செவ்வாய்க்கிழமை 22 ஜனவரி 2019

கம்ப வர்ம பல்லவர் கால கல்வெட்டு கண்டெடுப்பு

By  காஞ்சிபுரம்,| DIN | Published: 05th July 2018 12:33 AM

உத்தரமேரூரில் தொன்மைவாய்ந்த குளம் சீரமைப்பின்போது, கம்ப வர்ம பல்லவ கால கல்வெட்டு கண்டறியப்பட்டது.
 காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் பகுதியில் 2 ஆயிரம் ஆண்டுகள் தொன்மைவாய்ந்த குளம் உள்ளது. இந்த குளத்தை தூர்வாரும் பணிகளில் சேவாலயா உள்ளிட்ட அமைப்பினர் அண்மையில் ஈடுபட்டனர். அப்போது, குளத்தில் பழங்கால கல்வெட்டு இருந்தது தெரியவந்தது. இக்கல்வெட்டை தொண்டு நிறுவனத்தினர் தமிழக தொல்லியல் துறையிடம் அளித்து அதன் விவரங்களைக் கோரினர்.
 அதன்படி, கல்வெட்டு குறித்து தொல்லியல் துறை ஓய்வு பெற்ற அதிகாரி ஸ்ரீதரன் அளித்துள்ள விவரம்: குளத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு, பல்லவ மன்னர்வர்மர் காலத்தைச் சேர்ந்தது. இதில், மன்னன் காலத்தில் உள்ளாட்சி அமைப்புகள் சிறப்பாக இயங்கி மக்களுக்கு பணியாற்றி வந்தது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நீர் நிலைகள் நன்கு பராமரிக்கப்பட்டுள்ளன. அவை மக்களுக்கும், விலங்கினங்களுக்கும், விவசாயத்துக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்பணிகளில், உத்தரமேரூர் முன்மாதிரி பகுதியாக திகழ்ந்துள்ளது. அதன்படி, உத்தரமேரூர் பார்ப்பனர் குளத்தில் படித்துறை அமைத்து, விலங்கினங்கள் குளத்தில் இறங்கி நீர் பருகிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இங்கு கிடைக்கப்பெற்ற கல்வெட்டில், பல்லவ வம்சத்தின் செம்மாந்த பணிகள் குறித்து வாசகங்கள் மூலம் அறியப்படுகிறது. அதன்படி, கல்வெட்டானது கி.பி. 894 காலத்தைச் சேர்ந்தது. கம்ப வர்மன் எனும் பல்லவ மன்னனின் காலமாக அறியப்படுகிறது. இதில், சங்கரபாடியார் என்றழைக்கப்படும் எண்ணை வணிக சமூகத்தினர் அந்த காலத்தில் வாழ்ந்து வந்துள்ளனர். அவர்கள் அக்குளத்தின் அருகே கோயில் ஒன்றினை கட்டியுள்ளனர் எனும் சான்று கல்வெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இக்குளத்துக்கு அருகே நந்தி சிலை உள்ளது கோயில் இருந்ததற்கு ஆதாரமாக உள்ளது. அக்கல்வெட்டு எழுத்துகளின் படி, சங்கரபாடியார் சந்ததியினரான "பெரும் தச்சர்" இவ்வெழுத்துகளை பொறித்துள்ளனர் எனவும், கம்ப வர்ம பல்லவ மன்னனின் 26-ஆவது ஆண்டு ஆட்சிக் காலத்தில் இது நடைபெற்றுள்ளது என கல்வெட்டு எழுத்துகள் தெரிவிக்கின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
 
 
 
 

More from the section

11 பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் தொடக்கம்
அடிப்படை வசதிகள் கோரி குடியிருப்புவாசிகள் ஆட்சியரிடம் மனு
பொதுவழிப்பாதையை மீட்டுத் தரக்கோரி மனு
தேசிய தீத்தடுப்பு ஒத்திகை
மாமல்லபுரத்தில் நாட்டிய விழா நிறைவு