப்பை 12 முதல் 15 செ.மீ. ஆழம் வரை உழும். இது இளகிய மண்ணுக்கு ஏற்றது. குழிப்படுக்கை அமைக்கும் கருவி ஒன்று அல்லது இரண்டு வளைப்பலகைகள் அல்லது கொழுக்களைக் கொண்ட ஒரு கனமான கருவி. இவ்வகைக் கொழுக்கள் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இக்கருவி ஒருமுகப்படுத்தப்பட்ட சால்கள் அமைக்க (சிறிய நீர்த் தேக்கம், பாத்திகளைக் கொண்டது) உதவுகிறது. இவ்வகைப் பாத்தி மழைக்காலங்களில் மழைநீர் வீணாவதைத் தடுப்பதுடன், குறைவான மழையுள்ள பகுதிகளில் மழை நீரை கிரகிக்க உதவுகிறது.
மேலோட்ட உழவுக்குத் தேவைப்படும் செயல்களான விதைப் படுக்கை தயாரித்தல், விதைகளை மூடுதல், களைகளைக் களைய போன்றவற்றுக்கு பலுகு கலப்பைகள் பயன்படுகின்றன. 
பலுகு கலப்பை 2 வகைப்படும். 
1. சட்டிப்பலுகு கலப்பை 45 முதல் 55 செ.மீ. விட்டம் கொண்ட குழிவான தட்டுகளைக் கொண்டது. இத்தட்டுகள் சட்டிக் கலப்பையின் தட்டுகளைவிட சிறியது. ஆனால், அதிக எண்ணிக்கையில் காணப்படும் இத்தட்டுகள் சக்கரம் சுழலும் அச்சில், 15 செ.மீ. இடைவெளிகளில் இணைக்கப்பட்டுள்ளன. 2 ஜோடி, தொகுதி தட்டுகள், இரு அச்சுகளில் இணைக்கப்பட்டிருக்கும். அனைத்துத் தட்டுகளும் அச்சை மையமாகக் கொண்டே சுழலும். இத்தட்டுகள் மண்ணை உழுது, மண் கட்டிகளை செவ்வனே உடைக்கும்.
2. கத்திப்பலுகு கலப்பை தாள், களைகளை நீக்க, மேலோட்ட மண் கட்டிகளை உடைக்க, விதைகளை மூட, ஊடுபயிர் உழவுக்கு, நிலக்கடலை அறுவடைக்கு என பல்வேறு செயல்களுக்கு உதவுகிறது.
தமிழக வேளாண் துறை சார்பில் கோடை உழவு, கலப்பைகளின் விவரங்கள் குறித்த பல்வேறு பயிற்சி வகுப்புகள் உள்ளன. மேலும் விவரங்களுக்கு அருகேயுள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகலாம்.
 

More from the section

பசுந்தீவன பயிர்களின்: வகைகளும் வளர்ப்பு முறைகளும்
மழை வெள்ளத்தால் பாதிப்பு: நெற்பயிர்களைப் பாதுகாக்கும் தொழில்நுட்பங்கள்
கோடையில் அதிக லாபம் தரும் தர்பூசணி
புதிய தொழில்நுட்பத்தில் உளுந்து சாகுபடி
எள் பயிரிட்டால் கூடுதல் லாபம்!