வெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019

பிற மதங்களின் நல்ல கருத்துக்களை ஏற்க வலியுறுத்தியவர் விவேகானந்தர்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

DIN | Published: 12th September 2018 06:40 AM

ஒவ்வொரு மதமும் உயர் பண்புகள் உடைய மனிதர்களை உருவாக்குவதால் பிற மதங்களில் உள்ள நல்ல கருத்துகளையும் நாம் ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தியவர் சுவாமி விவேகானந்தர் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசினார்.
அமெரிக்காவின் சிகாகோவில் நடந்த சர்வ சமய மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் சொற்பொழிவாற்றியதன் 125 ஆம் ஆண்டு விழா,  கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
வித்யாலயா கல்வி நிறுவனங்களின் செயலர் சுவாமி கரிஷ்டானந்தர் வரவேற்றார். ராமகிருஷ்ண மிஷன் விவேகானந்தா பல்கலைக்கழக துணைவேந்தர் சுவாமி ஆத்மபிரியானந்தர் ஆசியுரை வழங்கினார். தேசிய திறந்தவெளிப் பள்ளியின் தலைவர் சந்திர பூஷண் சர்மா சிறப்புரையாற்றினார்.  
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசியதாவது:
ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கல்வி நிறுவனங்கள், பின்தங்கியோர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட  அடித்தட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. 
தற்போதைய உலகில் அனைத்து சவால்களையும் சந்திக்கவும், தீர்வு காணவும் ஒரே வழி ஆன்மிகம், ஒழுக்க நெறி சார்ந்த கல்வியே ஆகும். சுவாமி விவேகானந்தர் இந்தியக் கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்ட நவீன அறிவியல் கல்வியுடன் ஆன்மிகத்தையும் வலியுறுத்தினார்.
அவர் ஒரு புதுமைப் படைப்பாளி. இந்த நாடு அனைத்துத் துறைகளிலும் முன்னேற வேண்டும் என கனவு கண்டார்.  ஒவ்வொரு மதமும் உயர் பண்புகள் உடைய மனிதர்களை உருவாக்குவதால் பிற மதங்களில் உள்ள நல்ல கருத்துகளையும் நாம் ஏற்க வேண்டும் என வலியுறுத்தியவர் சுவாமி விவேகானந்தர். 
உலக அமைதியைக் காக்க சகிப்புத்தன்மை அவசியம் என்று அவர் போதித்தார். 
ஒரு நாடு எந்தத் துறையில் வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்றாலும் கல்வி மிக முக்கியம். மாணவர்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம். லஞ்சம், ஊழல் அற்ற நாட்டை மாணவர்களால்தான் உருவாக்க முடியும் என்றார்.
தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளை ஆளுநர் வழங்கினார். வித்யாலய கல்வி நிறுவனங்களின் உதவிச் செயலர் சுவாமி நிர்மலேஷானந்தர் நன்றி கூறினார்.
 

More from the section

சிறுமிக்கு எய்ட்ஸ் தொற்று ரத்தம்: சிகிச்சை அளிப்பதில் குறைபாடு: அரசு மருத்துவமனை மீது பெற்றோர் புகார்
திமுக முன்னாள் எம்.பி. க.ரா.சுப்பையனின் மறைவுக்கு இரங்கல் கூட்டம்
விளைநிலத்தில் திடீர் தீ 
கல்லூரி மாணவி ஓட்டிச் சென்ற கார் மோதி இளைஞர் படுகாயம்: போலீஸார் விசாரணை

தனியார் மருத்துவமனை ஊழியர் வீட்டில் 
33 பவுன் நகைகள் திருட்டு