வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

குறைகளைப் பதிவு செய்ய துறைமுக ஓய்வூதியதாரர்களுக்கு  இணையவழி சேவை அறிமுகம்

DIN | Published: 22nd February 2019 03:53 AM


சென்னைத் துறைமுக ஓய்வூதியதாரர்களின் குறைகளைப் போக்க இணையவழி (போர்டல்) சேவை வசதியை துறைமுக நிர்வாகம் வியாழக்கிழமை  அறிமுகம் செய்துள்ளது.
இது குறித்து சென்னைத் துறைமுக நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:  
நாட்டின் 12 பெருந்துறைமுகங்களில் ஒன்றான சென்னைத் துறைமுகத்தில் தற்போது 15, 310 ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு  ஓய்வூதியமாக மட்டும் ஆண்டுக்கு சுமார் ரூ.324 கோடி பட்டுவாடா செய்யப்படுகிறது. இந்நிலையில் ஓய்வூதியதாரர்கள்   தங்கள் வீட்டிலிருந்தபடியே தங்களது குறைகளைத் தெரிவிக்கும் வகையில் சென்னைத் துறைமுகத்தின் http://www.chennaiport.gov.in என்ற இணைய தளத்தில் புதிய இணைய வழி சேவை வசதி (போர்டல்) வியாழக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  இந்த இணையவழியில் ஓய்வூதியதாரர் ஒருவர் தனது விவரங்களைப் பதிவு செய்தவுடன் அது ஒரு முறை சங்கேத எண் (ஓடிபி) அவரது செல்லிடப்பேசி எண்ணிற்கு அனுப்பி உறுதி செய்யப்படும். பின்னர் குறைகளைப் பதிவிட்டால்,  அது குறித்து  உரிய துறை சார்ந்த அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.  அப்பதிவின் மீதான  ஒவ்வொரு நடவடிக்கை குறித்தும் ஓய்வூதிய தாரருக்கு குறுந்தகவல் அனுப்பப்படும். புகார் தெரிவிக்கப்பட்டு 15 நாள்களுக்குள் தீர்வு காணப்படவில்லை எனில் இப்புகார் தானாக துறைத் தலைவர்களின் பார்வைக்கு கொண்டு செல்லும்  வகையில்  தொழில்நுட்பம் இதில் உள்ளது. 
இப்புதிய வசதியை, முதுபெறும் ஓய்வூதியதாரர்கள் பி.ஆர்.நரசிம்மன், கே.தாமோதரன் ஆகியோர் இணைந்து தொடக்கி வைத்தனர். இதில் பி.ஆர். நரசிம்மன் 1955 இல்  சென்னைத் துறைமுகத்தில் சேர்ந்து 1991ஆம் ஆண்டு துறைமுக துணைத் தலைவராகவும்,  கே. தாமோதரன் 1947ஆம் ஆண்டு கலாசி தொழிலாளராக பணியில் சேர்ந்து 1980ஆம் ஆண்டு ஓய்வு பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
  சென்னை துறைமுகத் தலைவர் பி.ரவீந்திரன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற  நிகழ்ச்சியில், துறைமுகப் பொறுப்புக் கழக செயலாளர் மோகன், மருத்துவத் துறைத்தலைவர் டாக்டர் ராஜாரவிவர்மன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

More from the section

தமிழிசையின் சிறப்புகளை உலகெங்கும் பரப்ப நடவடிக்கை: தேசிய கருத்தரங்கில் வலியுறுத்தல்
சென்னையில் களைகட்டிய வண்ணங்களின் திருவிழா: ஹோலி உற்சாகக் கொண்டாட்டம்
தலைக்காய விழிப்புணர்வு தினம்: வாகன ஓட்டிகளுக்கு இலவச ஹெல்மெட்
நுங்கம்பாக்கம் ரயில்நிலையம் அருகே இறந்து கிடந்தவர் தொலைக்காட்சி ஊழியர்
சரக்குப் பெட்டகங்களைக் கையாளுவதில் சென்னைத் துறைமுகம் சாதனை