சனிக்கிழமை 23 மார்ச் 2019

நெல் அறுவடைக்குப் பின் பலன்தரும் பருத்தி சாகுபடி

Published: 21st February 2019 01:19 AMநீடாமங்கலம்: சம்பா நெல் அறுவடைக்குப் பின், பயிர் சுழற்சி முறையாக விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக, திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டார  வேளாண்மை உதவி இயக்குநர் பாலசுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மண் வளத்தைப் பாதுகாக்கவும் பயிர் சுழற்சி முறையில் மண்ணில் உள்ள சத்துகளை சமநிலைப்படுத்தவும், மண் வளத்தை மேம்படுத்தவும், தற்போது நெல் அறுவடைக்குப் பின்னர் பணப் பயிரான பருத்தியை சாகுபடி செய்யலாம்.
அதன்படி, நடப்புப் பருவத்தில் நெல் அறுவடைக்குப் பிறகு, மண் மெழுகு பதத்தில் இருக்கும்போது வரிசைக்கு வரிசை இடைவெளி 3 அடியாகவும் செடிக்குச் செடி ஓர் அடியாகவும் வைத்து குச்சி ஒன்றின் உதவியுடன் துளையிட்டு, அதில் விதை நேர்த்தி செய்யப்பட்ட ஒன்று அல்லது இரண்டு பருத்தி விதையை வைத்து, ஆற்று மணல் கொண்டு மூடி  தண்ணீர் இட வேண்டும்.
15-ஆம் நாள் களைக் கொத்தியால் களையெடுத்த பின்பு, உரம் வைத்து செடிக்கு ஒருபுறம் மட்டும் மண் அணைத்த பின் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
பருத்தியை தனிப் பயிராக பயிரிடுவதற்கு கீழ்க்கண்ட வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்:  
விதையளவு- எம்சியு-7 மற்றும் எஸ்விபிஆர்-3 பஞ்சுடன் 15 கிலோ (அ) பஞ்சு நீக்கியது 7.5. நிலத்தை நன்றாக உழுது பயன்படுத்தவேண்டும். குறைந்த ஆழத்தில் மண் கடின அடுக்கு இருந்தால் கத்தி கலப்பைக் கொண்டு 0.5 செ.மீ. இடைவெளியில் ஒரு திசையில் உழ வேண்டும். பின்னர் அதற்கு நேர் செங்குத்தான திசையில் உழ வேண்டும். மண் நன்கு பொடியாகும் படி உழுத பின்னர் ஹெக்டேருக்கு வேப்பம் புண்ணாக்கு 250 கிலோ இட வேண்டும். இதன் மூலம் கூன் வண்டு தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.
இயற்கை உரமிடல்: ஒர் ஹெக்டேருக்கு பண்ணை தொழுஉரம் 12.5 டன் (அ) மக்கிய உரம் (அ) மண்புழு உரம் 2.5 டன் இதில் ஏதாவது ஒன்றை உழுவதற்கு முன் மண்ணின் மீது பரப்பி உழவு செய்ய வேண்டும். அசோபாஸ் 2 கிலோ (அ) அசோஸ்பைரில்லம், பாஸ்பரஸ் கரையக்கூடிய பாக்டீரியா இளஞ்சிவப்பு நிறமுடைய நிலைமாறும் மெத்திலோடிராபிக் ஹெக்டேருக்கு 2.2 கிலோ அடியுரமாக இட வேண்டும்.
விதை நேர்த்தி: பருத்தியை விதை நேர்த்தி செய்வதன் மூலம் பருத்தியின் மேற்பரப்பில் உள்ள தூசுகள், பூச்சி நோய் கிருமிகள் ஆகியவை அழிக்கப்படுவதுடன், விதையுறை மிருதுவாக்கப்பட்டு முளைப்புத் திறனை அதிகரிக்கச் செய்கிறது. ஒரு கிலோ விதைக்கு 100 மி.லி. 70 சதவீத வணிக கந்தக அமிலத்தைப் பயன்படுத்தி, அமில நேர்த்தி செய்ய வேண்டும். விதைநேர்த்தி செய்ய பிளாஸ்டிக் (அ) கண்ணாடி பாத்திரத்தை மட்டும் பயன்படுத்த வேண்டும். உலோகப் பாத்திரத்தை பயன்படுத்தக் கூடாது.
ஒரு கிலோ விதைக்கு 100 மிலி அமிலத்தை ஊற்ற வேண்டும். அதை கண்ணாடி (அ) மரக்குச்சியால் 4 நிமிடங்கள் நன்கு கலக்கவேண்டும்.பிறகு வேறு பக்கெட்டில் நீர் நிரப்பி, அமில நேர்த்தி செய்த விதைகளை அலசி விட்டு, நிழலில் உலர்த்தி சேகரிக்க வேண்டும்.
பார்கள் அமைத்தல்: ரகங்களுக்கு ஏற்ற இடைவெளியில் 6-40 இடைவெளியில் பார்கள் அமைக்க வேண்டும். இதற்கு இடையிடையே நீர் பாய்ச்சுவதற்கு வாய்க்கால்கள் அமைக்கவும்.
மேல் உரமிடல்: 45-ஆவது நாளில் மண் பரிசோதனைப்படி மேலுரமிட வேண்டும். இல்லையெனில் ஏக்கருக்கு 8 கிலோ தழைச்சத்து தரவல்ல உரத்தை மண்ணில் ஈரம் இருக்கும்போது இட்டு மண் அணைக்க வேண்டும். வீரிய ஒட்டு ரகங்களுக்கு நடவு செய்த 45 மற்றும் 65-ஆவது  நாளில் முறையே 16 கிலோ தழைச்சத்து தரவல்ல உரத்தை இட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
 

More from the section

அசோலா கால்நடை தீவனம்: உற்பத்தியும், பயன்களும்
பருத்தியில் மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த வழிமுறைகள்
மலர் சாகுபடியை பெருக்கும் வழிமுறை!
தக்காளி சாகுபடி தொழில்நுட்பங்கள்
பழைய  மஞ்சளுக்கு உரிய விலை கிடைக்காதது ஏன்?