வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

வயல் வரப்புகளில் உளுந்துப் பயிர் சாகுபடி: விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும்

DIN | Published: 18th February 2019 09:01 AM

கோபி வட்டாரத்தில் கீழ்பவானிப் பாசனப் பகுதிகளில் நெல் வயல் வரப்புகளில் உளுந்து சாகுபடி செய்யும் முறையை வேளாண்மைத் துறையினர் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
வழக்கமாக நெல் சாகுபடி செய்துள்ள வரப்புகளைக் களைகள் எதுவும் இன்றி தூய்மையாக வைத்திருப்பதையே எப்போதும் விவசாயிகள் விரும்புவார்கள். மேலும், எலித் தொல்லையைக் குறைக்கவும் இது உதவும் எனக் கூறுவார்கள்.
தமிழகம் பருப்பு வகைப் பயிர் உற்பத்தியில் இன்னும் தன்னிறைவு அடையாததால் தமிழக அரசு இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பயறு வகைகளை ஊடுபயிராகவும், நெல் அறுவடைக்குப் பின்பு தரிசு நிலத்தில் தனிப் பயிராகவும் பயிரிட பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.நெல் வயல்களில் உள்ள வரப்புகளில் உளுந்து சாகுபடியைப் பரிந்துரை செய்து நடைமுறைப்படுத்தி வருகிறது வேளாண்மைத் துறை.
  கோபியை அடுத்த கோரக்காட்டூர்-வெங்கமேடு பகுதியில் நெல் வரப்புகளில் உளுந்துப் பயிரை விதைத்து அவை நன்கு செழித்து வளர்ந்திருப்பதை விவசாயிகள் நேரில் கண்டு வியந்து வருகின்றனர். விவசாயி பழனிசாமி,  தனது ஒரு ஏக்கர் வயலில் உள்ள அனைத்து வரப்புகளிலும் உளுந்து விதைத்திருந்தார். தற்போது, கொத்துக் கொத்தாகக் காய்த்துள்ளன. 
 இது குறித்து விவசாயி பழனிசாமி கூறியதாவது:
கோபி வேளாண்மைத் துறை அதிகாரிகள் கூறிபடி, வரப்புகளில் உளுந்து சாகுபடி செய்தேன். இந்தப் புதிய முயற்சியில் 90 கிலோ முதல் 100 கிலோ உளுந்து மகசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். அசுவின், தந்துப்பூச்சி போன்றவற்றை உளுந்துப் பயிர் தடுத்து விடுவதால் நெல்லுக்குப் பாதுகாப்பு  கிடைக்கிறது. இனி வருங்காலங்களிலும் வரப்பில் உளுந்து சாகுபடி முறையை தொடர்ந்து மேற்கொள்வேன் என்றார். 
  இந்த வயலைப் பார்வையிட்ட கோபி வேளாண்மை உதவி இயக்குநர் அ.நே.ஆசைத்தம்பி கூறியதாவது:
தடப்பள்ளி பாசனப் பகுதியில் முதல்போகத்தில் ஏராளமான விவசாயிகள் வரப்பில் உளுந்து சாகுபடி செய்துள்ளார்கள். கீழ்பவானி பாசனப் பகுதிகளில் கூகலூர், கடுக்காம்பாளையம், கலிங்கியம்,  பொன்னாச்சிப்புதூர் உள்ளிட்ட கிராமங்களில் பல விவசாயிகள் இதைக் கடைப்பிடித்து வருகின்றனர். வம்பன்-6 என்ற உயர் விளைச்சல் உளுந்து ரகம் இந்தப் புதிய முறை சாகுபடிக்கு பொருத்தமாக உள்ளது. இதன் மூலமாக விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் என்றார்.

More from the section

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல்  காணிக்கை ரூ. 84.32 லட்சம்
100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி கோலப் போட்டி
ஈரோடு முருகன் கோயில்களில் பங்குனி உத்திரத் திருவிழா

நந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு தினம்: 
300 பேருக்கு பணி நியமன ஆணை

பறவைகள் சரணாலயத்தில் உலக வன நாள்