புதன்கிழமை 20 பிப்ரவரி 2019

மருத்துவ குணங்கள் கொண்ட நெல் ரகங்கள்!

Published: 16th August 2018 12:51 AM


நாமக்கல்: மருத்துவக் குணங்களைக் கொண்ட நெல் ரகங்களைச் சாகுபடி செய்து மக்களின் நோயற்ற வாழ்வுக்கு விவசாயிகள் உதவலாம் என வேளாண் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். 
நாமக்கல் பிஜிபி வேளாண் கல்லூரி முதல்வர் சி.ஸ்ரீதரன், உதவிப் பேராசிரியர் ப.சவிதா, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகப் பேராசிரியர் ரா.உஷாகுமாரி ஆகியோர் தெரிவித்தது:
இந்தியாவின் உணவு உற்பத்தியானது பன்மடங்கு அதிகரித்துள்ளது. நெல் விளைச்சலில் சீனாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. தற்போது பயிர் இனப்பெருக்கத் துறை மற்றும் உயிரியல் தொழில்நுட்பத் துறை இரண்டும் இணைந்து புதிய உத்திகளைக் கையாண்டு, அதிக ஊட்டச் சத்துகளையும், மருத்துவத் தன்மைகளையும் கொண்ட பாரம்பரிய நெல் ரகங்களையும் பயன்படுத்தி, புதிய பண்புகளைக் கொண்ட கலப்பினங்களைக் கண்டறிவதில் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளது.
மருத்துவ நெல்லின் தன்மைகள்: இந்தியாவின் பெரும்பகுதி மக்களின் வாழ்க்கை முறை வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டது. மேலும், இந்தியாவில் பெரும்பாலும் கோதுமைக்கு அடுத்தபடியாக அரிசியே உணவாக உள்கொள்ளப்படுகிறது. நவீன வேளாண்மை காரணமாக நெல் ரகங்களில் குட்டை ரகங்களும், அதிக கஞ்சித்தன்மையும் மற்றும் வைட்டமின் ஏ போன்ற தன்மைகளும் உள்புகுத்தப்பட்டுள்ளன. 
வகைகள் மற்றும் பயன்கள்: நவாரா நெல்' பேதி மற்றும் நீரிழிவு நோய்க்கும், குடல் புண்ணுக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. நவாரா அரிசி மாவை நன்கு கலந்து பருகும்போது தாய்ப்பாலின் சுரப்புத்தன்மை அதிகரிக்கிறது.
சிவப்பு நெல்' வாந்தி மற்றும் பேதிக்கு மருந்தாகப் பயன்படுகிறது. கஞ்சி நெல்' மஞ்சள்காமாலை நோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது. வரி நெல்' சின்னம்மைக்கு மருந்தாகப் பயன்படுகிறது.
நவாரா மருத்துவ அரிசி இனத்தில் இரும்பு, துத்தநாகம் மற்றும் கால்சியம், கவுனி அரிசி'யில் அதிகளவு புரதச்சத்து மற்றும் கால்சியமும், காத்த நெல்'லில் அதிகளவு மெக்னிசியம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் செயல்பாடும், வீரதங்கன் நெல்'லில் அதிகளவு இரும்பு, துத்தநாகம் ஆகியவை உள்ளன என ஆராய்ச்சியின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆன்டிஆக்ஸிடன்ட் பண்பானது பலவிதமான மனித நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது என பேராசிரியர்கள் கூறினர்.
இத்தகைய மருத்துவத் தன்மை கொண்ட பழங்கால நெல் ரகங்களை நடைமுறை வேளாண்மையில் பயிரிடப்படும் அரிசி ரகங்களுடன் கலப்பினம் செய்யும்போது, அதிக மருத்துவத் தன்மையும், உயிர்ச் சத்துகளும் அதிகப்படுத்தப்படுகின்றன. இத்துடன் மருத்துவத்தன்மையும் தக்கவைக்கப்படுகின்றன. இதன் வாயிலாக பல்வேறு விதமான நோய்களுக்கு அரிசியையே மருந்தாகப் பயன்படுத்தலாம். 
கேரளம் முதலிடம்: மருத்துவ அரிசி சாகுபடியில் கேரள மாநிலம் முதன்மை நிலை வகிக்கிறது. இந்த அரிசியின் நன்மையைக் கருதி, மற்ற மாநிலங்களிலும் இந்த அரிசி வகைகளை பரவலாகப் பயிரிடுதல் அதிகரித்துள்ளது. பல்வேறு விதமான நோய்களுக்கு எதிர்ப்புத் தன்மையும் அதிக விளைச்சலும் கொண்ட ரகங்கள் தேர்வு செய்யப்பட்டு பயிரிடப்படுவதால், பொருளாதார முன்னேற்றத்தில் மருத்துவ அரிசியின் பயன்பாடு அதிகமாக உள்ளது.

More from the section

4 பட்டங்களுக்கும் ஏற்ற சூரியகாந்தி!
சின்ன வெங்காயம் லாபம் கொடுக்குமா?
வேளாண்மைத் துறைக்கு ரூ.10,551 கோடி
பாரம்பரிய அரிசி ரகங்களில் கலப்பினங்கள் அறிமுகம்
படைப்புழுக்களில் இருந்து மக்காச்சோளப் பயிரை காக்க...