24 பிப்ரவரி 2019

பிணையில் விடுவிக்க போலி மருத்துவச் சான்றிதழ்: 2 அரசு மருத்துவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

DIN | Published: 12th September 2018 06:40 AM

போதைப் பொருள் வழக்கில் கைதான இளைஞரை பிணையில் விடுவிக்க தாக்கல் செய்யப்பட்ட மருத்துவச் சான்றிதழ்கள் போலியானவை என்று நிரூபணமாகியுள்ளதால், 2 அரசு மருத்துவர்கள், வழக்குரைஞர் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு கோவை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
பெங்களூருவில் இருந்து போதை ஊசி, மருந்துகளை வாங்கி வந்து கோவையில் அதிக விலைக்கு விற்பனை செய்தது தொடர்பாக, கோவையைச் சேர்ந்த சாய் இமானுவேல் (28), முகமது ஷிகாப் (22), ஜூல்பிகர் அலி (24), முகமது அனாஸ் (24) ஆகியோரை கோவை-காட்டூர் காவல் துறையினர் ஜூலை 24ஆம் தேதி கைது செய்தனர். 
முகமது ஷிகாப் தனக்கு வலிப்பு நோய் இருப்பதாலும், திருமணம் நடைபெற உள்ளதாலும்  பிணையில் விடுவிக்கும்படி கோவை இன்றியமையாப் பண்டங்கள் தனி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும், சித்தாபுதூரில் கிளினிக் நடத்தி வரும் மருத்துவர் ராமகிருஷ்ணன் பரிந்துரையின் பேரில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் உஷா, மன்சூர் ஆகியோர் அளித்த மருத்துவச் சான்றிதழ்கள் நீதிமன்றத்தில் ஏற்கெனவே சமர்ப்பிக்கப்பட்டன.  
இந்த மருத்துவச் சான்றிதழ்களின் மீது போலீஸாருக்கும், நீதிமன்றத்துக்கும் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து இந்த மருத்துவச் சான்றிதழ்களின் மீதான உண்மைத் தன்மை குறித்து உரிய விசாரணை நடத்தி அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு கோவை அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையர் (டீன்) அசோகனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்பேரில் விசாரணை நடத்தி அதன் அறிக்கையும் நீதிமன்றத்தில் ஏற்கெனவே சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. 
இந்த வழக்கு மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, முகமது ஷிகாப் தரப்பில் பிணையில் விடுவிக்க தாக்கல் செய்யப்பட்ட சான்றிதழ்கள் போலியானவை என்று தெரியவந்தது. 
இதையடுத்து, அவருக்கு சான்றிதழ்கள் வழங்கிய நரம்பியல் நிபுணர் ராமகிருஷ்ணன், அரசு மருத்துவர்கள் உஷா, மன்சூர், இந்த வழக்கில் ஆஜரான வழக்குரைஞர் ஜக்காரியா, அரசு மருத்துவமனை ஊழியர் பீர் முகமது, போலி திருமணப் பத்திரிகை தயார் செய்து கொடுத்த ஷிகாப்பின் அண்ணன் முகமது சாகித் ஆகியோர் மீது கோவை மாநகர காவல் ஆணையர் மேற்பார்வையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி (பொறுப்பு) சி.சஞ்சய்பாபா உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞர் எஸ்.பி.சந்திரசேகர்  ஆஜரானார். 

More from the section

நாட்டின் முன்னேற்றம் குறித்த கனவும் முக்கியம்: பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர்
ஆற்றல் பாதுகாப்பு பயிற்சி வகுப்பு
நேஷனல் மெட்ரிக். பள்ளியில் யானைகள் குறித்த நிகழ்ச்சி
வாகனம் மோதி இளைஞர் சாவு
வாழைத் தோட்டத்தில் புகுந்து சேதப்படுத்திய ஒற்றை யானை