திங்கள்கிழமை 25 மார்ச் 2019

சாலைகளில் விளம்பரப் பதாகைகள், தட்டிகள் வைத்தால் கடும் நடவடிக்கை: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

DIN | Published: 22nd February 2019 04:00 AM
சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.பிரகாஷ் தலைமையில் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் விளம்பரப் பதாகைகள், தட்டிகள் அமைப்பது தொடர்பாக ரிப்பன் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டம்.


பெருநகர சென்னை மாநகராட்சியில் சாலை உள்ளிட்ட பகுதிகளில் விளம்பரப் பதாகைகள், தட்டிகள் வைப்போர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ஜி.பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகம் முழுவதும் சாலைகள் உள்ளிட்ட பகுதிகளில் விளம்பரப் பதாகைகள், தட்டிகள் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்தத் தடையைப் பின்பற்றுதல்  தொடர்பாக  அரசியல் கட்சி நிர்வாகிகள், டிஜிட்டல் விளம்பரப் பதாகை அச்சக சங்க உறுப்பினர்களுடனான கூட்டம் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.பிரகாஷ் தலைமையில் ரிப்பன் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்றது. 
இதில், ஆணையர் ஜி.பிரகாஷ் பேசியது: சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட சாலைகள் உள்ளிட்ட பகுதிகளில் விளம்பரப் பதாகைகள், தட்டிகள் வைக்க சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் தடையில்லாச் சான்று பெற வேண்டும். மாநகராட்சியிடம் அனுமதி பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் உள்ளன.
விளம்பரப் பதாகை தொடர்பான வழக்கில் தமிழகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் விளம்பரப் பதாகைகள், தட்டிகள் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்த உத்தரவை அனைத்து அரசியல் கட்சியினரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். டிஜிட்டல் விளம்பரப் பதாகை அச்சக உரிமையாளர்களும் இவற்றை அச்சிட்டுத் தருவதைத் தவிர்க்க வேண்டும். இதை மீறுவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்தக் கூட்டத்தில் அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள்,  டிஜிட்டல் விளம்பரப் பதாகை அச்சக சங்க உறுப்பினர்கள், மாநகராட்சி இணை ஆணையர் ஆர்.லலிதா, பெருநகர காவல் இணை ஆணையர் பாலகிருஷ்ணன், வட்டார துணை ஆணையர்கள் பி.என்.ஸ்ரீதர், எஸ்.திவ்யதர்ஷினி, ஆல்பி ஜான் வர்கீஷ், மண்டல அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


 

More from the section

சமூக ஊடகங்களில் முழு விவரங்களைக் கொடுக்க வேண்டாம்
வாகனச் சோதனை: ரூ.53 லட்சம் பறிமுதல்
வேட்பாளர் திறமையானவரா என்று பாருங்கள்: மு.க.ஸ்டாலின்
"ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் சிறப்பு மருத்துவமனை தொடங்க நடவடிக்கை'
"சத்யமேவ ஜெயதே' கோட்பாட்டிற்கிணங்க வாக்கு சேகரிப்பு