சனிக்கிழமை 16 பிப்ரவரி 2019

தமிழகத்தில் அடிப்படை உரிமைகள் மறுப்பு: மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டனம்

DIN | Published: 12th September 2018 01:23 AM

தமிழ்நாட்டில் மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு நசுக்கப்படுவதாக  மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
 இதுகுறித்து, அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் கண.குறிஞ்சி, மாநிலச் செயலர் இரா. முரளி ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:
 சேலம் பசுமை வழிச் சாலை திட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளை சந்திப்பதற்காகச் சென்றபோது, வாழ்க விவசாயிகள் இயக்கத்தின் பொறுப்பாளர் யோகேந்தர் யாதவ், அவரது இயக்கத்தினர் அண்மையில் சேலம் காவல் துறையினரால் சட்ட விரோதமாகக் கைது செய்யப்பட்டனர். கடுமையான எதிர்ப்புக்குப் பிறகே அனைவரும் விடுதலை செய்யப் பட்டனர்.
 பொதுவுடைமை போராளிகள் அப்பு,  பாலன் ஆகியோரை  நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் தியாகிகள் நினைவு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, தருமபுரி மாவட்டம், நாயக்கன் கொட்டாய் பகுதியில் ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் நடப்பு ஆண்டில் செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெறவுள்ள நிகழ்ச்சியில், அனைத்து ஜனநாயக சக்திகளும் கலந்துகொள்ளும் கூட்டியக்கம் முன்னெடுக்கப்பட்டது. அதற்கு காவல் துறையும் வாய்மொழி அனுமதி வழங்கியது. 
 ஆனால், இது தொடர்பாக அப்பகுதியில்  பரப்புரை மேற்கொண்ட ரமணி, சித்தானந்தம், ராமசந்திரன், வேடியப்பன் ஆகியோர் பல்வேறு சட்டப் பிரிவுகளில் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதை மக்கள் சிவில் உரிமைக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
 தமிழ்நாட்டில் இதுபோல் சட்ட விரோதமாக கைது செய்யப்படும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுவது ஜனநாயகத்தையே கேலிக் கூத்தாக்கிவிடும். எனவே, இத்தகைய எதேச்சதிகாரப் போக்கை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

More from the section

மத்திய அரசின் அணுகுமுறை சரியல்ல
தமிழகத்தில் வலுவான கூட்டணி அமைக்கப்படும்: பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா
மாநில விளையாட்டுப் போட்டியில் கொங்கு பாலிடெக்னிக் சாம்பியன்
மல்யுத்தப் போட்டியில் பதக்கம் வென்ற பாரதி வித்யாலயா மாணவ, மாணவியர்

பாசன விவசாயிகள் செயல்பாடு குறித்து அறிய
பொதுப் பணித் துறை பொறியாளர்கள் வருகை