வியாழக்கிழமை 21 மார்ச் 2019

அரசு சார்பில் கட்டப்படும் கட்டுமானங்கள்: தகவல் பலகை வைக்கக் கோரிக்கை

DIN | Published: 19th November 2018 04:32 AM

அரசு சார்பில் கட்டப்பட்டு வரும் கட்டுமானங்களின் முன்பு அடிப்படைத் தகவல்கள் அடங்கிய பதாகைகள் வைக்கவேண்டும் என கோவை சிட்டிசன்ஸ் வாய்ஸ் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் சி.எம்.ஜெயராமன், செயலர் சண்முகம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:
நாடு முழுவதிலும் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அரசு சார்பில் கட்டப்பட்டு வரும் பாலங்கள், கலையரங்கம், சமுதாயக் கூடங்கள் உள்ளிட்ட கட்டுமானங்களின் முன்பு அவை குறித்த தகவல்கள் அடங்கிய பதாகைகள் வைக்கவேண்டும் என உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, அந்தக் கட்டுமானத்தை மேற்கொண்டு வரும் கட்டுமான நிறுவனத்தின் பெயர், முகவரி, தொடர்பு எண், எந்தத் துறையின் சார்பில் அது கட்டப்படுகிறது, அந்தத் துறையின் அதிகாரிகள் பெயர், திட்டம் முடிக்கப்படும் தேதி உள்ளிட்ட விவரங்கள் அதில் இடம் பெற்றிருக்க வேண்டும். இதன் மூலமாக பொதுமக்கள் அதைப் பார்த்து, தேவையான ஆலோசனைகளை அரசுக்கு வழங்க ஏதுவாக இருக்கும் எனும் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியரும், மாநகராட்சி ஆணையரும் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து அரசுதுறைகளின் சார்பில் கட்டப்பட்டு வரும் கட்டுமானங்களின் முன்பு தகவல் பதாகைகள் வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

More from the section

தொழிற்சங்கத் தலைவர் தியாகி ஏ.சுப்ரமணியம் காலமானார்
ஆபாச விடியோ வழக்கு: பொள்ளாச்சியில் கடைகள் அடைப்பு


வெளிநாட்டு கெளுத்தி மீன்களுக்குத் தடை: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

தேர்தல் விழிப்புணர்வுப் பேரணி
இரு சக்கர வாகனம் மோதி முதியவர் சாவு