புதன்கிழமை 16 ஜனவரி 2019

ஆம்பூரில் 20 ஆண்டுகளாக  தூர்வாரப்படாத ஆனைமடுகு தடுப்பணை: சொந்த செலவில் தூர்வாரிய பொதுமக்கள்

DIN | Published: 12th September 2018 01:08 AM

ஆம்பூரில் கடந்த 20 ஆண்டுகளாக தூர்வாரப்படாத ஆனைமடுகு தடுப்பணையை பொதுமக்களே தூர்வாரும் பணியை திங்கள்கிழமை தொடங்கினர்.
ஆம்பூர் அருகே கம்பிக்கொல்லை பகுதியில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ், ஆனைமடுகு தடுப்பணை அமைந்துள்ளது. இந்த தடுப்பணைக்கு நாயக்கனேரி மலைப்பகுதியில் மழைபெய்யும் போது, மழைநீர் கரைபுரண்டு ஓடி வந்து இந்த தடுப்பணையில் சேகரிக்கப்படும். இந்த தடுப்பணை நிரம்பி ஆம்பூர் கானாற்று வழியாக உபரி நீர் பாலாற்றில் கலக்கும். இந்த தடுப்பணையால் ஆம்பூர் ரெட்டித்தோப்பு பகுதி மக்களுக்கு குடிநீர் பிரச்னையைத் தீர்க்க முடிந்தது. மேலும் அப்பகுதியில் உள்ள விவசாய கிணறுகளின் நீர்மட்டும் உயர்வதால் விவசாயிகளும் பெரும் பயன் அடைந்து வந்தனர்.
இருபுறமும் மலைகளுக்கு நடுவே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இந்த தடுப்பணையை தூர்வாரி 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. மேலும் விநாயகர் சதுர்த்திக்கு வைக்கப்படும் சிலைகள் இங்குதான் கரைக்கப்படுகின்றன. இந்நிலையில், தடுப்பணையில் மண் தூர்ந்து போய் ஆழம் நாளுக்குநாள் குறைந்து வருகிறது. இதனால் இந்தத் தடுப்பணையை தூர்வாரி, ஆழத்தை அதிகப்படுத்த வேண்டுமென ஆம்பூர் மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.  மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் என அனைவரும் தடுப்பணையை பார்வையிட்டுச் சென்றனர்.  எனினும் தூர்வார இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. தற்போது தடுப்பணை நீரின்றி வறண்டு காணப்படுகிறது.
இந்நிலையில், தற்போது மழைக்காலம் தொடங்க உள்ளதால், அதிக அளவு நீரைத் தேக்கி வைக்கும் வகையில், தடுப்பணையை தங்களது சொந்தச் செலவில் தூர்வார பொதுமக்கள்  முடிவு செய்தனர். அதன்படி, திங்கள்கிழமை காலை 2 பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு தடுப்பணையில் தூர்வாரும் பணியை பொதுமக்கள் தொடங்கினர். இப்பணியில், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், விவசாயிகள், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள் என கட்சிப் பாகுபாடின்றி அனைவரும் ஈடுபட்டுள்ளனர்.
அரசு செய்ய வேண்டிய பணிகளை அப்பகுதி மக்கள் முன்னின்று செய்து வரும் நிலையில், மாவட்ட நிர்வாகமும் அதில் பங்குகொண்டு தடுப்பணையை முழுமையாகத் தூர்வார வேண்டும், தடுப்பணையின் உயரத்தை அதிகப்படுத்தி தண்ணீர் தேக்கும் கொள்ளளவை அதிகரிக்கச் செய்ய வேண்டும். மேலும், பொழுதுபோக்கு அம்சம் இல்லாத ஆம்பூரில், தடுப்பணை நிரம்பும்போது படகுச் சவாரி விட நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

More from the section

பொங்கல் விழா: பாதுகாப்புப் பணியில் 1,500 போலீஸார்
ஜவ்வாதுமலையில் கி.பி. 8-ஆம் நூற்றாண்டு எழுத்துடை நடுகல்
சிப்காட் ஸ்ரீநவசபரி ஐயப்பன் கோயிலில் மகர ஜோதி தரிசனம்
கல்வி நிலையங்களில் பொங்கல் விழா
கண் தானம்