செவ்வாய்க்கிழமை 19 பிப்ரவரி 2019

சென்னிமலை முருகன் கோயிலில் தைப்பூசத் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

DIN | Published: 22nd January 2019 01:13 AM

சென்னிமலை முருகன் கோயில் தைப்பூசத் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அரோகரா கோஷத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர். 
இக்கோயிலில் தைப்பூசத் தேரோட்டம் ஜனவரி 13 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் முருகப் பெருமானின் பல்வேறு வாகனக் காட்சி, மண்டபக் கட்டளை நிகழ்ச்சி நடைபெற்று வந்தன.
ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னிமலை கைலாசநாதர் கோயிலில் வள்ளி - தெய்வானை முத்துகுமார சுவாமிக்கு அபிஷேகமும், தொடர்ந்து வசந்த திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றன. 
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை 3 மணி முதல் கைலாசநாதர் கோயிலில் வள்ளி-தெய்வானை முத்துகுமார சுவாமிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. காலை 5.30 மணிக்கு சுவாமிக்கு தீபாராதனை செய்யப்பட்டு தேர் நிலைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு, 3 முறை சுவாமிகள் தேரை வலம் வந்து தேரில் அமர வைக்கப்பட்டன. தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர், தேருக்கு கற்பூரம் ஏற்றி தீபாராதனை செய்யப்பட்டது. காலை 6.20 மணிக்கு தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 
இதில், ஈரோடு மக்களவைத் தொகுதி உறுப்பினர் செல்வகுமார சின்னையன், சட்டப் பேரவை உறுப்பினர்கள் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம், உ.தனியரசு, கே.எஸ்.தென்னரசு, வி.பி.சிவசுப்பிரமணியம், கோயில் 
செயல் அலுவலர் எம்.அருள்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு தேரோட்டத்தைத் தொடங்கிவைத்தனர். 
அதைத் தொடர்ந்து, திரளான பக்தர்கள் "அரோகரா' கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேருக்கு முன்பாக விநாயகர் தேரும், பின்புறமாக சிவன்-பார்வதி தேரும் சென்றன. காலை 6.45 மணிக்கு தெற்கு ராஜ வீதி சந்திப்பில் தேர் நிறுத்தப்பட்டது. விழாவையொட்டி, தேவஸ்தான திருமண மண்டபத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தைப்பூசத்தையொட்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடிகள் எடுத்து வந்தனர். மாலை 5 மணிக்கு மீண்டும் தேர் வடம் பிடிக்கப்பட்டு வடக்கு ராஜ வீதி சந்திப்பில் நிறுத்தப்பட்டது. செவ்வாய்க்கிழமை (ஜனவரி 22) மாலை 5 மணிக்கு தேர் நிலை சேர்கிறது. 25 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்குமேல் மகா தரிசனம் நடைபெறுகிறது.

 

பவானி பழனியாண்டவர் கோயில்...
தைப்பூசத்தையொட்டி, பவானி பழனியாண்டவர் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது. 
ஜனவரி 12 ஆம் தேதி வாஸ்து பூஜை, யாகசாலை பூஜையுடன் தொடங்கிய இத்திருவிழாவையொட்டி, நாள்தோறும் சிறப்பு அபிஷேகம், வெள்ளித் தேரோட்டம், திருவீதி உலா நடைபெற்று வந்தன. தொடர்ந்து, கிருத்திகை சிறப்பு அலங்கார வழிபாடுகளும் நடத்தப்பட்டன. இதையடுத்து, வள்ளி, தெய்வானையுடன் உடனமர் பழனியாண்டவருக்கு திருக்கல்யாண உற்சவம் திங்கள்கிழமை காலை நடைபெற்றது. 
தொடர்ந்து, சிறப்பு வழிபாடுகளுடன் சங்கமேஸ்வரர் கோயில் அருகே தேரோட்டம் தொடங்கியது.
சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், அதிமுக நகரச் செயலாளர் என்.கிருஷ்ணராஜ், திமுக நகரச் செயலாளர் ப.சீ.நாகராஜன், மாநில மாணவரணி துணைச் செயலாளர் பி.ஆர்.எஸ்.ரங்கசாமி உள்ளிட்டோர் வடம்பிடித்து தேரோட்டத்தைத் தொடங்கிவைத்தனர். 
நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற தேரோட்டமானது மீண்டும் புறப்பட்ட இடத்திலேயே முடிவடைந்தது. 
இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு இறைவனை வழிபட்டனர். இதையடுத்து, செவ்வாய்க்கிழமை யாகசாலை பூஜை, உற்சவர் அபிஷேகம், 
சுவாமி திருவீதி உலா, பரிவேட்டையும், புதன்கிழமை தீர்த்தவாரி உற்சவம், தீர்த்தக்குட அபிஷேகம், மகா தீபாராதனை வழிபாடுகளும் 
நடைபெறுகின்றன.


பெருந்துறையில்...
பெருந்துறை வேதநாயகி உடனமர் சோழீஸ்வரர் கோயிலில் தைப்பூசத் திருவிழாவையொட்டி, காலை 8 மணியளவில் பெருந்துறை, காஞ்சிக்கோவில் சாலை, ஸ்ரீ விநாயகர் கோயிலில் இருந்து பால் குடம், பன்னீர் குடம், காவடி ஊர்வலம் ஆகியன மேளத்துடன் புறப்பட்டு சோழீஸ்வரர் கோயிலை அடைந்தது. அங்கு பகல் 12 மணியளவில் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றன. தொடர்ந்து, பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது.
பின்னர், மாலை 6 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ கல்யாண சுப்பிரமணிய சுவாமி திருவீதி உலா பெருந்துறை நகரின் முக்கிய வீதிகளின் வழியாக நடைபெற்றது. 
விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் தக்கார் வே.சபர்மதி, செயல் அலுவலர் பா.குழந்தைவேல், தைப்பூச விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
 

More from the section

சென்னிமலை அருகே சாலை விபத்தில் நெசவுத் தொழிலாளி சாவு
பெங்களூரு கல்லூரியுடன் கொங்கு கலை அறிவியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்
லஞ்சம்: கோபி கோட்டாட்சியர்  அலுவலக உதவியாளர் கைது


ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

ஆங்கில உச்சரிப்புப் பயிற்சி: மாணவர்களுக்கு சான்றிதழ்