சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

ஆனந்த்சிங் எனது அண்ணனை போன்றவர், அவரை நான் தாக்கவில்லை: காங்கிரஸ் எம்.எல்.ஏ. கணேஷ்

DIN | Published: 22nd January 2019 08:57 AM

ஆனந்த்சிங் எனது அண்ணனை போன்றவர், அவரை நான் தாக்கவில்லை என கம்பளி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. கணேஷ் தெரிவித்தார்.
கர்நாடகத்தில் காங்கிரஸ், மஜத கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுக்க பாஜகவினர் மேற்கொண்டுள்ள முயற்சியை தடுக்கும் வகையில், பெங்களூரு அருகே உள்ள பிடதியில் உள்ள ஈகிள்டன் கேளிக்கை விடுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற இருந்த நிலையில், சனிக்கிழமை நள்ளிரவு பல்லாரி மாவட்டம், விஜயநகரா தொகுதியைச் சேர்ந்த ஆனந்த்சிங்குக்கும், கம்பளி தொகுதியைச் சேர்ந்த கணேஷ் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், கைகலப்பு நடந்ததாக கூறப்படுகிறது.
இதில் ஆனந்த்சிங்குக்கு தலை, கண், வயிறு, தோள் ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடையே ஏற்பட்ட கைகலப்பு மாநில அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திங்கள்கிழமை கம்பளி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. கணேஷ் செய்தியாளர்களிடம் கூறியது: கேளிக்கை விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுவதில் உண்மையில்லை. விஜயநகரா காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆனந்த்சிங் எனக்கு அண்ணனை போன்றவர். அவரை நான் தாக்கவில்லை. அவர் கீழே விழுந்ததால் காயமேற்பட்டுள்ளது. என் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டால், ஆனந்த்சிங்கின் குடும்பத்தினருக்கு வருத்தம் ஏற்பட்டிருந்தால், அதற்காக அவர்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். கேளிக்கை விடுதியில் பீமாநாயக் எம்.எல்.ஏ.வுக்கும், ஆனந்த்சிங்குக்கும் தகராறு நடந்திருக்கலாம். ஆனந்த்சிங்குடன் நான் தகராறில் ஈடுபடவில்லை என்றார் அவர்.
காங்கிரஸ் தலைவர்களின் வற்புறுத்தலுக்கு இணங்க கணேஷ் இவ்வாறு பேட்டி அளித்துள்ளார் என்று கூறப்பட்டு வரும் நிலையில், கணேஷ் மீது புகார் அளிக்க ஆனந்த்சிங் குடும்பத்தினர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. அவர்களை புகார் அளிக்க வேண்டாம் என காங்கிரஸ் கட்சியினர் சமாதானப்படுத்தி வருவதாகவும் தெரியவந்துள்ளது.

More from the section

108 காவல் நிலையங்களில் மக்கள் பங்களிப்பு காவல் திட்டம் அறிமுகம்


நடிகர் தர்ஷனின் 25-ஆவது கன்னட திரைப்படம்: மார்ச் 1-இல் வெளியீடு


பணம் தர மறுத்ததால்  மனைவி மீது அமிலம் வீச்சு

பெங்களூரில் ஓவியக் கண்காட்சி
எடியூரப்பா மீதான வழக்கு விசாரணைக்கு தடை