சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

வெல்டிங் பட்டறை உரிமையாளர் கொலை வழக்கு: மனைவி, சகோதரன் கைது

DIN | Published: 22nd January 2019 01:10 AM

அந்தியூர் அருகே வெல்டிங் பட்டறை உரிமையாளரைக் கொலை செய்த வழக்கில் மனைவி, சகோதரனை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். 
பவானியை அடுத்த ஒலகடத்தைச் சேர்ந்தவர் கைலாசம் (40). இவர், அந்தியூர் தவிட்டுப்பாளையத்தில் லேத் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி ஹேமலதா (22). திருமணமாகி நான்கு ஆண்டுகளான நிலையில், இவர்களுக்கு இரண்டரை வயதில் சிவவர்ஷினி எனும் பெண் குழந்தை உள்ளது. 
இவரது மனைவி ஹேமலதாவுக்கும், சகோதரர் முறையான ஆனந்த் (23) என்பவருக்கும் முறையற்ற பழக்கம் இருந்துள்ளது. இதனால், கடந்த மாதம் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறிச் சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உறவினர்கள் முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டு, கணவர் கைலாசத்துடன் ஹேமலதாவை அனுப்பி வைத்தனர். 
இந்நிலையில், பட்டறையை மூடிவிட்டு தனது மனைவி ஹேமலதா, குழந்தை சிவவர்ஷினி ஆகியோருடன் சனிக்கிழமை மாலை இருசக்கர வாகனத்தில் தனது மாமனார் வீட்டுக்கு கைலாசம் சென்று கொண்டிருந்தார். அப்போது, பவானி சாலையில், கணபதி கரட்டூர் அருகே சென்றபோது தலைக்கவசம் அணிந்து வந்த மர்ம நபர், வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு கைலாசத்தின் கழுத்தில் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டார். 
இதில், சம்பவ இடத்திலேயே கைலாசம் உயிரிழந்தார். 
சம்பவ இடத்துக்கு விரைந்த அந்தியூர் போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில், தன்னிடமிருந்து ஹேமலதாவைப் பிரித்த ஆத்திரத்தில் ஆனந்த், கைலாசத்தைக் குத்திக் கொலை செய்ததும், இதற்கு ஹேமலதா உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸார் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
 

More from the section

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்
ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்ட ஆய்வுக் கூட்டம்


சமஸ்கிருத மொழியில் எழுத, படிக்க இலவசப் பயிற்சி

சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.2.78 லட்சத்துக்கு 
எள் விற்பனை


வருவாய் மீட்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை: தனியார் சர்க்கரை ஆலைக்கு எச்சரிக்கை