சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

"ஸ்ரீ சிவக்குமார சுவாமிகளுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்'

DIN | Published: 22nd January 2019 08:57 AM

சித்தகங்கா மடாதிபதி ஸ்ரீ சிவக்குமார சுவாமிகளுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என முதல்வர் எச்.டி.குமாரசாமி
தெரிவித்தார்.
கர்நாடக மாநிலம், தும்கூரு மாவட்ட சித்தகங்கா மடத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: நடமாடும் தெய்வம் தும்கூரு சித்தகங்கா மடாதிபதி சிவக்குமார சுவாமிகள் அண்மையில் உடல் நலம் குன்றியதையடுத்து, அவருக்கு பெங்களூரு, சென்னையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு அவரது உடல் ஒத்துழைக்காததையடுத்து,  திங்கள்கிழமை முற்பகல் 11.44 மணியளவில் முக்தி அடைந்தார். கர்நாடகத்தில் அனைத்து ஜாதி, மத ஏழை குழந்தைகளுக்கு அவர் கல்வி, உணவை வழங்கியதோடு, அவர்கள் சொந்தக் காலில் நிற்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்துள்ளார்.
அவதார புருஷரான அவர் ஆன்மிக வளர்ச்சிக்கும் சிறப்பாக தொண்டாற்றியுள்ளார். அவரது இழப்பு, கர்நாடகத்துக்கு மட்டுமின்றி, நாட்டுக்கும் பேரிழப்பாகும். அவரது வழிகாட்டுதலைப் பின்பற்றி அனைவரும் நடந்து கொள்ள வேண்டும். அவரது இறுதிச்சடங்கு செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற உள்ளது. பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு அமைதியாக இறுதி மரியாதை செலுத்த வேண்டும். அவரது இறுதிச் சடங்கில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த மூத்த தலைவர்களும் கலந்துகொள்ள
உள்ளனர்.
சிவக்குமார சுவாமிகள் முக்தி அடைந்ததையடுத்து, செவ்வாய்க்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். சிவக்குமார சுவாமிகள் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வருபவர்களுக்காக தும்கூரு ரயில்நிலையம், பேருந்து நிலையத்திலிருந்து சித்தகங்கா மடத்துக்கு இலவச பேருந்து சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மறைந்த சிவக்குமார சுவாமிகளுக்கு பாரத ரத்னா விருதை வழங்கி மத்திய அரசு கெளரவிக்க வேண்டும்
என்றார் அவர்.
முதல்வரைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர், எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா, உள்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், பாஜக முன்னாள் அமைச்சர் சோமண்ணா ஆகியோரும் பாரத ரத்னா விருதை சிவக்குமார சுவாமிகளுக்கு வழங்கி மத்திய அரசு கெளரவிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

More from the section

108 காவல் நிலையங்களில் மக்கள் பங்களிப்பு காவல் திட்டம் அறிமுகம்


நடிகர் தர்ஷனின் 25-ஆவது கன்னட திரைப்படம்: மார்ச் 1-இல் வெளியீடு


பணம் தர மறுத்ததால்  மனைவி மீது அமிலம் வீச்சு

பெங்களூரில் ஓவியக் கண்காட்சி
எடியூரப்பா மீதான வழக்கு விசாரணைக்கு தடை