வெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019

தெய்வத்தின் மனித வடிவம் சிவக்குமார சுவாமிகள்

DIN | Published: 22nd January 2019 09:57 AM

தெய்வத்தின் மனித வடிவமாக விளங்கியர் சித்தகங்கா மடத்தின் பீடாதிபதி சிவக்குமார சுவாமிகள்.
15-ஆம் நூற்றாண்டில் தும்கூருவில் நிறுவப்பட்ட சித்தகங்கா மடத்தின் பீடாதிபதியாக மகத்தான முறையில் பணியாற்றி வந்த சிவக்குமார சுவாமிகள், ஏழைகள், நலிவடைந்தோர், விளிம்புநிலை குழந்தைகளின் கல்வி, சமூக மேம்பாட்டுக்கு ஆற்றிய பங்களிப்பை வரலாறு மறக்காது.
ஏழை குழந்தைகளுக்காக குருகுலம் அமைத்து, அதில் 8,500 குழந்தைகளுக்கு இலவசமாக உணவு, உறைவிடம்,கல்வி ஆகியவற்றை வழங்கி வந்ததால் கொடையால் இமயமாக உயர்ந்தவர். கர்நாடகத்தில் 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து சமூக புரட்சிக்கு வித்திட்ட சமூக சீர்திருத்தவாதி பசவண்ணரின் மறு அவதாரமாக போற்றப்படும் சிவக்குமார சுவாமிகள், ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவராலும் புகழ்ந்துரைக்கப்படுகிறார்.
ராமநகரம் மாவட்டத்தின் மாகடி வட்டத்தில் உள்ள வீரபுரா கிராமத்தில் 1907 ஏப். 1-ஆம் தேதி ஹொன்னப்பா மற்றும் கங்கம்மா ஆகியோருக்கு சிவண்ணாவாக பிறந்தவர்தான் சிவக்குமார சுவாமிகள். 12 குழந்தைகளில் ஒருவராக விளங்கியசிவக்குமார சுவாமிகள், தனது 8-ஆவது வயதில் தாயை இழந்து தவித்தார். 
இது சிவக்குமார சுவாமிகளின் மனதில் ஆழ்மான காயத்தை ஏற்படுத்தியதோடு, ஆன்மிக பக்கம் நாட்டம் கொள்ள தூண்டியது. வீரபுரா, நாகவள்ளி கிராமங்களில் ஆரம்பக் கல்வியை நிறைவுசெய்த சிவக்குமார சுவாமிகள், தும்கூருவில் மேல்நிலைக் கல்வியை முடித்துள்ளார். அதன்பிறகு, இயற்பியல் மற்றும் கணிதப் பாடங்களில் ஆர்வம் ஏற்பட்டு பட்டம் பயின்றுள்ளார்.
பின்னர், சித்தகங்கா மடத்தில் சேர்ந்த சிவக்குமார சுவாமிகள், தனது ஆன்மிக குருவான ஸ்ரீஉத்தனசிவயோகிகளுக்கு சிவக்குமார சுவாமிகளின் அணுக்க சீடராக இருந்து வந்துள்ளார். அப்போது மடத்தின் இளைய பீடாதிபதியாக இருந்த மருலராத்யா மறைந்த போது, அவருக்கு அஞ்சலி செலுத்த சென்ற சிவக்குமார சுவாமிகளை தனது வாரிசாக அறிவித்தார் சிவயோகி சுவாமிகள். சிவயோகி சுவாமிகளின் மறைவைத் தொடர்ந்து, 1930-ஆம் ஆண்டு சித்தகங்கா மடத்தின் பீடாதிபதியாக சிவக்குமார சுவாமிகள் பொறுப்பேற்றுக்கொண்டார். மடத்தில் 89 ஆண்டு காலமாக பீடாதிபதியாக பங்காற்றிய சிவக்குமார சுவாமிகள், ஸ்ரீசித்தகங்கா கல்விக் கூடங்களை அமைத்து ஏழை, எளிய மக்களுக்கு கல்வி புகட்டும் வேலையில் ஈடுபட்டார். குறிப்பாக கிராமக் குழந்தைகள் மட்டும் தேர்ந்தெடுத்து குருகுலத்தில் தங்கவைத்து இலவசமாக உணவு, உறைவிடம், கல்வியை வழங்கினார். குருகுலத்தில் பயின்ற குழந்தைகளுக்கு ஆன்மிக கல்வியுடன் அறிவியல் கல்வியையும் அளித்தார்.
கன்னடம், ஆங்கிலம், சமஸ்கிருத மொழிகளில் ஆழமான அறிவும், ஆளுமை கொண்டு விளங்கிய சுவாமிகள், ஒழுக்கம் தவறாத வாழ்க்கைக்கு சொந்தக்காரராக திகழ்ந்துள்ளார். உலகம் போற்றும் ஆன்மிகவாதி, லட்சக்கணக்கான பக்தர்களின் குரு, மனிதநேயத்தின் உறைவிடமாக விளங்கிய சிவக்குமார சுவாமிகள், தனது வீரசைவத்தின் விக்ரதா மரபின்படி முக்கால லிங்க பூஜைகள் நித்தமும் தவறாமல் செய்து வந்துள்ளார். அண்மையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தபோதும், லிங்க பூஜையில் இருந்து வழுமாமல் இருந்து வந்துள்ளார்.
