திங்கள்கிழமை 21 ஜனவரி 2019

பவானி ஆற்றில் மணல் கடத்தல்: 350 மூட்டைகள் பறிமுதல்

DIN | Published: 12th September 2018 01:22 AM

பவானி ஆற்றிலிருந்து மூட்டை மூட்டையாகக் கட்டப்பட்டு மணல் கடத்தல் நடைபெற்று வருகிறது. காலிங்கராயன் அணைக்கட்டுப் பகுதியில் பவானி போலீஸார், வருவாய்த் துறையினர் நடத்திய திடீர் சோதனையில் 350 மூட்டைகள் மணல் பறிமுதல் செய்யப்பட்டன. 
 பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அடித்து வரப்பட்ட மணல் ஆங்காங்கே பரவலாகத் தேங்கிக் காணப்படுகிறது. தற்போது கட்டுமானப் பணிக்கு பரவலாக மணல் தட்டுப்பாடு உள்ளதால் அதிக விலைக்கு விற்பனை செய்யும் நோக்கில் மணல் கடத்தல்  நடைபெற்று வருகிறது. இதுகுறித்து, பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்துக்குத் தொடர்ந்து புகார்கள் தெரிவித்து வந்தனர். 
 மணல் கடத்தலை முற்றிலும் தடுக்கும் வகையில் வருவாய்த் துறையினர், காவல் துறையினர் இணைந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆயினும், மணலை சிறு சிறு சிமென்ட் பைகளில் கட்டி கடத்திச் செல்வது தொடர்ந்து வருகிறது. பவானி காலிங்கராயன் அணைக்கட்டின் உள்பகுதியிலும், உபரி நீர் வெளியேறும் பகுதியிலும் அதிக அளவில் மணல் சலித்துக் கொட்டியது போன்று காணப்படுகிறது. இம்மணலை பகல் நேரங்களில் மூட்டைகளாகக் கட்டி வைத்து, இரவு நேரங்களில் கடத்திச் சென்று விற்பனையில் ஈடுபடுகின்றனர். 
 பவானியில் சீனிவாசபுரம், மண் தொழிலாளர் வீதி, கல் தொழிலாளர் வீதி, சோமசுந்தரபுரம் ஆகிய ஆற்றங்கரையோரங்களில் அதிகாரிகளின் கண்காணிப்பையும் மீறி தொடர்ந்து மணல் கடத்தல் நடைபெற்று வருகிறது. பவானி துணை வட்டாட்சியர்கள் சரவணன், செல்வகுமார் (காவல் துறை பயிற்சி) ஆகியோர் போலீஸ் பாதுகாப்புடன் காலிங்கராயன் அணைக்கட்டுப் பகுதியில் திங்கள்கிழமை மாலை திடீர் சோதனை நடத்தினர். 
 அப்போது, மணல் கடத்தலில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்தவர்கள் தப்பியோடினர். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 350 க்கும் மேற்பட்ட சிமென்ட் பைகளில் மணல் கட்டி வைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, மணலைப் பறிமுதல் செய்ததோடு, மீண்டும் ஆற்றுக்குள் கொட்ட நடவடிக்கை எடுத்தனர். தொடர்ந்து, சிமென்ட் பைகள் சேகரிக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டது.
 இதே பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்னர் 300 மணல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அதே பகுதியில் மீண்டும் மணல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, மணல் கடத்தலில் ஈடுபடுவோர் குறித்து ரகசியமாக கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும், மணல் திருட்டில் ஈடுபட்டால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவர் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

More from the section

மரவள்ளி, ஜவ்வரிசி விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி
புனித செபஸ்தியார் ஆலயத்தில் தேர்பவனி
எரிபொருள் சிக்கன விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
செல்வசக்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
சென்னிமலையில் அரசு நெல் கொள்முதல்  நிலையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை