20 ஜனவரி 2019

கி.பி.14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "கோமாரிக் கல்' கண்டெடுப்பு

DIN | Published: 12th September 2018 01:08 AM

திருப்பத்தூர் அருகே கி.பி. 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "கோமாரிக்கல்' கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரிப் பேராசியர்கள் ஆ.பிரபு, சு.சிவசந்திரகுமார் மற்றும் சமூக ஆர்வலர் வே.ராதாகிருஷ்ணன், முத்தமிழ் ஆகியோர் திருப்பத்தூரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள எலவம்பட்டியில் களஆய்வில் ஈடுபட்டனர். அப்போது கி.பி.14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "கோமாரிக்கல்' மண்ணில் புதைந்தவாறு இருப்பதைக் கண்டறிந்தனர். 
இதுகுறித்து பேராசிரியர் ஆ.பிரபு கூறியதாவது: எலவம்பட்டி மாரியம்மன் கோயிலின் அருகே இக்கல் கண்டெடுக்கப்பட்டது. இவ்வகைக் கல்லை சந்நியாசிக் கல், கோமாரிக் கல், மந்தைக் கல், மாட்டுத் தம்பிரான் கல்,  மந்திரக் கல் என்ற பல பெயர்களில் அழைப்பதுண்டு. தமிழகத்தின் சில பகுதிகளில் குறிப்பாக தருமபுரி, சேலம், வட ஆற்காடு, தென் ஆற்காடு ஆகிய மாவட்டங்களில் இக்கல்லை வழிபடுவது வழக்கம். கால்நடைகளே மக்களது செல்வக் குறியீடாக இருந்த அக்காலத்தில் கால்நடைகளுக்கு "கோமாரி' எனும் நோய் தாக்குதல் தமிழகமெங்கும் பரவலாகத் தாக்கியது. இந்நோய் ஆடு, பன்றி, மாடுகளைத் தாக்கியது. இவற்றில் மாடுகளே அதிக அளவில் பாதிக்கப்பட்டதால் அவை, உணவு உண்ணாமலும், பால் சுரக்காமலும் இறந்தன.
தற்போது, இந்நோய்க்கான தடுப்பூசிகளும், மருந்துகளும் வந்துவிட்டன. உடனடி மருந்துகள் கண்டறியப்படாத அக்காலத்தில் இந்த நோயிலிருந்து கால்நடைகள் விடுபட, சீர்செய்யப்பட்ட ஒரு பலகைக் கல்லில் சில நூதனக் குறியீடுகளைக் கட்டங்களுக்குள் இட்டு, அதனுள் மந்திரச் சொற்களை எழுதி ஊர் நடுவே நட்டுவைப்பர். பொதுவாக இவ்வகைக் கற்களில் 18 முதல் 108 வரைகூட கட்டங்கள் வரையப்பட்டிருக்கும்.
இவ்வூரில் உள்ள கோமாரிக் கல்லில் 18 கட்டங்கள் வரையப்பட்டுள்ளன. கல்லின் இடதுபுற மூலையில் எழுத்துகள் இருந்தபோதிலும் அவை தெளிவாக இல்லை. கோமாரிக்கல் வழிபாடு ஒவ்வொரு பகுதியிலும் வேறுபடுகின்றன. 
அக்காலத்தில் நோயுற்ற மாடுகளை இந்தக் கல்லின் அருகே அழைத்து வந்து வழிபாடு செய்வார்கள். சில இடங்களில் மாடுகளை இந்தக் கல்லில் கட்டி வைத்துவிடுவார்கள். சில இடங்களில் கோமாரிக் கல்லின் மீது மஞ்சள் கலந்த நீரை ஊற்றி, கல்லிலிருந்து வழியும் நீரை மாடுகளை தாண்டிச் செல்ல வைப்பார்கள். சில இடங்களில் மாடுகளை இந்தக் கல்லைச் சுற்றி வர வைப்பார்கள். 
மாட்டுப் பொங்கல் தினத்தன்று அனைத்து மாடுகளையும் இக்கல்லின் முன் அழைத்து வந்து வழிபாடு செய்து மஞ்சள் கலந்த நீரைக் கல்லில் ஊற்றி, வழியும் நீரை மாடுகளை தாண்டச் செய்து வழிபாடுகள் செய்கின்றனர். எலவம்பட்டியில் உள்ள இக்கல்லை தம்புரான் கல், மாட்டுக் கல் என்றும் இப்பகுதி மக்கள் அழைக்கிறார்கள். இவ்வூரில் இக்கல்லை
தொடர்ந்து பல ஆண்டுகாலமாக வழிபாடு செய்து வருகின்றனர்.  இந்தக் கோமாரிக் கல்லின் அமைப்பு கி.பி. 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்க வாய்ப்புள்ளது என்றார் அவர்.

More from the section

மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபட வேண்டும்: ஐஐடி பேராசிரியர் மங்கள சுந்தர்கிருஷ்ணன்
மேல்பாடி அருகே பிடிபட்ட 12 அடி நீள மலைப் பாம்பு
ஆம்பூர் பகுதியில் தொடரும் மணல் கொள்ளை: அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு
விவசாயக் கடனை தள்ளுபடி செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்
வாடகை பாக்கி: நகராட்சி கடைக்கு சீல்'