சனிக்கிழமை 16 பிப்ரவரி 2019

கணக்கில் வராத பணம் பறிமுதல்: நகர ஊரமைப்பு துணை இயக்குநர் உள்பட  இருவர் பணியிடை நீக்கம்

DIN | Published: 12th September 2018 01:10 AM

வேலூர் மண்டல நகர ஊரமைப்பு துணை இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 3.28 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக மண்டல நகர ஊரமைப்பு துணை இயக்குநர் உள்பட இருவர் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களை உள்ளடக்கிய வேலூர் மண்டல நகர ஊரமைப்பு துணை இயக்குநர் அலுவலகம் வேலூர் சத்துவாச்சாரியில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் மனைப்பிரிவுகளுக்கு அனுமதி பெறுவதற்கு அதிக அளவில் லஞ்சம் பெறுவதாக வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. சரவணகுமார் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீஸார் வேலூர் மண்டல நகர ஊரமைப்பு துணை இயக்குநர் அலுவலகத்தில் கடந்த 7-ஆம் தேதி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ. 3.28 லட்சம் ரொக்கப் பணம் இருந்தது தெரியவந்தது. 
அந்தப் பணத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், துணை இயக்குநர் (பொறுப்பு) சுப்பிரமணியம், அங்கு பணிபுரியும் 11 பணியாளர்கள் ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தினர். 
லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் சோதனையில் கணக்கில் வராத ரூ. 3.28 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக நகர ஊரமைப்பு துணை இயக்குநர் அலுவலகத்துக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 
இதையடுத்து, முதல்கட்டமாக மண்டல நகர ஊரமைப்பு துணை இயக்குநர் (பொறுப்பு) சுப்பிரமணியம், மேற்பார்வையாளர் சகாதேவன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து நகர ஊரமைப்பு இயக்குநரகம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
 

More from the section

தன்வந்திரி பீடத்தில் சஞ்சீவினி திருமஞ்சனம்
சிலம்பப் போட்டி: சாதனை மாணவர்களுக்குப் பாராட்டு


துப்புரவுப் பணியாளர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை பயிற்சி

சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் மாசித் திருவிழா


வேலூர் கோட்டையில் காதலர்களுக்கு அனுமதி மறுப்பு