வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

சூழலியல் செயல்பாட்டாளர் முகிலன் மாயமான விவகாரம்: பதிலளிக்க உத்தரவு

DIN | Published: 19th February 2019 04:23 AM


சூழலியல் செயல்பாட்டாளர் முகிலனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு சென்னை மாநகர காவல் ஆணையர், காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர்கள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
சென்னை உயர்நீதிமன்றத்தில் மனித உரிமை ஆர்வலரும், வழக்குரைஞருமான ஹென்றி திபேன் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், கடந்த 2018-ஆம் ஆண்டு மே மாதம் 22-ஆம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடத்தப்பட்ட தூப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினார். 
இந்ச சம்பவத்துக்கு காரணமான போலீஸ் உயர் அதிகாரிகள் தொடர்பான விடியோவை சூழலியல் செயல்பாட்டாளர் முகிலன் கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் வெளியிட்டார்.
பின்னர் பிப்ரவரி 15-ஆம் தேதி இரவு சென்னையிலிருந்து நாகர்கோயிலுக்குச் செல்லும் ரயிலில் சென்றுள்ளார். அதன்படி பிப்ரவரி 16-ஆம் தேதி மதுரைக்கு வந்திருக்க வேண்டிய அவரை காணவில்லை. 
குறிப்பிட்ட தொலைவுக்குப் பின்னர் அவரது செல்லிடப்பேசியும் பயன்பாட்டில் இல்லை. இதுதொடர்பாக காவல்துறையினரிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே முகிலனைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். 
இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் மற்றும் எம்.நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், வழக்குரைஞர்கள் ஆர்.சுதா ராமலிங்கம் மற்றும் சுரேஷ் ஆகியோரும், அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்குரைஞர் சி.அய்யப்பராஜ் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் மனுதாரரைக் காணவில்லை என பிப்ரவரி 17-ஆம் தேதி புகார் அளித்துவிட்டு, அடுத்த நாளே நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்ற விவகாரங்களில் போலீஸாருக்கு அவகாசம் தர வேண்டும் என அறிவுறுத்தினர். மேலும் இந்த மனு தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர், காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

More from the section

தமிழிசையின் சிறப்புகளை உலகெங்கும் பரப்ப நடவடிக்கை: தேசிய கருத்தரங்கில் வலியுறுத்தல்
சென்னையில் களைகட்டிய வண்ணங்களின் திருவிழா: ஹோலி உற்சாகக் கொண்டாட்டம்
நுங்கம்பாக்கம் ரயில்நிலையம் அருகே இறந்து கிடந்தவர் தொலைக்காட்சி ஊழியர்
தலைக்காய விழிப்புணர்வு தினம்: வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட்
சரக்குப் பெட்டகங்களைக் கையாளுவதில் சென்னைத் துறைமுகம் சாதனை