புதன்கிழமை 16 ஜனவரி 2019

குன்னூர் மலைப் பாதையில் விபத்து:  இருவர் சாவு

DIN | Published: 12th September 2018 07:06 AM

நீலகிரி மாவட்டம், குன்னூர்- மேட்டுப்பாளையம்  மலைப் பாதையில்  இரு சக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் சென்னையைச் சேர்ந்த 2 பேர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனர்.
சென்னையைச் சேர்ந்த 5 இளைஞர்கள் பொள்ளாச்சியில் ஒரு திருமண  நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் உதகைக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டனர்.  இதற்காக சென்னையிலிருந்து பார்சல் சர்வீஸ் முலம் இரு சக்கர வாகனங்களை கோவைக்குக் கொண்டு வந்துள்ளனர். 
திருமண நிகழ்ச்சி முடிந்த பிறகு செவ்வாய்க்கிழமை அதிகாலை பொள்ளாச்சியிலிருந்து  உதகைக்கு  3 இருசக்கர வாகனங்களில்  5 பேர் புறப்பட்டு உதகைக்கு வந்துள்ளனர். அங்குள்ள சுற்றுலாத் தலங்களைப் பார்த்துவிட்டு  மீண்டும் சென்னை திரும்பிக் கொண்டிருந்தனர்.  குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது,  காந்திபுரம் அருகே  நிலைதடுமாறி இரு சக்கர வாகனத்திலிருந்து இருவர் கீழே விழுந்தனர்.   
இதில், சென்னை,  புழல் பகுதியைச் சேர்ந்த தயாளன் மகன் அரவிந்த் (21),  கொடுங்கையூரைச் சேர்ந்த ரவிகுமார் மகன் அஜீத் (21) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து அப்பகுதி மக்கள் குன்னூர் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.  
சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் இருவரின் உடலையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக  குன்னூர் அரசு லாலி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  உடலில் எந்தக் காயமும் இல்லாமல், இருவரும் அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளது  மருத்துவர் பரிசோதனையில் தெரிய வந்தது. 
விபத்தில் உயிரிழந்த அரவிந்த், துபையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். விடுமுறைக்கு நண்பர்களுடன் வந்த இடத்தில்  இறந்தது அவரது நண்பர்களிடையே மிகவும் சோகத்தை ஏற்படுத்தியது.  இந்த விபத்து தொடர்பாக  குன்னூர் நகர  காவல் துறையினர்  வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். 
 

More from the section

யானைகள் ஊருக்குள் வருவதைத் தடுக்க வீடுகளில் வாழை, பலா மரங்களை வளர்க்க வேண்டாம்: வனத் துறை அறிவுறுத்தல்


அரசுப் பேருந்து மோதி இளைஞர் சாவு

நுண்கடன் என்ற பெயரில் கந்துவட்டி: மகளிர் குழுவினர் புகார்


தமிழ்ச் சங்கம் சார்பில் பொங்கல் கலை இலக்கிய விழா

மார்க்சிஸ்ட் சார்பில் ஜனவரி 27 இல் நீலகிரியில் கண்டன ஆர்ப்பாட்டம்