வெள்ளிக்கிழமை 22 மார்ச் 2019

பிஎஸ்என்எல் ஊழியர்கள் வேலைநிறுத்தம்: ஈரோடு மாவட்டத்தில் 1,150 பேர் பங்கேற்பு

DIN | Published: 19th February 2019 07:52 AM

பிஎஸ்என்எல் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தால் ஈரோடு மாவட்டத்தில் 128 அலுவலகங்கள் மூடப்பட்டன. இதனால் வாடிக்கையாளர் சேவை முடங்கியதால் மக்கள் பாதிப்படைந்தனர்.
பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு 15 சதவீத ஊதிய நிர்ணய பலனுடன் 3ஆவது ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும். பிஎஸ்என்எல் நிர்வாகத்துக்கு 4ஜி அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்ய வேண்டும். 1-1-2017 முதல் பிஎஸ்என்எல் ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும். 
பிஎஸ்என்எல் நில மேலாண்மைக் கொள்கைக்கு கால தாமதம் இல்லாமல் ஒப்புதல் அளிக்க வேண்டும். 
பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு அதன் சொத்துகளை மாற்றி கொடுக்க வேண்டும். இயக்குநர் குழுவில் காலியாக உள்ள பதவிகளை விரைவில் நிரப்ப வேண்டும். 
அவுட்சோர்ஸிங் முறையைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நாடு முழுவதும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் திங்கள்கிழமை முதல் 20ஆம் தேதி வரை 3 நாள்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர்.
அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் பிஎஸ்என்எல் அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கத்தின் கூட்டமைப்பினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதில் ஈரோடு மாவட்டத்தில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் 750 பேர் மற்றும் 400 ஒப்பந்த ஊழியர்கள் என 1,150  பேர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 128 பிஎஸ்என்எல் அலுவலகங்களும் மூடப்பட்டு, அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. 
இதில், காஷ்மீரில் வீர மரணமடைந்த சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தினர்.
இதனையடுத்து, மத்திய, மாநில பொதுத் துறை நிறுவன ஓய்வூதியர்கள் சங்கத்தினர் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

More from the section


கனி மார்க்கெட் வியாபாரிகள் அனைவருக்கும் புதிய வணிக வளாகத்தில் கடை ஒதுக்கப்படும்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

சித்த மருத்துவரிடம் ரூ.1 லட்சம் பறிமுதல்
மத்திய பாஜக ஆட்சியில் விவசாயம், தொழில் துறைகள் பாதிப்பு: கம்யூனிஸ்ட் வேட்பாளர் கே.சுப்பராயன்


பூதப்பாடியில் ரூ.10 லட்சத்துக்கு வேளாண் விளைபொருள்கள் ஏலம்

கோபியில் ரூ.3 லட்சம் பறிமுதல்