சனிக்கிழமை 23 மார்ச் 2019

குடிநீர் வரி வசூலிக்க முடியாமல் திணறும் நகராட்சி நிர்வாகம்

DIN | Published: 22nd February 2019 03:39 AM
காஞ்சிபுரம் பெருநகராட்சிக் கட்டடம்.


வணிக நிறுவனங்களிடமிருந்து குடிநீர் வரியை வசூலிக்க முடியாமல் காஞ்சிபுரம் பெருநகராட்சி நிர்வாகத்தினர் திணறி வருகின்றனர். 
காஞ்சிபுரம், கோயில்களின் நகரமாகவும், பட்டு விற்பனையில் உலகப் பிரசித்தி பெற்ற இடமாகவும் விளங்கி வருகிறது. காஞ்சிபுரத்தில் சுகாதாரம், சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட பணிகளை பெருநகராட்சி செய்து வருகிறது. 
இதில், சொத்து வரி, காலிமனை வரி, குடிநீர் வரி, கடை வாடகை, குத்தகை ஆகியவற்றிலிருந்து பெருநகராட்சிக்கு வருவாய் கிடைத்து வருகிறது. ஆண்டுக்கு இரண்டு முறை சொத்து வரி, காலிமனை, புதைவடிகால் திட்டம், குடிநீர் ஆகியவற்றுக்கு வரி வசூல் செய்யப்படுகிறது. அதேபோல், மாதந்தோறும் கடை வாடகை, ஆண்டுக்கு ஒருமுறை குத்தகை வசூல் நகராட்சிக்கு செலுத்தப்படுகிறது. 
அதன்படி, காஞ்சிபுரம் பெருநகராட்சியிலுள்ள 51 வார்டுகளில் மொத்தம் 50 ஆயிரத்து 656 குடியிருப்புகள் உள்ளன.
 2018-19 ஆம் ஆண்டு நிலவரப்படி (அக்டோபர்-மார்ச் வரை)  இக்குடியிருப்புகளிலிருந்து ரூ.21.50 கோடி சொத்து வரி வசூலாக வேண்டும். இதில், ரூ.9 கோடி மட்டும் வரி செலுத்தப்பட்டுள்ளது. 
அதுபோல், 18, 288 பேரிடம் இருந்து புதை வடிகால் வரியாக மொத்தம் ரூ.8.13 கோடி வசூலாக வேண்டும். ஆனால், ரூ.1.32 கோடி மட்டுமே புதை வடிகால் வரி செலுத்தப்பட்டுள்ளது. 
மேலும், காலி மனை வரியாக 3,899 காலிமனைகளிலிருந்து ரூ.1.82 கோடி வசூலாக வேண்டும். இதுவரை ரூ.1.04 கோடி மட்டுமே வசூலாகியுள்ளது. 
 அதேபோல், கடை வாடகை, குத்தகை ஆகியவற்றில் இருந்து வருமானமாக ரூ.9.38 கோடி வரவேண்டும். ஆனால், ரூ.2.10 கோடி மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது. தொழில் வரியாக 4,525 பேரிடம் இருந்து ரூ.3.86 கோடி வசூலாக வேண்டும். இதில், ரூ. 1.13 கோடி மட்டுமே வசூல் செய்யப்பட்டுள்ளது. 
மேலும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் என மொத்தம் 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு வரியாக ரூ.9.38 கோடி வசூலாக வேண்டும். ஆனால், ரூ.2.10 கோடி மட்டுமே இதுவரை செலுத்தப்பட்டுள்ளது. 
இந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் பெருநகராட்சியில் மொத்தம்  ரூ.62.79 கோடி வரி வசூலாக வேண்டும். இதுவரை ரூ.15.77 கோடி மட்டுமே வசூலாகியுள்ளது. எனவே, வரும் மார்ச் மாதத்துக்குள் ரூ.47.03 கோடி வரி வசூல் செய்யவேண்டும் என்பதே நகராட்சியின் இலக்காக உள்ளது. 
