21 ஏப்ரல் 2019

வேட்பு மனு தாக்கல் இன்று துவக்கம்: ஆட்சியர், கோட்டாட்சியர்  அலுவலகங்களில் மனு அளிக்கலாம்

DIN | Published: 19th March 2019 07:55 AM

மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. வேட்பு மனுக்களை ஈரோடு மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர் அலுவலகங்களில் தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 இதுகுறித்து ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியர் சி.கதிரவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஈரோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள், ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆட்சியர் அறையில் மாவட்ட தேர்தல் அலுவலரிடம், முதன்மை உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரான ஈரோடு கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியரிடம் மனு தாக்கல் செய்யலாம். 
 மார்ச் 19 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக மற்ற நாள்களில் காலை 11 மணி முதல் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். வேட்பாளர் உள்பட 5 பேர் மனு தாக்கல் செய்யும் இடத்தில் அனுமதிக்கப்படுவர். வேட்பு மனுவை வேட்பாளர் அல்லது முன்மொழிபவர் தாக்கல் செய்யலாம்.  
 வேட்பாளர்களை 10 வாக்காளர்கள் முன்மொழிய வேண்டும். முன்மொழிபவர், ஈரோடு மக்களைவைத் தொகுதிக்கு உள்பட்ட 6 சட்டப்பேரவை தொகுதிக்குள் இருக்க வேண்டும். தமிழகத்தில் வேறு பகுதியைச் சேர்ந்தவர் வேட்பாளராக இருந்தால் அங்குள்ள வாக்குப் பதிவு அலுவலரின் சான்று பெற்று வர வேண்டும்.  வேட்பாளரின் வீட்டுக்கான மின்சாரம், குடிநீர், தொலைபேசி சேவை பெறும் நிறுவனத்திடம் நிலுவை இல்லை என தடையின்மைச் சான்று பெற வேண்டும். வேட்பாளரின் புகைப்படம், 3 மாதத்துக்குள் எடுத்தாக இருக்க வேண்டும். சுயேட்சை வேட்பாளர் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள சின்னத்தில் ஏதேனும் மூன்றை குறிப்பிட வேண்டும். 
 ஒரு வேட்பாளர் ஒரு தொகுதியில் நான்கு வேட்பு மனு வரை தாக்கல் செய்யலாம். எனினும் வைப்புத்தொகை ஒரே முறை செலுத்தினால் போதும். சான்று ஆவணம், இதர ஆவணங்களை முதல் வேட்பு மனுவுடன் முழுமையாக தாக்கல் செய்தால் போதும். 
 மார்ச் 27 ஆம் தேதி காலை 11 மணிக்கு மனுகள் பரிசீலனை செய்யப்படும். தேர்தலில் இருந்து விலக விரும்பினால் மார்ச் 27 ஆம் தேதி முதல் மார்ச் 29 ஆம் தேதி மாலை 3 மணிக்குள் விலகல் படிவத்தை தாக்கல் செய்ய வேண்டும். மார்ச் 29 ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் சின்னத்துடன் அறிவிக்கப்படும்.

More from the section

கோணவாய்க்கால் மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா
அமரபணீஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா
நீட் தேர்வு: நடப்பு ஆண்டிலும் ஈரோட்டில் தேர்வு மையம் இல்லை
சேலம்கோவை இடையே பயணிகள் ரயில் இயக்க கோரிக்கை
பவானிசாகர் அருகே வாழை மரங்களை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானை