புதன்கிழமை 20 மார்ச் 2019

குடும்பப் பிரச்னை புகார்களை சட்டப் பணிகள் ஆணைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும்: காவல் துறையினருக்கு நீதிபதி அறிவுறுத்தல்

DIN | Published: 22nd February 2019 07:56 AM

குடும்பப் பிரச்னை புகார்கள் காவல் நிலையங்களுக்கு வந்தால் போலீஸார் சட்டப் பணிகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவருமான என்.உமாமகேஸ்வரி அறிவுறுத்தினார். 
ஈரோடு பேருந்து நிலையத்தில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது குறித்து விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமில் ஈரோடு மாவட்ட முதன்மை நீதிபதி மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் என்.உமாமகேஸ்வரி தலைமை வகித்தார். பின்னர் அவர் பேசியதாவது: 
சட்டப்பணிகள் ஆணைக்குழு, அனைத்து நீதிமன்றங்களிலும் செயல்படுகிறது. மக்களிடம் இதுகுறித்து தெரிவிக்க வேண்டும். அதற்காக மக்கள் கூடும் இடங்களில் முகாம் நடத்துகிறோம். பின்தங்கிய மக்களுக்கு சட்ட உதவிகள் கிடைக்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். பணம் இல்லாததால், நீதி கிடைக்காமல் சென்றுவிடக் கூடாது. மக்கள் சட்டப் பணிகள் ஆணைக்குழுவில் மனு வழங்கினால் உரிய விசாரணை நடத்தப்பட்டு நீதி வழங்கப்படும்.
பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகள் அதிகம் உள்ளன. சில வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்படுகின்றன. குடும்பப் பிரச்னை, முதியவர்களை மகன் முறையாக கவனிக்காதது போன்ற 
புகார்கள் காவல் நிலையங்களுக்கு வந்தால் அவர்களை போலீஸார் சட்டப் பணிகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றார். 
முகாமில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.சக்திகணேசன் முன்னிலை வகித்தார். சட்டப் பணிகள் ஆணைக்குழு சட்டம் சாரா தன்னார்வலர் சாந்தாதேவி வரவேற்றார்.
ஈரோடு கொங்கு கலை, அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியர், பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை நாடகம், கலைநிகழ்ச்சிகள் மூலம் நடித்துக் காண்பித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 
இதில் ரீடு தொண்டு நிறுவன இயக்குநர் கருப்புசாமி, டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சார்பு நீதிபதி ரவிசங்கர் நன்றி கூறினார்.
 

More from the section

மார்ச் 20 மின்தடை 
பச்சைமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மார்ச் 21 இல் பங்குனி உத்திரத் தேர்த் திருவிழா


சென்னிமலை நஞ்சுண்டேசுவரர் கோயிலில் பங்குனி மாத சிறப்பு வழிபாடு

வேட்பு மனு தாக்கல் இன்று துவக்கம்: ஆட்சியர், கோட்டாட்சியர் 
அலுவலகங்களில் மனு அளிக்கலாம்

ஈரோடு மக்களவைத் தொகுதி  அதிமுக வேட்பாளர்