சனிக்கிழமை 23 மார்ச் 2019

மா மரங்களில் பூப்பிடிக்கும் பருவத்தில் தத்துப்பூச்சிகளை  கட்டுப்படுத்தும் முறைகள்

Published: 21st February 2019 01:18 AM


திருவள்ளூர்: முக்கனிகளில் முதல் கனியான மாம்பழங்களைத் தரும் மாமரங்களில் தற்போது பூப்பிடிக்கிற பருவம்.  இக்காலகட்டத்தில் பூங்கொத்துகளைத் தாக்கும் புழுக்கள், தத்துப்பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பை விவசாயிகள் கடைப்பிடிப்பது அவசியம் என தோட்டக்கலைத் துறை அறிவுறுத்துகிறது. 
   திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போது 1.35 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் மானாவாரி பயிர் சாகுபடி நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் நெற்பயிருக்கு அடுத்தபடியாக தோட்டக்கலைப் பயிரான மா, பலா, தென்னை, எலுமிச்சை, சப்போட்டா, இலந்தை, ஆரஞ்சு பழ வகை மரங்கள் 18,500 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் குறிப்பாக திருவள்ளூரை சுற்றியுள்ள பாப்பரம்பாக்கம், குத்தம்பாக்கம், கூடப்பாக்கம், கடம்பத்தூர், மப்பேடு, வயலாநல்லூர், பூண்டி, புல்லரம்பாக்கம், திருத்தணி, பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை சுற்று வட்டாரப் பகுதிகளில் மா சாகுபடி மட்டும் 11,506 ஹெக்டேரில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிலும், மாவில் நீலம், பங்கனப்பள்ளி, அல்போன்சா மற்றும் இந்த மாவட்டத்துக்கான சிறப்பு ரகமான சவ்வாரி ரக மா வகைகளை ஆர்வத்துடன் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
பூப்பிடிக்கும் பருவம்...:  தை, மாசி மாதங்கள்தான் மா மரங்களில் பூப் பிடிக்கும் பருவமாகும். ஆரம்ப கட்டங்களில் மாமரங்களில் பயிர் பாதுகாப்பு என்பது மிகவும் அவசியம். நன்கு பராமரித்தால் மட்டுமே சாகுபடியை அதிகரிக்க முடியும். இதுபோன்ற பூக்கள் பூக்கும் நேரத்தில் தத்துப்பூச்சி, பூங்கொத்துப் புழு, இலைச் சுருட்டுப்புழு, தண்டு துளைப்பான், இலைப்புள்ளி போன்ற பல்வேறு நோய்கள் மற்றும் பூச்சிகள் தாக்குதல் கூடுதலாக இருக்கும். இதுபோன்ற நேரத்தில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் மா சாகுபடி பாதிக்கப்படும். எனவே ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றி,  தத்துப்பூச்சி தாக்குதலை விவசாயிகள் கட்டுப்படுத்த வேண்டும். 
தத்துப்பூச்சிகளைக் கண்டறிதல்...: மா இலையில் எண்ணெய் பசை போன்று பளபளப்பாக இருந்தால், அந்த இலைக்கு மேல் உள்ள பூங்கொத்துகளை தத்துப்பூச்சிகள் தாக்கியுள்ளதை அறிந்து கொள்ளலாம். இவை மா இலைக் குருத்துகள் மற்றும் பூங்கொத்துக்களில் உள்ள சாறை உறிஞ்சிவிடும். இதனால் பூங்கொத்துகள் வலுவிழந்து பூ மொட்டுகள் உதிரும். இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் அந்தப் பகுதிகளை கவாத்து செய்து அதை அகற்றி மாமரங்களைப் பாதுகாக்க வேண்டும்.
கட்டுப்படுத்தும் வழிமுறைகள்...: இந்த நோயை கட்டுப்படுத்த பாசலோன் 35 இசி மருந்தை, ஹெக்டேருக்கு 1.5 மி.லி. எடுத்து மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருடன் கலந்து கிளைகள், தண்டுகள், மரத்தின் இலைகள் ஆகியவற்றில் தெளிப்பான் மூலம் நன்கு படும் வகையில் தெளிக்க வேண்டும். இதை மாலை நேரங்களில் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். 
அதேபோல், கார்பரில் 50 சதவீதம், நனையும் கந்தகம் ஆகியவற்றை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிப்பதும் நல்ல பயனைத் தரும். மேலும், பூப்பிடிக்கும் பருவம் என்பதால் பூங்கொத்துப் புழு தாக்குதலும் அதிகமிருக்கும். இதைக் கட்டுப்படுத்த பாசலோன் 2 மில்லி மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.   
தண்டு துளைப்பான் தாக்குதல்: இதேபோல் தண்டு துளைப்பான் நோய் தாக்குதல் இருந்தால் தரை மட்டம் முதல் ஒரு மீட்டர் வரை மரப்பட்டையை ப வடிவில் செதுக்க வேண்டும். அதற்கு இடையில் நனைந்த பஞ்சை வைத்து மானோகுரோட்டாபாஸ் 10 மில்லி மருந்தை பஞ்சு நனையும் வரையில் வைத்து பின்பு பட்டையை மரத்தோடு பொருத்தி, ஈரக் களிமண்ணால் மூட வேண்டும். அதேபோல், இலைப்புள்ளித் தாக்குதல் இருந்தால் மாங்கோசெப் 2 கிராம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம் அல்லது கார்பென்டாசிம் ஒரு கிராமை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். அல்லது க்ளோரதலேனில் 2 கிராம் எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து பிஞ்சுப் பருவத்தில் தெளித்து மா வகைகளைப் பாதுகாக்க வேண்டும். இதுபோன்ற ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையைப் பின்பற்றி மா சாகுபடியை விவசாயிகள் அதிகரித்துக் கொள்ளலாம்.

More from the section

அசோலா கால்நடை தீவனம்: உற்பத்தியும், பயன்களும்
பருத்தியில் மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த வழிமுறைகள்
மலர் சாகுபடியை பெருக்கும் வழிமுறை!
தக்காளி சாகுபடி தொழில்நுட்பங்கள்
பழைய  மஞ்சளுக்கு உரிய விலை கிடைக்காதது ஏன்?