வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

பாறைகளுக்கு வெடி வைத்ததில் 40 வீடுகள் சேதம்: ஆட்சியரிடம் புகார்

DIN | Published: 19th February 2019 07:51 AM

பாறைகளுக்கு வெடி வைத்ததில் 40 வீடுகள் சேதமடைந்ததுள்ளது. இதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பொலவக்காளிபாளையம், பெரியார் நகரைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சி.கதிரவனிடம் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்:
பெரியார் நகர் பகுதியில் 220 குடும்பத்தினர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம். எங்களது ஊருக்கு மேற்குப்புறம் தனியாருக்கு சொந்தமான இடம் உள்ளது. பாறைகள் நிறைந்த, கரடு முரடான அந்த இடத்தை சுத்தம் செய்வதாகக் கூறி வெடிவைத்து பாறைகளைத் தகர்த்து வருகின்றனர்.
கடுமையான அதிர்வுகள் ஏற்படுவதால் வெடி வைக்கவேண்டாம் எனக் கூறியதையும் மீறி குடியிருப்புகளுக்கு அருகிலேயே வெடி வைத்தனர். 
பயங்கர சப்தத்துடன் வெடிகள் வெடித்துச் சிதறியதில் பெரிய கற்கள் பறந்து வந்து வீடுகளின் மீது விழுந்தன.
இதில் சுமார் 40 வீடுகளில் வீட்டின் கூறை ஓடுகளும், வீட்டுக்குள் இருந்த வீட்டு உபயோகப் பொருள்களும் சேதமடைந்தன. ஒரு மூதாட்டி மீது ஓடுகள் விழுந்ததில் அவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 
குடியிருப்புகளுக்கும், பொதுமக்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் வெடி வைப்பதை தடுக்கவும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிடவேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனர்.

More from the section

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல்  காணிக்கை ரூ. 84.32 லட்சம்
100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி கோலப் போட்டி
ஈரோடு முருகன் கோயில்களில் பங்குனி உத்திரத் திருவிழா

நந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு தினம்: 
300 பேருக்கு பணி நியமன ஆணை

பறவைகள் சரணாலயத்தில் உலக வன நாள்