திங்கள்கிழமை 25 மார்ச் 2019

ஈரோடு ரயில் நிலைய நடைமேடையில் பேட்டரி கார் இயக்க காங்கிரஸ் கோரிக்கை

DIN | Published: 18th February 2019 09:02 AM

மாற்றுத்திறனாளிகள், முதியோர் நலன் கருதி ஈரோடு ரயில் நிலைய நடைமேடையில் பேட்டரியில் இயங்கும் கார் வசதி செய்து தர வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. 
தென்னக ரயில்வே ஆலோசனைக் குழு முன்னாள் உறுப்பினரும், மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை துணைத் தலைவருமான கே.என்.பாஷா சேலம் கோட்ட ரயில்வே மேலாளருக்கு அனுப்பிய கோரிக்கை மனு விவரம்: 
ஈரோடு ரயில் நிலையத்தில் 4 நடைமேடைகள் உள்ளன.  இந்த ரயில் நிலையம் வழியாக தினமும் 150-க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன.  மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் ரயில் ஏற செல்வதற்கும், இறங்கி வருவதற்கும் வெகு தூரத்தில் இருந்து நடந்து வர சிரமப்படுகின்றனர். இதனால் பயணிகளின் சிரமத்தை தவிர்க்க சென்னை, சேலம், கோவை ரயில் நிலையங்களில் உள்ளதுபோல் ஈரோடு ரயில் நிலைய நடைமேடையில் பேட்டரியில் இயங்கும் கார் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தெற்கு ரயில்வேயில் அதிக வருமானம் ஈட்டித் தருவது ஈரோடு ரயில் நிலையம். மஞ்சள், ஜவுளி, தோல், சர்க்கரை ஆலை, காகித ஆலைகள் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாக ஈரோடு உள்ளது.  தினமும் 10,000-க்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். உள்ளூர், வெளி மாநிலத்தவர்களும் இங்கு வந்து செல்கின்றனர்.  
ஆனால் கோவை, சேலம் ரயில் நிலையங்களில் உள்ள வசதிகள்போல் ஈரோடு ரயில் நிலையத்தில் இல்லை. இந்த ரயில் நிலையங்களில் ரயில் வருகையை அறிவிக்கும் டிஜிட்டல் தகவல் பலகை,  ஒவ்வொரு நடைமேடையிலும் உள்ளன. அதே போன்ற வசதிகளை ஈரோடு ரயில் நிலையத்தில் ஏற்படுத்தி தர வேண்டும்.  
 ஈரோடு ரயில் நிலைய நுழைவாயில் முன்பு பயணிகள் ஓய்வு எடுப்பதற்கு  குளிர்சாதன அறை பல லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு 1 மணி நேரத்துக்கு ரூ.15 கட்டணம் வசூல் செய்யப்பட்டது.  இந்த திட்டம் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருந்தது. தற்போது இந்த அறை மூடப்பட்டுள்ளது.  ஆகவே இதை பயணிகள் பயன்பாட்டுக்கு திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

More from the section

ஈரோடு மக்களவைத் தொகுதி: 13 நாள்களில் ரூ.40 லட்சம் பறிமுதல்
கொங்கு வேளாளர் பாலிடெக்னிக் கல்லூரியில் யமஹா பயிற்சிப் பள்ளி துவக்கம்
பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரியில் சாதனையாளர் விருது வழங்கும் விழா
பெருந்துறையில் ரூ.1.65 கோடிக்கு கொப்பரை ஏலம்
8 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு 8,050 வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு