வெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019

சிவக்குமார சுவாமிகள் லிங்கைக்கியமானார்: தலைவர்கள் இரங்கல்

DIN | Published: 22nd January 2019 08:58 AM

சித்தகங்கா மடத்தின் பீடாதிபதி சிவக்குமார சுவாமிகள் லிங்கைக்கியமானதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்: ஆன்மிகத் தலைவராக விளங்கிய சிவக்குமார சுவாமிகளின் மறைவு பெரும் துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.  கல்வி, சுகாதாரத் துறையில் அளப்பரிய பங்காற்றி சமுதாயத்தின் மேம்பாட்டுக்கு மகத்தான சேவையாற்றியுள்ளார்.  அவரது மறைவால் வாடியிருக்கும் எண்ணிக்கையில்லா பக்தர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரதமர் நரேந்திர மோடி (சுட்டுரை வாயிலாக): புனிதரான டாக்டர் ஸ்ரீஸ்ரீஸ்ரீசிவக்குமார சுவாமிகள், மக்களுக்காக குறிப்பாக ஏழைகள்,  விளிம்புநிலை மக்களுக்காக வாழ்ந்தவர்.  சமுதாயத்தின் நோய்களாக விளங்கும் ஏழ்மை, பட்டினி,  சமூக அநீதிகளை துடைத்தெறிவதற்காக தமது வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்டவர்.  உலகம் முழுவதும் பரந்திருக்கும் எண்ணிலடங்கா பக்தர்களுக்கு எனது பிரார்த்னைகளை தெரிவித்துக் கொள்கிறேன்.  நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு அவரால் முன்னெடுக்கப்பட்ட எண்ணற்ற சமூகப் பணிகள் சிறப்பு வாய்ந்ததாகும்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி (சுட்டுரை வாயிலாக): சிவக்குமார சுவாமிகள், அனைத்து வகையான மதங்கள், சமுதாயங்களில் காணப்படும் லட்சக்கணக்கான இந்தியர்களால் மதிக்கப்படுபவர் மற்றும் வணக்கத்துக்குரியவர்.  அவரது மறைவு ஆன்மிக உலகத்தில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.  அவரது மறைவால் வாடும் பக்தர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆளுநர் வஜுபாய்வாலா: தும்கூரில் ஐந்து நூற்றாண்டுகள் பழமையான சித்தகங்கா மடத்தின் பீடாதிபதியாக விளங்கிய சிவக்குமார சுவாமிகள்,  கல்வி நிறுவனங்களை அமைத்து, அங்கு சம்ஸ்கிருதம் மட்டுமல்லாது,  நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தையும் போதித்திருக்கிறார்.  சுவாமிகளின் குருகுலத்தில் அனைத்து மதங்கள்,  ஜாதிகள், சமுதாயங்களைச் சேர்ந்த 8,500 குழந்தைகள் தங்கியுள்ளனர்.  அந்த குழந்தைகளுக்கு இலவச உணவு,  உறைவிடம், கல்வி ஆகியவற்றை வழங்கி வருகிறார்.  நமது நாடு ஆன்மிக ஆன்மாவை இழந்து தவிக்கிறது.
முதல்வர் குமாரசாமி: நடமாடும் தெய்வம் என்று போற்றப்படும் சிவக்குமார சுவாமிகளின் மறைவு என் மனதில் ஆழமான சோகத்தை விதைத்துள்ளது.  அதிசய மனிதர் என்ற வகையில் தெய்வத்தின் மனித உருவமாகக் காட்சி தந்து நமக்கெல்லாம் வழிகாட்டுதல் வழங்கி வந்தார்.  சிவக்குமார சுவாமிகளின் மறைவு மாநிலத்துக்கும்,  ஆன்மிக உலகத்துக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.  குழந்தைகளுக்கு கல்வி,  உணவு,  உறைவிடத்தை வழங்கி பாரமரித்து வந்ததை உலகம் மறக்காது.
துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர்: நவீன பசவண்ணர்,  நடமாடும் தெய்வம்,  அன்னதானபிரபு என்று அழைக்கப்படும் சிவக்குமார சுவாமிகள் லிங்கைக்கியமாகியுள்ளது வேதனையை அளித்துள்ளது.  சமூக, ஆன்மிகத் தளத்தில் இவர் ஆற்றியுள்ள பங்களிப்பை வேறு எவராலும் செய்துமுடிக்க முடியாது.  அவர் வகுத்துத் தந்த பாதையில் நாம் பயணிப்போம்.  அவரது ஆன்மாவுக்கு அமைதி கிடைக்க பிரார்த்திக்கிறேன்.  அவரது மறைவைத் தாங்கிக் கொள்ளும் மன உறுதியை லட்சக்கணக்கான அவரது பக்தர்களுக்கு வழங்க கடவுளை வேண்டிக் கொள்கிறேன். 
முன்னாள் பிரதமர் எச்.டி.தேவெ கெளடா: கலியுகத்தின் நடமாடும் தெய்வமாக விளங்கிய சிவக்குமார சுவாமிகளின் மறைவு மனத்துக்கு வலியை ஏற்படுத்தியுள்ளது.  நம் அனைவரின் ஆராதனைக்குரிய தெய்வமாக விளங்கிய ஸ்ரீஸ்ரீசிவக்குமார சுவாமிகள், இந்த உலகம் கண்ட அறிவுக் களஞ்சியம். சுவாமிகள் நிறுவிய கல்வி நிறுவனத்தில் படித்த ஏராளமான குழந்தைகள் சமுதாயத்தில் நல்ல நிலையில் உள்ளனர்.  சுவாமிகளின் வாழ்க்கை சமுதாயத்துக்கு நல்ல பாடமாக விளங்குகிறது.  அவரது புகழ் என்றைக்கும் மங்காமல் நிலைத்திருக்கும்.  சுவாமிகளின் ஆசி உலக மக்களுக்கு நிலையாக கிடைத்துக் கொண்டே இருக்கும்.
முன்னாள் முதல்வர்
சித்தராமையா: சிவக்குமார சுவாமிகளின் மறைவால் அதிர்ச்சி அடைந்துள்ளேன்.  அவரது ஆன்மாவுக்கு சாந்தி கிடைக்க வேண்டுகிறேன்.  நாம் பசவண்ணரை பார்க்கவில்லை. சிவக்குமார சுவாமிகளைத்தான் பசவண்ணராகக் கருதி வந்தோம்.  மற்றவர்களுக்கு முன்னுதாரணமான வாழ்க்கையை வாழ்ந்து நிறைவு செய்துள்ளார்.  அவரது பாதையில் பயணிப்பது தான் அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.
பாஜக மாநிலத் தலைவர்
எடியூரப்பா: ஆன்மிகம்,  உணவு,  கல்வியை வழங்கி வந்த நடமாடும் தெய்வமாக விளங்கிய சுவாமிகளின் தன்னலமில்லா சமூக சேவை ஏழைகள்,  நலிவடைந்தோரின் வாழ்க்கையை வெளிச்சமாக்கியுள்ளது.  ஜாதி, மத, நிற பேதமில்லாமல் ஆற்றிய பணிகளை எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் மறக்க முடியாது. சுவாமிகளின் மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு மனவேதனையைத் தந்துள்ளது.  சுவாமிகளின் ஆன்மா நமக்கு வெளிச்சமாக இருந்து வழிகாட்டும்.
 

More from the section

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர்களை சேர்க்க மீண்டும் வாய்ப்பு: கர்நாடக தலைமைத் தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார்
பிப்.25 முதல் ஹோம்பேக்கிங் பயிற்சி
பிப்.24-இல் மாற்றுத் திறனாளிகள் வேலைவாய்ப்பு முகாம்
மாநில அறிவியல் கண்காட்சி போட்டி
மேக்கேதாட்டு விவகாரம்: ஆதரவு திரட்டும் கர்நாடகம்; மெத்தனத்தில் தமிழகம்!