17 பிப்ரவரி 2019

மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் கொடுத்து வெளியேற்றிய தலைமையாசிரியை: அரசுப் பள்ளியில் பரபரப்பு

DIN | Published: 12th September 2018 01:09 AM

திருப்பத்தூர் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் திடீரென மாணவ, மாணவிகளுக்கு தலைமையாசிரியை மாற்றுச் சான்றிதழ் வழங்கி வெளியேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
 திருப்பத்தூரை அடுத்த பொம்மிக்குப்பம் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பல்வேறு கிராம பகுதிகளில் இருந்து சுமார் 638 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.மொத்தம் 22 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர்.
இந்நிலையில், அந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரியும் சாந்தி, கடந்த
6-ஆம் தேதி பள்ளியில் படிக்கும் 11 மாணவ, மாணவிகளுக்கு பள்ளி மாற்றுச் சான்றிதழை வழங்கி வெளியேற்றினாராம். இதனையடுத்து, திங்கள்கிழமை காலாண்டுத் தேர்வு எழுத மாணவர்கள் தங்கள்  பெற்றோர்களுடன் பள்ளிக்கு வந்து, மாற்றுச் சான்றிதழ் வழங்கியதற்கான காரணத்தைக் கேட்டுள்ளனர். அதற்கு தலைமையாசிரியை தகுந்த பதிலளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், மாற்றுச் சான்றிதழ் பெற்ற மாணவர்கள் பள்ளியில் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. இதனால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, பெற்றோர்கள் மாவட்டக் கல்வி அலுவலர் சாம்பசிவத்திடம் இதுகுறித்து புகார் அளித்தனர்.
அதிகாரிகள் விசாரணை
இதுகுறித்து, மாவட்டக் கல்வி அலுவலர் என்.சாம்பசிவம், பள்ளி துணை ஆய்வாளர் டி.தாமோதரன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை பள்ளிக்குச் சென்று, தலைமையாசிரியர், பெற்றோர் ஆசிரியர் சங்கம், மாணவர்கள் ஆகியோரிடம் சுமார் 2 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர், இதுகுறித்து மாவட்டக் கல்வி அலுவலர் சாம்பசிவம் செய்தியாளர்களிடம் கூறுகையில், மாணவ, மாணவிகளின் ஒழுங்கின்மை காரணமாக பள்ளித் தலைமையாசிரியை மாற்றுச் சான்றிதழ் வழங்கியுள்ளார். ஆகையால், அந்த மாணவ, மாணவிகளை வேறு பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.

More from the section

முருகன், நளினி உண்ணாவிரதம் வாபஸ்: சந்திப்புக்கு தடை நீடிப்பு
ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி கோரி கிராம மக்கள் சாலை மறியல்
ஜோலார்பேட்டையில் நின்று செல்லும் கோவை-திருப்பதி இன்டர்சிட்டி ரயில்
அரசுப் பள்ளி வகுப்பறையில் பள்ளி நேரத்தில் கணித ஆசிரியைக்கு வளைகாப்பு விழா
சிஐஎஸ்எஃப் பயிற்சி மையத்தில் ரத்த தான முகாம்