வியாழக்கிழமை 21 பிப்ரவரி 2019

பெருமாள் கோயில்களில் மகா கும்பாபிஷேகம்

DIN | Published: 13th September 2018 02:36 AM


மாமல்லபுரம் நிலமங்கைதாயார் சமேத தலசயனப் பெருமாள் கோயில் முன்பகுதி மகா மண்டபத்துக்கு புதன்கிழமை சம்ப்ரோக்க்ஷணம் நடைபெற்றது.
இக்கோயிலில், மகா மண்டபம் அமைக்க பணிகள் தொடங்கப்பட்டு, திருப்பணிகள் முடிவுற்றன. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை பகவத் பிரார்த்தனை, அங்குரார்ப்பணம், வாஸ்து ஹோமம் , கும்பாராதனம், பூர்ணாஹுதி ஆகியவை நடைபெற்றன.
புதன்கிழமை காலை யாகசாலை புண்யாஹசம், மகா பூர்ணாஹுதி, கும்ப புறப்பாடு உள்ளிட்டவை நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, மகா மண்டபம் சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது. நிகழ்ச்சியின்போது, பல்வேறு பஜனை குழுவினர் பங்கேற்றனர்.
விழாவில் தெப்பல் உற்சவ கமிட்டி தலைவர் மல்லை ஜனார்த்தனம் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களும், திரளான பக்தர்களும் கலந்து கொண்டனர்.
ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில்...
கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரணி அருகே ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
ஆரணி பேரூராட்சிக்கு உள்பட்ட பெருமாள்குப்பம் கிராமத்தில் ஸ்ரீதேவி,பூதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் உள்ளது.
இக்கோவில் 60 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இந்நிலையில், சிதிலம் அடைந்திருந்த இக்கோயிலை புதுப்பிக்கும் பணியில் கிராம மக்கள் ஈடுபட்டனர்.
கோயில் திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திங்கள்கிழமை (செப்டம்பர் 10) யாகசாலை பூஜை, வாஸ்து ஹோமம், கரிக்கோலம் வருதல், பகவத் பிரார்த்தனை, அங்குரார்ப்பணம், பெருமாள் பிம்ப ஸ்தாபனம் ஆகியவை நடைபெற்றன.
செவ்வாய்க்கிழமை மூன்றாம் கால யாக சாலை பூஜை, அஷ்ட பந்தனம் சாற்றுதல், பிரசாத விநியோகம், மகா சாந்தி, திருமஞ்சனம், நான்காம் கால யாக பூஜை ஆகியவை நடைபெற்றன.
கும்பாபிஷேக தினமான புதன்கிழமை விஸ்வரூபம், கோபூஜை, ஐந்தாம் கால யாக சாலை பூஜை, பூஜ்யஸ்ரீ சுவாமிஜி வரவேற்பு, யாத்ராதானம், கலசம் புறப்பாடு போன்றவை நடைபெற்றது.
தொடர்ந்து, சென்னை யோக சாந்தி குருகுலம் யோகானந்தா சுவாமி தலைமையில் தாசரதி பட்டாச்சாரி விமான கோபுரத்தில் புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்து வைத்தார்.
பின்னர் பக்தர்களுக்கு தீர்த்தம், பிரசாதம் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சுவாமிக்கு திருக்கல்யாணமும், பின்னர் பூக்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தைக் காண ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.


 

 

More from the section

இருளர், பழங்குடியினருக்கு கல்வி விழிப்புணர்வுப் பேரணி
5 கிராமங்களுக்கு சூரிய மின்சக்தி விளக்குகள்
கந்தசுவாமி கோயிலில் தெப்போற்சவம்
கல்லூரியில் இயந்திரவியல் தொழில்நுட்பக் கருத்தரங்கம்
ஜெயலலிதா பிறந்தநாள்: வெள்ளித்தேர் இழுத்து வழிபாடு