24 பிப்ரவரி 2019

110 செ.மீ. உயர பெண்ணுக்கு பிரசவம் பார்த்து மருத்துவர்கள் சாதனை

DIN | Published: 12th September 2018 07:02 AM

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் முதல் முறையாக 110 செ.மீ. உயர கர்ப்பிணிக்கு அறுவைச் சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. அப்பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், குப்பந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் (31). கால்கள் ஊனமான இவரால் நடக்க முடியாது. இவரது மனைவி உமாமகேஸ்வரி (29). 10-ஆம் வகுப்பு வரை படித்துள்ள இவர், அக்னொட்ரோபில்சியா என்ற மரபணு கோளாறால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி. 110 சென்டி மீட்டர் மட்டுமே உயரமுள்ளவர்.
இந்தத் தம்பதிக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. நிறைமாத கர்ப்பிணியான உமா மகேஸ்வரிக்கு கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
உயரம் குறைந்த உமா மகேஸ்வரியின் இடுப்பு எலும்பு குறுகியதாக இருந்ததால், அறுவைச் சிகிச்சை மூலமே குழந்தை பிறக்கச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மகப்பேறு பிரிவு துறைத் தலைவர் ராஜேஸ்வரி தலைமையிலான மருத்துவக் குழுவினர் செய்த அறுவைச் சிகிச்சையால் கடந்த 4-ஆம் தேதி உமா மகேஸ்வரி, 2.3 கிலோ எடையிலான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இந்தக் குழந்தைக்கு எவ்வித குறைபாடும் இல்லை.
தங்கச் சங்கிலி வழங்கிய ஆட்சியர்: இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை நேரில் சென்று குழந்தைக்குத் தேவையான புதுத்துணி, மெத்தை, குடையை வழங்கி குழந்தையின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார். பின்னர், குழந்தைக்கு அருண்சுந்தர் என்று பெயர் சூட்டி, தனது சொந்தப் பணத்தில் வாங்கிய ஒரு பவுன் தங்கச் சங்கிலியை அருண்சுந்தருக்கு ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி அணிவித்தார். மேலும், வீடு இல்லாமல் தவித்து வந்த உமா மகேஸ்வரிக்கு பசுமை வீடு கட்டுவதற்கான உத்தரவு நகலையும் ஆட்சியர் வழங்கினார்.
நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் எஸ்.நடராஜன், மருத்துவமனைக் கண்காணிப்பாளர் எம்.ஏ.ஷிகீல் ஹகமது, துணைக் கண்காணிப்பாளர் பி.குப்புராஜ், மகப்பேறு பிரிவு துறைத் தலைவர் ராஜேஸ்வரி, மயக்கவியல் நிபுணர் ஸ்ரீதரன் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உடனிருந்தனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: இந்த அறுவைச் சிகிச்சையை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். இவர்களுக்கு விரைவில் தமிழக அரசிடம் இருந்து பாராட்டுச் சான்று பெற்றுத்தரப்படும் என்றார்.

More from the section

அதிமுகவில் பாமக இணைந்ததால் பாஜக அதிருப்தி: தொல்.திருமாவளவன்
திருமுறை விழா தொடக்கம்
துணை ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி
ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: திமுக கூட்டத்தில் தீர்மானம்