வியாழக்கிழமை 21 பிப்ரவரி 2019

ஒசூரில் பெட்ரோல்,  டீசல் விலை உயர்வைக் கண்டித்து கடைகள் அடைப்பு:  அரசுப் பேருந்துகள்  நிறுத்தம்

DIN | Published: 11th September 2018 09:30 AM

பெட்ரோல்,  டீசல் விலை உயர்வைக் கண்டித்து திங்கள்கிழமை நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டத்தின்போது ஒசூரில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன.   தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெங்களூருக்கு இயக்கப்பட்ட தமிழக அரசுப் பேருந்துகள் ஒசூரில் நிறுத்தப்பட்டன. 
பெட்ரோல்,   டீசல் விலை உயர்வைக் கண்டித்தும்,  மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையைக் கண்டித்தும் நாடு முழுவதும் ஒரு நாள் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது.  இந்த முழு அடைப்புக்கு  தி.மு.க.,  ம.தி.மு.க.,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி,  இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,  மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.
இதையடுத்து,  ஒசூரில் நகைக் கடைகள்,  உணவு விடுதிகள், தேநீர்க் கடைகள்,  ஜவுளிக் கடைகள், வாகனப் பழுது நீக்கும் கடைகள் மூடப்பட்டிருந்தன.  அதேபோல,  திரையரங்குகளில் காலை மற்றும் பிற்பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தன.  பேருந்துகள் வழக்கம்போல இயக்கப்பட்டன. 
பெங்களூருக்கு இயக்கப்படும் தமிழக அரசுப் பேருந்துகள் அனைத்தும் ஒசூருடன் நிறுத்தப்பட்டன.  கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ்  கூட்டணி கட்சி ஆட்சி செய்து வருவதால், அங்கு பேருந்துகள் அனைத்து இயக்கப்படவில்லை.  இதனால் தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலத்துக்குச் செல்ல வேண்டிய பயணிகள் சிரமமடைந்தனர்.  மாலையில் வழக்கம்போல் பேருந்துகள் இயக்கப்பட்டன. 
ஆர்ப்பாட்டம்...
பெட்ரோல்,  டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஒசூர் காந்தி சிலை அருகில் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில் மேற்கு மாவட்ட அவைத் தலைவர் யுவராஜ்,  ஒசூர் நகர பொறுப்பாளர் எஸ்.ஏ.சத்யா,   பொருளாளர் சென்னீரப்பா, முன்னாள் நகரச் செயலாளர் மாதேஸ்வரன், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் செந்தில்,   விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர் ராமச்சந்திரன், நகர காங்கிரஸ் தலைவர் நீலகண்டன் மற்றும் கூட்டணி கட்சியினர்  கலந்து கொண்டனர்.
முன்னதாக,  மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன் தலைமையில் காந்தி சிலை அருகில் சாலை மறியல் நடந்தது.  அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த  டி.எஸ்.பி (பொறுப்பு) சங்கர் தலைமையிலான போலீஸார் அவர்களை கைது செய்தனர்.

More from the section

நாட்டு நலப் பணித் திட்ட முகாம்


புதூர் மாரியம்மன் கோயில் திருவிழா


கடத்தூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை

மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவி
காரிமங்கலத்தில் திமுக ஊராட்சி சபைக் கூட்டம்