புதன்கிழமை 23 ஜனவரி 2019

காங்கிரஸ்-ம.ஜ.த. கட்சிகள் மக்களை திசை திருப்ப முயற்சிக்கின்றன

DIN | Published: 11th September 2018 09:41 AM

காங்கிரஸ், மஜத கட்சிகள் மக்களை திசை திருப்ப முயற்சிக்கின்றன என பாஜக மாநிலத் தலைவர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்தார்.
பெங்களூரில் திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:  பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, முழு அடைப்புக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. கர்நாடகத்தில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ்,  மஜத ஆகிய கட்சிகள் முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.  இது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறிய செயலாகும். தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி மூழ்கும் படகாக ஆகி வருகிறது.  எனவே, விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,  தங்கள் கட்சியை நிலைநிறுத்திக் கொள்ள காங்கிரஸ் கட்சியினர் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
 பெட்ரோல்,  டீசல் விலை உயர்வு தொடர்பாக மக்களை காங்கிரஸ் திசை திருப்பி வருகிறது.  சர்வதேச அளவிலான கச்சா எண்ணெய் விலை நிர்ணயிக்கப்படுகிறது.  ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் கச்சா எண்ணெய் விலையை நிர்ணயம் செய்வதில் மத்திய அரசுக்கு இருந்த உரிமைகள் பறிக்கப்பட்டன.  ஆனால்,  இதனை மக்களிடத்தில் கொண்டு செல்லாமல் அப்போதைய காங்கிரஸ் அரசு மறைத்து விட்டது. சர்வதேச அளவில் கடந்த 14 மாதங்களில் பெட்ரோல்,  டீசல் விலை 73 சதவீதம் உயர்ந்துள்ளது.  என்றாலும், இந்தியாவில் பெட்ரோல்,  டீசல் விலை 29.58 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது.  மத்தியில் பாஜக ஆட்சியில் அமர்ந்தபோது  பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 28 அமெரிக்க டாலராக இருந்தது.  அது தற்போது 79 டாலராக உயர்ந்துள்ளது. இதனால் பெட்ரோல்,  டீசல் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விற்பனையை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள அமெரிக்கா விரும்புகிறது.  இதனால், கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரிக்காமல் இருக்க அந் நாடு நிர்பந்தம் செய்கிறது.  இதனால் கச்சா எண்ணெயின் விலை உயர்வைத் தவிர்க்க முடியாமல் போகிறது. 1 லிட்டர் பெட்ரோல் விற்பனை செய்தால், மத்திய அரசுக்கு ரூ.6.66 பைசாவும், மாநில அரசுக்கு ரூ.25 கிடைக்கிறது. இதனை மறைத்து மத்திய அரசு மேல் வேண்டுமென்றே மாநில அரசு குறை கூறி,  மக்களைத் திசை திருப்ப முயற்சி மேற்கொண்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் உயர்ந்து வருகிறது.  உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை கட்டுப்பாட்டில் உள்ளது. சர்வேச அளவில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் பொருளாதாரம் உயர்ந்தால்,  பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்புள்ளது என்றார் அவர்.

More from the section

ராணுவத்தில் தொழில்பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
தெய்வத்தின் மனித வடிவம் சிவக்குமார சுவாமிகள்
சிவக்குமார சுவாமிகள் லிங்கைக்கியமானார்: தலைவர்கள் இரங்கல்
ஆனந்த்சிங் எனது அண்ணனை போன்றவர், அவரை நான் தாக்கவில்லை: காங்கிரஸ் எம்.எல்.ஏ. கணேஷ்
"தமிழர்களின் பாதுகாப்புக்கு பாடுபட்டவர் சண்முகசுந்தரம்'