சனிக்கிழமை 23 மார்ச் 2019

குடிசை மாற்று வாரிய வீடு ஒதுக்கீட்டில் பாரபட்சம்: நடைமுறையை மாற்ற கோரிக்கை

DIN | Published: 19th February 2019 07:50 AM

அன்னை சத்யா நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பயனாளிகளுக்கு குலுக்கல் முறையில் வீடுகள் ஒதுக்கீட்டை ரத்து செய்துவிட்டு டோக்கன் முறையில் வழங்க வேண்டும் என ஆட்சியரிடம் பயனாளிகள் வலியுறுத்தினர். 
அன்னை சத்யா நகர் மற்றும் ஈரோடு மாவட்ட குடிசை மாற்று வாரிய குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் அதன் தலைவர் என்.பெருமாள், செயலர்  வி.சுப்பிரமணி ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சி.கதிரவனிடம் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்:
ஈரோடு அன்னை சத்யா நகரில் 1987இல் குடிசை மாற்று வாரியம் மூலம் 448 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது. 30 ஆண்டுகள் ஆனதால் வீடுகள் சேதமடைந்தன. கட்டடம் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்தார். பலர் காயம் அடைந்தனர்.
இதனால் அந்த வீடுகள் வசிப்பதற்கு ஏற்றதல்ல எனக்கூறி கடந்த 2016இல் அனைவரையும் காலி செய்தனர்.
மத்திய அரசின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் 448 வீடுகள் கொண்ட நான்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்ட ரூ.29.39 கோடி ஒதுக்கப்பட்டு குடிசை மாற்று வாரியம் மூலம் வீடுகளை கட்டி முடித்தனர்.
தற்போது பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு செய்ய குலுக்கல் முறை எனக்கூறி குறிப்பிட்ட வீட்டை மட்டும் ஒதுக்குகின்றனர். அரசியல் கட்சியினருக்கு ஆதரவானவர்களுக்கு அவர்கள் விரும்பும் வீட்டை ஒதுக்குகின்றனர்.
எனவே, குலுக்கல் முறையை ரத்து செய்துவிட்டு ஒரே நாளில், அனைத்து பயனாளிகளுக்கும் கடந்த முறை வசித்த விவரப்படி, டோக்கன் வழங்கி வீடு ஒதுக்க வேண்டும்.
 கடந்த 15 ஆம் தேதி குலுக்கல் முறையில் வீடு ஒதுக்கீடு நடந்தபோது பல முறைகேடுகள்  நடந்ததால் ஆட்சியரிடம் முறையிட்டு தடுத்து நிறுத்தினோம். மீண்டும் அதையே செயல்படுத்த முயற்சி செய்கின்றனர். எனவே அந்த முறையை ரத்து செய்துவிட்டு அனைவருக்கும் டோக்கன் வழங்கி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
மேலும், ரூ.80,000 பங்களிப்பு தொகையை ரூ. 60 ஆயிரமாக குறைத்து, அந்த தொகையை தவணை முறையில் செலுத்த அனுமதிக்க வேண்டும். ஏற்கெனவே இந்த வீடுகளில் வசித்தவர்கள் நீங்கலாக பிறருக்கு வழங்கக் கூடாது என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

More from the section

கொங்கு பாலிடெக்னிக் மாணவர்களுக்கு பணி ஆணை வழங்கும் விழா
பெருந்துறையில் ரூ. 45 லட்சம் பறிமுதல்
தாளவாடியில் முட்டைகோஸ் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
தமிழக அணிக்கு பெருந்துறை விவேகானந்தா பள்ளி மாணவர்கள் தேர்வு
பெருமாநல்லூர் அருகே ரூ.72 ஆயிரம் பறிமுதல்