24 பிப்ரவரி 2019

தேவெ கெளடாவுக்கு மீண்டும் பிரதமராகும் வாய்ப்பு: மஜத தலைவர் எச்.விஸ்வநாத்

DIN | Published: 12th September 2018 08:26 AM

வரும் மக்களவைத் தேர்தலில் மூன்றாவது அணியை வழிநடத்தும் தேவெ கெளடாவுக்கு மீண்டும் பிரதமராகும் வாய்ப்புள்ளதாக மதச் சார்பற்ற ஜனதா தள மாநிலத் தலைவர் எச்.விஸ்வநாத் தெரிவித்தார்.
ஹாசன் நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் "நம்மூர தியாவப்பா' என்ற முன்னாள் பிரதமர் எச்.டி.தேவெ கெளடாவின் சுயசரிதை கன்னட நூலை வெளியிட்ட பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்ற தலைவராக விளங்கும் மஜத தேசியத் தலைவரும், முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவெ கெளடா, மக்களவைத் தேர்தலில் தேசிய அளவில் மூன்றாவது அணியை முன்னின்று வழிநடத்துவார். மக்களவைத் தேர்தலில் முக்கியப் பங்காற்றவுள்ள தேவெ கெளடா மீண்டும் பிரதமராகும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 
கூட்டணி சீரமைப்பு தேவை
கர்நாடகத்தில் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது. ஆனால், கூட்டணி ஒருங்கிணைப்புக் குழு முழுமையானதாக இல்லை. எனவே, ஒருங்கிணைப்புக் குழுவை சீரமைக்க வேண்டியது அவசியமாகும். 
கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தினேஷ் குண்டுராவ், மஜத மாநிலத் தலைவராகிய என்னை அக் குழுவில் சேர்த்துக் கொண்டால் ஒருங்கிணைப்புக் குழு முழுமையடையும். ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் சித்தராமையாவிடம் இதுகுறித்து விவாதிக்கப்படும். 
பொய்யான தகவல்
காங்கிரஸ், மஜதவைச் சேர்ந்த 20 எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் சேரவிருப்பதாக வெளியான தகவலில் உண்மையில்லை. கூட்டணி அரசை சீர்குலைக்க பாஜக தொடர்ந்து முயற்சித்து வருகிறது. 
கூட்டணி அரசு தனது 5 ஆண்டுகால பதவியை முழுமையாக நிறைவு செய்யும். ஜார்கிஹோளி சகோதரர்கள் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் சேரமாட்டார்கள். 
மக்களவைத் தேர்தலில் கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து மஜத போட்டியிடும். நீர்வளத் துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் விவகாரத்துக்கும் கூட்டணி அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மத்திய பாஜக அரசு சிபிஐ-யை தவறாக பயன்படுத்துகிறது என்றார்.

More from the section

கோலார்தங்கவயல் பொதுமருத்துவமனையில் எம்எல்ஏ திடீர் ஆய்வு
விமானத்தொழில் கண்காட்சியில் நேர்ந்த தீ விபத்துக்கான காரணம் என்ன?: போலீஸ் விசாரணை
தோட்டக்கலை பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
இந்திய பட்டயக்கணக்காளர் மைய பெங்களூரு கிளைக்கு புதியத் தலைவர்
ஜவுளி தொழில்முனைப்பாற்றல் பயிற்சி முகாம்