மடத்தின் கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு ஆங்கிலம், சமஸ்கிருதப் பாடங்களையும் போதித்துள்ளார். சித்தகங்கா கல்வி நிறுவனத்தில் சுவாமிகளின் மாணாக்கர்களாக பயின்ற ஆயிரக்கணக்கானவர்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் உயர்ந்த நிலையில் இருந்து வருகிறார்கள். சித்தகங்கா மடத்தின் வாயிலாக ஆரம்பக்கல்வி முதல் உயர்கல்வி வரையில் 125 கல்வி நிறுவனங்களை நடத்திவந்தார்.
ஒழுக்கமயமான வாழ்க்கை முறை, அறிவியல் முறையிலான உணவுப்பழக்கம், கருணைதோய்ந்த மனிதநேயம், இன்பம் பொங்கும் எளிமையான வாழ்க்கை, கடின உழைப்பு ஆகியவை தான் தனது வாழ்க்கையின் நீண்ட ஆயுளுக்கு அடிப்படையானவை என்று சிவக்குமார சுவாமிகள், அடிக்கடி கூறி வந்துள்ளார். இயற்கையையும், வேளாண்மையையும் பேணும் பாங்கை விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் தொடர்ந்து வழங்கும் நோக்கில், சித்தகங்கா மடத்தில் ஆண்டுதோறும் கால்நடைகள் மற்றும் வேளாண் கண்காட்சிகளை நடத்தி வந்துள்ளார்.
 கர்நாடகம் மட்டுமல்லாது, ஆந்திரம், தமிழகம், மகாராஷ்டிர மாநிலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களை கொண்டுள்ள சுவாமிகளின் சமூக சேவையை பாராட்டி 1965-ஆம் ஆண்டிலேயே கர்நாடக பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது.  சிவக்குமார சுவாமிகளின் மனிதநேய பணிகளை பாராட்டி கர்நாடக அரசு 'கர்நாடக ரத்னா', இந்திய அரசு 'பத்மபூஷன்' விருதுகளை வழங்கி கெளரவித்துள்ளன. 
சிவக்குமார சுவாமிகளுக்கு தனது மரணத்தை கணிக்கும் 'இச்சா மிருத்யூ' இருந்துள்ளது. அதனால் தான் உறுப்புமாற்று அறுவை சிகிச்சை செய்து சிகிச்சை பெற்று வந்த சிவக்குமார சுவாமிகள் அண்மையில் உடல்நலம் தேறி வந்தார் என்று மடத்தின் இளைய பீடாதிபதி சித்தலிங்க சுவாமிகள்
கூறுகிறார். 
மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் வரை நடமாடிக்கொண்டிருந்த சுவாமிகள், கர்நாடகத்தின் பெரும்பான்மை சமூகமான லிங்காயத்துகளின் மிகப்பெரிய ஆன்மிக குருவாக விளங்கிவந்தார். எந்த காலத்திலும் அரசியல்ரீதியிலான நிலைப்பாட்டை எடுக்காததால், அனைத்துக் கட்சித் தலைவர்களாலும் போற்றுதலுக்குரியவராகவே விளங்கினார். 2007 ஏப். 8-ஆம் தேதி சித்தகங்கா மடத்தில் நடைபெற்ற சிவக்குமார சுவாமிகளின் நூற்றாண்டு பிறந்த நாள் மற்றும் குருவந்தனம் நிகழ்ச்சியில் அப்போதைய குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் கலந்துகொண்டு, சுவாமிகளின் பணிகளை பாராட்டி கெளரவித்தார். இத்துணை சிறப்புகள் கொண்டதால் சிவக்குமார சுவாமிகளை அவரது பக்தர்கள் நடமாடும் தெய்வம்
என்றழைக்கிறார்கள்.
 

More from the section

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர்களை சேர்க்க மீண்டும் வாய்ப்பு: கர்நாடக தலைமைத் தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார்
பிப்.25 முதல் ஹோம்பேக்கிங் பயிற்சி
பிப்.24-இல் மாற்றுத் திறனாளிகள் வேலைவாய்ப்பு முகாம்
மாநில அறிவியல் கண்காட்சி போட்டி
மேக்கேதாட்டு விவகாரம்: ஆதரவு திரட்டும் கர்நாடகம்; மெத்தனத்தில் தமிழகம்!