புதன்கிழமை 23 ஜனவரி 2019

வாழ்நாளில் 100 மரக்கன்றுகளை நட்டு வளர்ப்போம்: உறுதிமொழி ஏற்ற மாணவர்கள்

DIN | Published: 12th September 2018 04:22 AM


தங்கள் வாழ்நாளில் 100 மரக்கன்றுகளையாவது நட்டு வளர்ப்போம் என கைத்தண்டலம் கிராமத்தில் மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கம் ஊராட்சிக்கு அடுத்து கைத்தண்டலம் எனும் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் வசித்து வருபவர் மரம் மாசிலாமணி. இவர் இயற்கை விவசாயி. அதோடு, தனது 14 ஏக்கர் நிலத்தில் எழில்சோலை எனும் பெயரில் பல்வேறு அரிய வகை மரங்கள், மூலிகைகள், நர்சரி பண்ணை உள்ளிட்டவற்றை வளர்த்து பராமரித்து வருகிறார். மேலும், பறவையினங்கள், பாம்புகள், பூச்சிகள், நாட்டுக்கோழியினங்கள் என பல்வேறு உயிரினங்களுக்கு அடைக்கலமாய் இவரது தோட்டம் விளங்கி வருகிறது. இதனால், இவரது தோட்டத்தைக் காண நாள்தோறும் வேளாண் ஆராய்ச்சி மாணவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என பலர் ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர். அவ்வகையில், காஞ்சிபுரத்தில் உள்ள சுறா நீச்சல் மன்றம் சார்பில் சுமார் 60-க்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகளுடன் ஆசிரியர்கள், பெற்றோர் என பலரும் ஞாயிற்றுக்கிழமை வந்திருந்தனர். 
அங்கு அவர்கள், பூவரசு, வில்வம், மூங்கில் உள்ளிட்ட பல்வேறு மரங்கள், பறவைக்கூடுகள் ஆகியவற்றைப் பார்வையிட்டு, இயற்கை விவசாயம், பல்லுயிர்ப் பெருக்கம், தேன்வளர்ப்பு, சுற்றுச்சூழல் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆர்வத்துடன் கேட்டறிந்தனர். 
தொடர்ந்து, மாணவர்கள் அனைவரும் அங்குள்ள தோட்டத்தில் இருந்த மரங்களைக் கட்டியணைத்து, மரங்களை நேசிக்கிறேன். எனது வாழ்நாளில் 100 மரக்கன்றுகளையாவது நட்டு வைத்துப் பராமரிப்பேன்' என உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து, பாரம்பரிய விளையாட்டுகள், உறியடி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.  

More from the section

11 பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் தொடக்கம்
அடிப்படை வசதிகள் கோரி குடியிருப்புவாசிகள் ஆட்சியரிடம் மனு
பொதுவழிப்பாதையை மீட்டுத் தரக்கோரி மனு
தேசிய தீத்தடுப்பு ஒத்திகை
மாமல்லபுரத்தில் நாட்டிய விழா நிறைவு