வெள்ளிக்கிழமை 18 ஜனவரி 2019

"பவானிசாகர் அணையின் நீர் தேங்கும் அளவு 105 அடி உயரம்'

DIN | Published: 12th September 2018 01:18 AM

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையில் நீர் தேங்கும் அளவு 105 அடி உயரம்தான் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:  
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டத்தில் பவானிசாகர் கீழ்பவானி நீர்தேக்கம் (பவானிசாகர் அணை) அமைந்துள்ளது. இந்த அணையில் அதிகபட்சமாக நீர் தேக்கப்படும் அளவு 105 அடியாகும். கடந்த மாதம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்பு முகாமில்  பவானிசாகர் அணையில் நீர் தேங்கும் உயரம் குறித்த முரண்பாடுகள் விவாதிக்கப்பட்டது.
பவானிசாகர் அணையில் கால்வாய் மதகுகள், ஆற்று மதகுகள், உபரி நீர்ப் போக்கி மதகுகள் அமைந்துள்ளன. பொதுவாக அணையின் உயரம் என்பது அணைக்கட்டில் அமைந்துள்ள கீழ்நிலையில் உள்ள மதகின் அடிமட்டத்திலிருந்து அணையில் அதிகப்படியாக நீர் தேக்கப்படும் அளவின் உயரம்தான் அந்த அணையின் உயரமாகக் கணக்கிடப்படும்.  
தற்போதும் பவானிசாகர் அணையில் அமைந்துள்ள ஆற்று மதகுதான் கீழ்நிலை மதகாகும். இந்த ஆற்று மதகின் அடிமட்ட அளவு 815 அடியாகும். அணையில் அதிகப்படியாக நீர் தேக்கப்படும் அளவு  920 அடியாகும்.
எனவே, அணையின் உயரம் என்பது 920 அடியிலிருந்து  815 அடியைக் கழித்த பிறகு கிடைக்கும் உயரம் 105 அடி என்பதே சரியானதாகும். மேலும், பொதுப் பணித் துறை ஆவணங்களில் பவானிசாகர் அணையின் உயரம் என்பது 105 அடி என்றே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
 

More from the section

பெண்கள் மட்டுமே கொண்டாடி மகிழ்ந்த காணும் பொங்கல்...!
கடம்பூர் மல்லியம்மன் கோயில் விழா
பயிர் காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை
ஈரோட்டில் நாளை ஜல்லிக்கட்டு: ஏற்பாடுகள் தீவிரம்
ஈரோடு கறவை மாட்டுச்சந்தை: ரூ.2.5 கோடிக்கு விற்பனை