சனிக்கிழமை 23 மார்ச் 2019

டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ. மனு

DIN | Published: 22nd February 2019 03:37 AM


ஊரப்பாக்கத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செங்கல்பட்டு கோட்டாட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்தனர்.  
இந்த மனுவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டக் குழுஉறுப்பினர் சண்முகம் தலைமையில், ஊரப்பாக்கம் கிளைச்செயலர் சி.மணிவேல், கிளை உறுப்பினர்கள் குருசாமி, ராமானுஜம், சீனிவாசன், வாசு, சுப்பிரமணியன்,இளங்கோ, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலர் செங்கை இரா.தமிழரன் உள்ளிட்டோர் கோட்டாட்சியர் முத்துவடிவேலிடம் அளித்தனர். இந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: செங்கல்பட்டு வட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உள்பட்ட ஐயன்சேரி-மதுரை மீனாட்சிபுரம் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை ஒன்று பிப்.15-ஆம் தேதி திறக்கப்பட்டது. 
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த கூடுவாஞ்சேரி போலீஸார் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். 
இதையடுத்து, டாஸ்மாக் கடையை மூடுவதாக அதிகாரிகள் உறுதியளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். ஆனால், இதுவரையில் டாஸ்மாக் கடை மூடப்படவில்லை. இந்த டாஸ்மாக் கடை அமைந்துள்ள பகுதியில் குடியிருப்புகள், பள்ளிகள், கோயில்கள் உள்ளன. இந்த டாஸ்மாக் கடையினால் இப்பகுதி குடியிருப்பு வாசிகள் மற்றும் பெண்கள் சுதந்திரமாக நடமாடமுடியாது; மாணவ, மாணவியர் அச்சத்துடன் பள்ளிக்கூடம் சென்று வருகின்றனர்.  
ஏற்கெனவே இயங்கி வரும் டாஸ்மாக்  கடைகளை படிப்படியாக குறைப்பதற்கு நீதிமன்ற உத்தரவு வழிகாட்டியுள்ள நிலையில், புதிதாக டாஸ்மாக் கடையை குடியிருப்பு பகுதியில் திறந்திருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கருத்தில்கொண்டு புதிதாக திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
 

More from the section

375 கிலோ வெடி மருந்துகள் பறிமுதல்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.3.20 கோடி பறிமுதல்
வேட்பாளர்களின் செலவு விவரங்கள் கண்காணிக்கப்படும்:  ஆட்சியர்
வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்
தேர்தல் விழிப்புணர்வு: பள்ளி மாணவர்களுக்குப் பரிசு