செவ்வாய்க்கிழமை 22 ஜனவரி 2019

கல்வி நிறுவனங்களில் பாரதியார் நினைவு நாள் அனுசரிப்பு

DIN | Published: 12th September 2018 06:37 AM

கோவையில் கல்வி நிறுவனங்கள் சார்பில் பாரதியாரின் நினைவு நாள் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.
பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நினைவு நாள் நிகழ்ச்சிக்கு துணைவேந்தர் பொறுப்புக் குழு உறுப்பினர்கள் ந.ஜெயக்குமார், பெ.திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) சரவணச்செல்வன் வரவேற்றார். இதில், "பாட்டுக்கொரு புலவன் பாரதி' என்ற தலைப்பில் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் பேசியதாவது:
பாரதியார் இந்த காலத்துக்கு மட்டுமின்றி இனி வரும் எல்லா யுகங்களுக்கும் பொருந்திப் போகின்ற ஒரு யுகக்கவிஞன். வாழும் காலத்தில் இருந்து கொண்டு எதிர்காலத்தைப் பற்றி நிறைய சிந்தித்த அற்புதமான ஒரு சிந்தனையாளன். பாரதியின் இலக்கியங்கள் எத்தனை முறை படித்தாலும் தீர்ந்து போகாத வளமும் பொருண்மையும் உடையவை.
"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்' என்று தமிழ் மொழியைத் தலைமேல் வைத்துக் கொண்டாடியவர் பாரதியார். அவர் போற்றிய தமிழ் மொழியைக் காப்பாற்ற தாய்மொழியில் பேசுவதும், தாய்மொழியிலேயே சிந்திப்பதையும் தவிர நமக்கு வேறு வழியில்லை என்பதை இன்றைய இளைஞர்கள் உணர வேண்டும் என்றார் அவர்.
தமிழ்த் துறைத் தலைவர் தே.ஞானசேகரன் நன்றி கூறினார். இதில், பல்வேறு துறைகளின் பேராசிரியர்கள், மாணவர்கள், அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பாரதியாரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிர்மலா மகளிர் கல்லூரி
நிர்மலா மகளிர் கல்லூரியின் தமிழ்த் துறை சார்பில் நடைபெற்ற பாரதி விழாவில், துறைத் தலைவர் அ.அருள்சீலி வரவேற்றார். கல்லூரி முதல்வர் பவுலின் மேரி ஹெலன் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில், கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷிணி பங்கேற்று பேசினார்.
இதைத் தொடர்ந்து பாரதி விழாவையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவி கு.வீணா நன்றி கூறினார்.
ஸ்ரீ கிருஷ்ணா கலை,  அறிவியல் 
கல்லூரி கோவை ஸ்ரீ கிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பாரதியார் நினைவு தின நிகழ்வுக்கு கல்லூரி முதல்வர் பி.பேபி ஷகிலா தலைமை வகித்தார். தமிழ்த் துறைத் தலைவரும், துணை முதல்வருமான விஜய சாமுண்டேஸ்வரி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ-மாணவியர் உள்ளிட்டோர் பாரதியாரின் உருவப் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து பாரதியார் கவிதை வாசிப்பு, பாரதி குறித்த சிறப்புரைகள் நடைபெற்றன.
சங்கரா அறிவியல், வணிகவியல் கல்லூரி
கோவை சங்கரா அறிவியல், வணிகவியல் கல்லூரியின் தமிழ்த் துறை, பாரதி பாசறை ஆகியவற்றின் சார்பில் பாரதி நினைவு நாள் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. தமிழ்த் துறைத் தலைவர் பூ.மு.அன்பு சிவா வரவேற்றார். பாரதி பாசறையின் தலைவர் டி.எஸ்.மோகன் சங்கர் தலைமை வகித்தார். எழுத்தாளரும், இயக்குநருமான பாரதி கிருஷ்ணகுமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பாரதியின் வாழ்க்கை வரலாறு, படைப்புகள் குறித்துப் பேசினார். பாரதி பாசறையின் செயலர் பா.ஜான்பீட்டர், கல்லூரி முதல்வர் எச்.பாலகிருஷ்ணன், பல்வேறு துறைகளின் பேராசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். மாணவர் ம.நாகராஜ் நன்றி கூறினார்.
ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை, அறிவியல் கல்லூரி தமிழ்த் துறையின் தமிழ் இலக்கியப் பேரவை சார்பில் பாரதியார் நினைவு நாள் சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது. தமிழ்த் துறைத் தலைவர் வெ.நிர்மலா தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக ம.திருமூர்த்தி பங்கேற்று பாரதியாரின் சிந்தனைகள் குறித்து உரையாற்றினார். இதில், பேராசிரியர்கள், மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் இடையர்பாளையம் காந்தியடிகள் பள்ளியில் பாரதியாரின் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. அமைப்பின் இடையர்பாளையம் கிளைச் செயலர் மயில்சாமி தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். இதைத் தொடர்ந்து பள்ளியில் உள்ள பாரதியாரின் முழு உருவச் சிலைக்கு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து இடையர்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கிராமியப் பாடகர் தமிழ்வாணன் பங்கேற்று பாரதியாரின் பாடல்களைப் பாடினார். இதில், அமைப்பின் மாவட்டச் செயலர் மு.ஆனந்தன், மாநிலக் குழு உறுப்பினர் உமா மகேஷ்வரி, அருள்மணி, சுரேஷ்குமார், சி.துரைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கலை இலக்கியப் பெருமன்றம்
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் கோவை மாவட்டக் குழு சார்பில் பாரதியாரின் நினைவு நாளையொட்டி, பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பாரதியின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
 அமைப்பின் மாவட்டச் செயலர் ப.பா.ரமணி, பொருளாளர் எம்.வி.ராஜன், துணைத் தலைவர் கா.முருகானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
எஸ்.பி.ஓ.ஏ. பள்ளி
கோவை எஸ்.பி.ஓ.ஏ. பள்ளியில் பாரதியாரின் நினைவு நாளையொட்டி மாணவர்களுக்கு கட்டுரை, ஓவியம், பாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. மேலும், பாரதியைப் போன்று வேடமணிந்த மாணவர்கள், அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
 போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் கீதா கோபிநாத் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.

More from the section

மதுபோதையில் தகராறு: போலீஸ்காரர் உள்பட 6 பேர் கைது
காய்ச்சல்: பள்ளி மாணவி சாவு
இருசக்கர வாகனம் மீது கார் மோதல்: 2 பள்ளி மாணவர்கள் சாவு
கூட்டுறவு சங்க செயலாளரை  கடத்தி ரூ. 50 லட்சம் பறிப்பு: 3 பேர் கைது
மேட்டுப்பாளையம்-கோத்தகிரி மலைப் பாதை விபத்தில் இளைஞர் சாவு