திணறும் பெருநகராட்சி: குறிப்பாக, குடிநீர் இணைப்பை பெற்றுள்ள வணிக நிறுவனத்தினர் வரி செலுத்தத் தவறுகின்றனர். இதற்காக நடவடிக்கை  எடுக்கும்போது குடிநீர் இணைப்பை துண்டித்து விட்டு, ஆழ்துளைக் கிணறு அமைத்துக் கொள்கின்றனர்.  மேலும், சில நிறுவனங்கள் குடிநீரை இதர பயன்பாடுகளுக்கும் பயன்படுத்துவதுடன், பெருநகராட்சிக்கு சேரவேண்டிய குடிநீர் வரியை முறையாக செலுத்துவதில்லை. வரி செலுத்த தவறும் நிறுவனங்களுக்குச் சென்று நடவடிக்கை எடுக்க முயன்றால், கால அவகாசம் கேட்கின்றனர். இதுபோன்ற சில நிறுவனங்கள் குடிநீர் இணைப்பு மற்றும் வடிகால் இணைப்பை முழுவதுமாக துண்டித்த பிறகே, வரியை செலுத்த முன்வருகின்றனர். இதனால், நகராட்சி அலுவலர்கள் அலைக்கழிப்புக்கு ஆளாகின்றனர். இதனால், நகராட்சி நிர்வாகம் வரி வசூல் செய்வதில் திணறி வருகிறது.
இதுகுறித்து நகராட்சி அலுவலர் ஒருவர் கூறியது: ஆண்டுக்கு இரண்டு முறை, ஆண்டுக்கொருமுறை, மாதம் ஒருமுறை என சொத்து வரி, குடிநீர் வரி, புதை வடிகால் வரி உள்ளிட்ட வரிகளை நகராட்சி வசூல் செய்து வருகிறது. உரிய நேரத்தில் வரி செலுத்துமாறு தண்டோரா மூலம் அவ்வப்போது அறிவுறுத்தப்படுகிறது. இருப்பினும், உரிய நேரத்தில் பலரும் வரிசெலுத்தத் தவறுகின்றனர். 
சாத்தனூரிலிருந்து..: குடிநீர்வரி செலுத்துவதில் வணிக நிறுவனங்கள் சுணக்கம் காட்டுகின்றன. நடவடிக்கை எடுத்தால், இணைப்பை துண்டித்துக்கொண்டு, ஆழ்துளைக் கிணறு  மூலம் நீரைப் பயன்படுத்துகின்றனர். பயன்படுத்திய குடிநீருக்கு வரியும் செலுத்துவதில்லை.
 நகராட்சி வழங்கும் குடிநீரில் துவர்ப்புத் தன்மை அதிகம் உள்ளதால், சிலர் குடிநீர் இணைப்பு பெற விருப்பம் தெரிவிப்பதில்லை. எனவே, சாத்தனூர் அணையிலிருந்து காஞ்சிபுரம் நகராட்சிக்கு குடிநீர் கொண்டு வர முயற்சி எடுத்து வருகிறோம். அதன்பிறகு, குடிநீர் இணைப்பு பெற அதிகமானோர் விருப்பம் தெரிவிப்பர். நிலுவையில் உள்ள வரி பாக்கியை செலுத்த இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், பெரும்பாலானோர் வரியை விரைந்து செலுத்த வேண்டும் என அறிவுறுத்தி வருகிறோம் என்றார்.  

More from the section

375 கிலோ வெடி மருந்துகள் பறிமுதல்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.3.20 கோடி பறிமுதல்
வேட்பாளர்களின் செலவு விவரங்கள் கண்காணிக்கப்படும்:  ஆட்சியர்
வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்
தேர்தல் விழிப்புணர்வு: பள்ளி மாணவர்களுக்குப் பரிசு