சனிக்கிழமை 23 மார்ச் 2019

லஞ்சம்: கோபி கோட்டாட்சியர்  அலுவலக உதவியாளர் கைது

DIN | Published: 19th February 2019 07:56 AM

கோபி கோட்டாட்சியர் அலுவலகத்தில் ரூ.65 ஆயிரம் லஞ்சம் பெற்ற உதவியாளர் ரங்கசாமியை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் சிக்கரசம்பாளையம் அருகே உள்ள ராமபையனூரைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் தனது நண்பருடன் சேர்ந்து, அதே பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது நண்பருக்கு சொந்தமாக சிக்கரசம்பாளையத்தில் உள்ள ஒரு ஏக்கர் 90 சென்ட் நிலத்தை வாங்குவதற்கு விலை பேசி ஒப்பந்தம் போட்டுள்ளார்.
பின்னர் சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் வில்லங்கச் சான்று போட்டு பார்த்தபோது அந்தக் குறிப்பிட்ட நிலம் வேறு ஒருவரது பெயரில் பதிவாகி இருந்தது தெரியவந்தது. மேலும் அந்த நிலத்தின் பரப்பளவும் குறைந்து காணப்பட்டது.  வேறு ஒருவரது பெயரில் பூமி இருப்பதை ரத்து செய்யவும், சரியான முறையில் மீண்டும் அளவீடு செய்து தரக்கோரி நிலத்தின் உரிமையாளர் ராதாகிருஷ்ணன் கோபி கோட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்தார்.
இந்தப் பணிகளை நிலத்தை வாங்க இருந்த சக்திவேலை பார்த்துக் கொள்ளுமாறு ராதாகிருஷ்ணன் சொல்லியுள்ளார். அதன்படி கோபி கோட்டாட்சியர் அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றி வந்த ரங்கசாமி என்பவரிடம் விண்ணப்பம் குறித்து சக்திவேல் கேட்டபோது உயர் அதிகாரி மூலம் உத்தரவு பிறப்பிக்க ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளார். அதற்கு ரூ.75 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். இதைத் தொடர்ந்து பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு ரூ.65 ஆயிரம் வழங்க சக்திவேல் ஒப்புக்கொண்டார்.
இது குறித்து ஈரோடு லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் சக்திவேல் புகார் செய்தார். காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் புஷ்பராஜ், காவல் துறை ஆய்வாளர் நடராஜன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் சக்திவேலிடம் ரசாயனம் தடவிய பணத்தை திங்கள்கிழமை கொடுத்து அனுப்பினர். அந்தப் பணத்தை ராதாகிருஷ்ணன் பெற்றபோது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் ரங்கசாமியை கையும்களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.
 

More from the section

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல்  காணிக்கை ரூ. 84.32 லட்சம்
100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி கோலப் போட்டி
ஈரோடு முருகன் கோயில்களில் பங்குனி உத்திரத் திருவிழா

நந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு தினம்: 
300 பேருக்கு பணி நியமன ஆணை

பறவைகள் சரணாலயத்தில் உலக வன நாள்