புதன்கிழமை 20 பிப்ரவரி 2019

சுவாமி விவேகானந்தரின் கருத்துகளுக்கு ஏற்ப புதிய இந்தியாவைப் படைப்போம்! பிரதமர் நரேந்திர மோடி

DIN | Published: 12th September 2018 06:38 AM

சுவாமி விவேகானந்தரின் கருத்துகளுக்கு ஏற்ப புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
அமெரிக்காவின் சிகாகோ நகரில் சர்வ சமயப் பேரவையில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய உரையின் 125 ஆண்டைக் கொண்டாடும் வகையில், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் சார்பில் கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: 
கடந்த 1893 ஆம் ஆண்டு செப்டம்பர் 11-இல் சிகாகோ நகரில் நடைபெற்ற சர்வ சமய மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய உரை உலகப் புகழ் பெற்றது. இந்த உரையை பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே கொண்டுசெல்லும் வகையில் ராமகிருஷ்ண மடம் சார்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. 
தற்போது நாடு எதிர்கொள்ளும் பல முக்கியமான பிரச்னைகள் குறித்து இளைய தலைமுறையினர் விவாதித்து தீர்வு காண முயற்சிக்கின்றனர். பங்கெடுப்பது,  ஒற்றுமையாகச் செயல்படுவது, நாடு சந்திக்கும் சவால்களை எதிர்கொள்வது போன்ற தத்துவத்தைத்தான் சுவாமி விவேகானந்தர் முன்வைத்தார். இந்தியாவின் கலாசாரம், தத்துவம், பாரம்பரியத்தின் பெருமைகளை உலகம் முழுவதும் அவர் கொண்டு சென்றார். 
ஆங்கிலேயர்களின் ஆட்சியில் நாடு வறுமை, சமூகத் தீமைகளால் பின்தங்கி இருந்தது. இந்திய கலாசாரம், தத்துவங்கள் மீது பல நூற்றாண்டுகளாகப் படிந்து இருந்த மாசினை விவேகானந்தர் போக்கினார். சிகாகோ மாநாட்டில் நமது நாட்டின் வேத தத்துவத்தின் பெருமைகளை உலகிற்கு எடுத்துரைத்தார். இந்தியா ஆன்மிக தத்துவங்களால் நிறைந்தது என்பதை அனைவருக்கும் உணர்த்தினார்.
இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்துக்கு புதிய உத்வேகத்தையும், நம்பிக்கையையும் கொடுத்தவர் அவர். நம்மால் முடியும் என்ற மந்திர வார்த்தைகளால் நாட்டு மக்களை விழிப்படையச் செய்தார். இதன் மூலம் நாட்டு மக்களிடையே தன்னம்பிக்கையை வளர்த்தெடுத்தார். உன் மீது நம்பிக்கை கொள், நாட்டுப்பற்று கொள் என்பது விவேகானந்திரின் தாரக மந்திரம். அவரது வார்த்தைகளுக்கு ஏற்ப நமது நாடு தன்னம்பிக்கையோடு நடைபோடுகிறது.
இந்தியாவின் பாரம்பரியமான யோகக் கலையையும் ஆயுர்வேதத்தையும் உலகம் அங்கீகரித்துள்ளது. நாம் மங்கள்யான் போன்ற செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி உலக நாடுகளை வியப்படையச் செய்துள்ளோம். இளைய தலைமுறையினர், ஏழை மக்களிடையே தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் நோக்கில் பணியாற்றி வருகிறோம்.
இளம் பொறியாளர்கள், தொழில்முனைவோர், விஞ்ஞானிகள் நமது நாட்டை புதிய பாதைக்குக் கொண்டு செல்கின்றனர். எதிர்கால இந்தியா இளைஞர்களின் கையில் தான் உள்ளது. இளமை, சக்தி, ஆரோக்கியம், கூர்மையான அறிவு இருந்தால் கடவுளை அடைய முடியும் என சுவாமி விவேகானந்தர் நம்பிக்கை கொண்டு இருந்தார். அதற்கு ஏற்ப இன்றைய இளைஞர்கள் பயணிக்கின்றனர். இளைய தலைமுறையினரை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது. 
நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகின்றன. கல்வி பயின்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளபோதிலும், வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொள்வதில் பின்தங்கியுள்ளதற்கு நமது கல்வி முறையே காரணம். எனவே இளைய தலைமுறையினரிடம் திறனை வளர்க்க மத்திய அரசு தனி அமைச்சகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
மேலும் இளைஞர்கள் புதிய தொழில் தொடங்கி தங்களது கனவை நனவாக்க முத்ரா திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கப்படுகிறது. இளைஞர்களின் புதிய சிந்தனைகள்  ஸ்டார்ட்அப் இந்தியா திட்டம் மூலம் ஊக்குவிக்கப்படுகின்றன. புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும், அதற்கான சூழலை ஏற்படுத்தும் வகையிலும், நாடு முழுவதும் ஐந்து ஆண்டுகளில் 5,000 அடல் ஆய்வகங்கள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 
சமூக, பொருளாதார நிலைகளில் ஏழை மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட வேண்டும் என்ற விவேகானந்தரின் கருத்துக்கு ஏற்பவும், நாட்டில் நிலவும் வறுமையை அகற்றும் நோக்கிலும் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. சுவாமி விவேகானந்தரின் கருத்துக்களுக்கு ஏற்ப புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்றார்.
பின்னர் பார்வையற்ற மாணவர் சபரி வெங்கட், விவேகானந்தரின் சிகாகோ உரையை தொகுத்துப் பேசினார். 
இந்த நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா கே.பாண்டியராஜன், சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கௌதமானந்தர், குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் இணை தாளாளர் சங்கர் வாணவராயர், கொங்குநாடு கலை, அறிவியல் கல்லூரியின் செயலாளர் வாசுகி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

More from the section

கோவை அரசு மருத்துவமனையில் ரத்தம் செலுத்தப்பட்ட சிறுமிக்கு எச்ஐவி பாதிப்பு: பெற்றோர் புகார்; மருத்துவமனை மறுப்பு
காதல் திருமணம் செய்த இளைஞரை காரில் கடத்திய கும்பல்
உயிரிழந்த வீரர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம்: மாதா அமிர்தானந்தமயி மடம் அறிவிப்பு
காரமடை தேர்த் திருவிழா: பிப்ரவரி 19, 20 வரை 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் சார்பில் விவாஹ மாலை டாட் காம் நாடகம்