புதன்கிழமை 16 ஜனவரி 2019

வங்கி மேலாளர் வீட்டில் கொள்ளை: வேலைக்காரி உள்பட 5 பேர் கைது

DIN | Published: 12th September 2018 04:25 AM


சென்னை பல்லாவரத்தில் வங்கி மேலாளரையும், அவரது மனைவியையும் கட்டிப் போட்டு 133 பவுன் கொள்ளையடித்த வழக்கில், வீட்டு வேலைக்காரி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து போலீஸார் 124 பவுன் தங்க நகைகள், 3 செல்லிடப்பேசிகள், 2 கத்திகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
ஜமீன் பல்லாவரம், கார்டன் உட்ராப் நகர், முதல் குறுக்குத் தெருவில் வசிப்பவர் யோகசேரன் (55). இவர் மனைவி சுப்புலட்சுமி (51). இவர்களது வீட்டில் மதுரையைச் சேர்ந்த மகாராணி வேலைக்காரியாக பணி புரிந்து வந்தார். யோகசேரன் ஒரு வங்கியின் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர்களது வீட்டுக்கு 4 மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள், யோகசேரன், சுப்புலட்சுமி ஆகிய இருவரையும் ஒரு அறையிலும், வேலைக்காரி மகாராணியை ஒரு அறையிலும் கட்டிப்போட்டுவிட்டு, பீரோவில் இருந்த 133 பவுன் தங்கநகைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பியோடிஸ்னர். 
இதுகுறித்து பல்லாவரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்தனர். அதில் மகாராணியும், அவரது உறவினர்களுமே இக்கொள்ளையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார் மகாராணி, அவரது உறவினர்களான மதுரையைச் சேர்ந்த தெ.சுரேஷ் (26), ரா.செல்வம் (28), அ.கெளதம் (21), நாகப்பட்டினத்தைச் சேர்ந்த அருண்குமார் (30) ஆகிய 5 பேரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
போலீஸார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் மகாராணி, அந்த வீட்டில் ஒரு மாதத்துக்கு முன்பே கொள்ளையடிக்க திட்டமிட்டு யோகசேரன் வளர்த்த இரு நாய்களை விஷம் வைத்து கொலை செய்திருப்பது தெரிய வந்தது.
கொள்ளைச் சம்பவத்தில் தன் மீது சந்தேகம் ஏற்படாமல் இருப்பதற்கு, தன்னையும் மகாராணி கட்டிப்போடச் செய்து நாடகமாடியிருப்பதும் போலீஸார் விசாரணையில் தெரியவந்தது.

More from the section

காணும் பொங்கல்: சென்னையில் பாதுகாப்புப் பணியில் 15 ஆயிரம் போலீஸார்: மெரீனாவில் ஆளில்லாத விமானம் மூலம் கண்காணிப்பு
உள் நோயாளிகளுடன் இருப்பவர்களுக்கும் இலவச உணவு
இரண்டு வாரத்தில் தடை செய்யப்பட்ட 80 டன் பிளாஸ்டிக் பொருள்கள் சேகரிப்பு
2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பாதை: பல்வேறு இடங்களில் மண் ஆய்வு தீவிரம்
ஜன.18-இல் உலக நன்மைக்காக  ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்