வெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019

நெற்பயிரில் இலைச்சுருட்டு புழு தாக்குதலை கட்டுப்படுத்த...

Published: 03rd January 2019 12:46 AMநீடாமங்கலம்: இலைச்சுருட்டுப் புழு தாக்குதலில் இருந்து நெற்பயிரைப் பாதுகாக்க கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆ. பாஸ்கரன், பூச்சியியல்துறை உதவிப் பேராசிரியர் ராஜா. ரமேஷ், விரிவாக்கத்துறை உதவிப் பேராசிரியர் மு. ராமசுப்ரமணியன், மண்ணியல் துறை உதவிப் பேராசிரியர் அ. அனுராதா ஆகியோர் கூறியது:
நெற்பயிரில் தோகைப்பூச்சி அல்லது வெள்ளைப் பூச்சி என்கிற இலைச்சுருட்டுப் புழுவின் சேதத்தால் இலைகள் நீளவாக்கில் மடங்கி, பட்டுப் போன்ற மெல்லிய இழைகளால் இணைக்கப்பட்டிருக்கும். புழுக்கள் சுருட்டப்பட்ட இலைக்குள்ளே இருந்து கொண்டு இலைகளின் பச்சையத்தை சுரண்டித் தின்பதால் தாக்கப்பட்ட இலைகளின் பல இடங்களில் வெள்ளையான சருகு போன்று காணப்படும். மேலும் மடக்கப்பட்ட இலைக்குள்ளே புழுக்களின் கழிவுகளும் காணப்படும். அதிக அளவில் தழைச்சத்து இடுதல் மற்றும் வரப்பு ஓரங்களில் இதன் தாக்குதல் அதிகளவில் காணப்படும். மேலும், மிதமான வெப்ப நிலையைக் கொண்ட அக்டோபர் முதல் ஜனவரி மாதம் வரை இதன் தாக்குதல் மிகுந்து காணப்படும்.
இலைச்சுருட்டுப் புழுவைக் கட்டுப்படுத்த விளக்குப்பொறியை இரவு நேரங்களில் 5 ஏக்கருக்கு ஒன்று என்ற அளவில், பயிர் பரப்பிலிருந்து 20 அடி தூரம் தள்ளி வைத்து, வளர்ச்சியடைந்த அந்துப்பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம். நெற்பயிரை அதிக இடைவெளியில் நடும்போது இதன் தாக்குதல் குறைந்து காணப்படும். டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் என்ற முட்டை ஒட்டுண்ணியை ஏக்கர் ஒன்றுக்கு 2 சிசி அதாவது 40,000 முட்டைகள் என்ற அளவில் நடவு நட்ட 37, 44 மற்றும் 51-ஆவது நாள்களில் வயலில் வெளியிட வேண்டும்.
தழைச்சத்து உரமான யூரியாவை இலை வண்ண அட்டையைப் பயன்படுத்தி போதுமான அளவில் அல்லது 3 முறையாக பிரித்து வேப்பம் புண்ணாக்குடன் கலந்து இட வேண்டும். நெல் வயலில் காணப்படும் நன்மை செய்யும் பூச்சிகளான தரை வண்டு, தரைநீள்வண்டு ஆகியவை இலைச்சுருட்டுப் புழுக்களையும், சிலந்திகள் இலைச்சுருட்டுப்புழுவின் வளர்ந்த அந்துப் பூச்சிகளையும் உண்டு அழிப்பதால் அவற்றை பாதுகாத்துப் பெருக்க வேண்டும்.
தாவர பூச்சிக்கொல்லிகளான வேப்பெண்ணெய் சார்ந்த அசடிராக்டின் 0.03 சதவீத மருந்தை ஏக்கருக்கு 400 மில்லி அல்லது வேப்பங்கொட்டைக் கரைசல் 5 சதவீதம் என்ற அளவில், ஒட்டும் திரவத்துடன் கலந்து ஏக்கர் ஒன்றுக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.
இலைச்சுருட்டுப் புழுவால் ஒரு குத்துக்கு இரண்டு இலைகள் முழுவதும் சேதமடைந்திருந்தால், பொருளாதார சேத நிலையைக் கடந்துவிடுவதால் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளான ஃப்ளுபென்டியாமைட் 39.35 எஸ்.சி. - 20 மில்லி, ஃப்ளுபென்டியாமைட் 20 டபிள்யூ. ஜி. -50 கிராம், கார்டாப் ஹைட்ரோகுளோரைடு 50 எஸ்.பி. - 400 கிராம், குளோரன்ட்ரான்லிபுரோல் 18.5 எஸ்.சி. - 60 மில்லி, குளோரன்ட்ரான்லிபுரோல் 4ஜி - 4 கிலோ, புரபினோபாஸ் 50ஈ.சி. - 400 மில்லி, குளோர்பைரிபாஸ் 20ஈ.சி.- 500 மில்லி இவற்றில் ஏதாவது ஒன்றை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து காலை அல்லது மாலை வேளைகளில் கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் இலைச்சுருட்டுப் புழு தாக்குதலிலிருந்து நெற்பயிரைப் பாதுகாக்கலாம் 
என்றனர்.
 

More from the section

நெல் அறுவடைக்குப் பின் பலன்தரும் பருத்தி சாகுபடி
வறட்சியிலிருந்து பயிர்களை காக்க...!
மா மரங்களில் பூப்பிடிக்கும் பருவத்தில் தத்துப்பூச்சிகளை  கட்டுப்படுத்தும் முறைகள்
4 பட்டங்களுக்கும் ஏற்ற சூரியகாந்தி!
சின்ன வெங்காயம் லாபம் கொடுக்குமா?