திங்கள்கிழமை 18 பிப்ரவரி 2019

ஒரே நபரிடம் இருந்து 26 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

DIN | Published: 12th September 2018 04:21 AM


கூடுவாஞ்சேரி பகுதியில் மோட்டார்சைக்கிள்கள் திருடுபோன வழக்கில் மூன்றாவதாக கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 26 மோட்டார் சைக்கிள்களை போலீஸார் மீட்டனர். 
கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், வண்டலூர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்கள் திருடுபோனது தொடர்பாக கூடுவாஞ்சேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் தொடர்புடைய திருடர்களைப் பிடிக்க வண்டலூர் டிஎஸ்பி வளவன் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் பாஸ்கர் , சரவணன், துணை ஆய்வாளர்கள் தனசேகர், செல்வம் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில் ஆதனூர் பகுதியில் போலீஸார் நடத்திய வாகனச் சோதனையின்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வந்த தைலாவரம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர்(31), கொளப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பழனிதங்கம் (20) ஆகிய இருவரையும் கைது செய்தனர். 
அவர்களிடம் நடத்திய விசாரணையில், விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களைத் திருடியதை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் திருச்சி ஜீவா நகரைச் சேர்ந்த தினேஷ்குமார் என்ற இளைஞரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். அவரிடம் இருந்து புத்தம் புதிய 17 மோட்டார் சைக்கிள்கள் உள்பட 26 இருசக்கர வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். புதிய மோட்டார் சைக்கிள்களைத் திருடி அவற்றை விற்று மது மற்றும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்ததாக பாஸ்கர், பழனிதங்கம், தினேஷ்குமார் ஆகிய மூவரும் போலீஸ் விசாரணையில் தெரிவித்தனர். 
இதனிடையே, இருசக்கர வாகனங்கள் திருட்டு வழக்கு தொடர்பாக தனிப் படையினர் தொடர்ந்து செயல்படுவார்கள் என டிஎஸ்பி வளவன் தெரிவித்துள்ளார்.

More from the section

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
கல்பாக்கத்தில் கட்டடக் கலை திருவிழா
ஆதரவற்ற தாய்மார்களுக்கான ஆலோசனைக் கூட்டம்: நீதிபதி பங்கேற்பு
பிப்.22-இல் கால்நடை பராமரிப்புத் துறை பணியிடங்களுக்கு நேர்காணல் தொடக்கம்
சாரண சாரணியர் தரம் கணிக்கும் போட்டிகள் நிறைவு