வெள்ளிக்கிழமை 22 பிப்ரவரி 2019

பெருங்கற்கால வெள்ளை நிற பாறை ஓவியங்கள் கண்டெடுப்பு

DIN | Published: 11th September 2018 09:29 AM

தருமபுரி மாவட்டம்,  பாலக்கோடு அருகே பெருங்கற்கால வெள்ளை நிற பாறை ஓவியங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தருமபுரியைச் சேர்ந்த வரலாற்றுத் துறைப் பேராசிரியர் சி.சந்திரசேகர், பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த செந்தில், நாகராஜ், கிருபானந்தன் உள்ளிட்டோர் அண்மையில் பாலக்கோடு அடுத்த பி.கொல்லஹள்ளி அருகேயுள்ள கொத்தகோட்ட மலையில் உள்ள பாறை,  குகைகளில் மேற்கொண்ட களஆய்வில் இந்த வெள்ளை நிறத்திலான பாறை ஓவியங்களை கண்டெடுத்தனர்.  இந்த ஓவியங்கள் குருமன்ஸ் இனத்தவரின் வாழ்வியலை அடையாளப்படுத்துகின்றன.  இதன் காலம் கி.பி.1000-ஆம் ஆண்டாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இதுகுறித்து, பேராசிரியர் சி.சந்திரசேகர் கூறியது:  பாலக்கோடு வட்டம், பி.கொல்லஹள்ளி அருகே கொத்தகோட்டா என்றழைக்கப்படும் மலையின் மூன்று இடங்களில் இந்த வெள்ளை நிற ஓவியங்களைக் கண்டறிந்துள்ளோம்.  ஒரு குகை வாழிடத்தில்,  குகையின் மேற்புறப் பாறைகளில் ஏராளமான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.  ஒரு பாறையின் கீழ் இரண்டு மனிதர்கள் நின்றவாறு ஓவியம் காணப்படுகிறது.  இந்த குகையின் கீழ் தங்கள் வாழ்விடம் உள்ளது என்பதை விளக்கும் வகையில் வரையப்பட்டுள்ளதாகக் கருதலாம்.  அதனருகே, நான்கு மனிதர்கள் நின்றவாறு இசைக்கருவி வாசிப்பது போல காணப்படுவதால்,  இவர்கள் சமய விழாவில் ஈடுபட்டுள்ளார்கள்.  இதன் அருகில் மேலும் நான்கு மனிதர்கள் தங்களை பறவைப் போல அலங்கரித்து நடனமாடுவது போல் ஓவியம் உள்ளது.  இதில், இவர்களின் தலை, மூக்கு ஆகியவை பறவையின் அமைப்பில் வரையப்பட்டுள்ளன.  பறவைகளின் சக்தியை தாங்கள் பெற முடியும் என்பதை அவர்கள் நம்பியிருப்பதைச் சுட்டிக் காட்டுகிறது.  மற்றொரு ஓவியம் மயில் போன்ற ஒரு பறவை வரையப்பட்டுள்ளது. இது,  இவர்களுக்கு மயில் மற்றும் பிற பறவைகள் பற்றிய புரிதல் உள்ளதை உணர்த்துகிறது.  மேலும்,  ஓர் ஆமை உருவம் காணப்படுகிறது.  இதனால் இக் குகை அருகில் நீர் நிலை இருந்திருக்க வேண்டும்.  நீர் நிலை இருந்ததற்கான தடயங்கள் இங்குள்ளது குறிப்பிடத்தக்கது.  ஆனால், இவ்விடத்தில் சமய விழா நடந்ததற்கான ஓவியங்கள் காணப்படுவதால்,  இவ் ஓவியம் சமயத் தலைவர்கள் விழாக் காலங்களில் அமர்ந்து பூஜைசெய்யும் புலித்தோலாக இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.  இங்குள்ள சில ஓவியங்கள் பாறையிலிருந்து மழைக் காலங்களில் கசியும் நீரால் பாசி பிடித்து சற்று மங்கலாகக் காணப்படுகிறது.
அதேபோல, இக் குகையின் தென்மேற்கே உள்ள சிறிய குகை பாறையில் மூன்று மனிதர்கள் செல்வது போன்ற ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.  இது பக்கத்தில் உள்ள குகைக்குச் செல்வதாகக் கருதலாம்.  மேலும்,  இக் குகைக்கு தெற்கில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு பாறையின் ஒரு பகுதியில் ஒரே ஒரு மனிதன் தலையில் முண்டாசுடன் நின்ற நிலையில் ஓவியம் காணப்படுகிறது. இவ் உருவம் இந்த இனக்குழுவின் தலைவனாக இருக்க வேண்டும்.
இம் மூன்று இடங்களிலும் காணப்படும் ஓவியங்கள் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த வெள்ளை நிற ஓவியங்களாகும். அதாவது இவற்றின் காலம் சுமார் கி.பி 1000 எனலாம். இருப்பினும், இங்கு கல்வட்டம் எனப்படும் பெருங்கற்கால ஈமச் சின்னம் காணப்படுவதால், இதன் காலம் இன்னும் பின்னோக்கிச் செல்ல வாய்ப்புள்ளது. இவை கரி, சுண்ணாம்பு, இயற்கை கலவைகளால் வரையப்பட்டுள்ளன. இவ் ஓவியங்கள் காணப்படும் இடம் பண்டைய கால குருமன்ஸ் பழங்குடிகளின் இருப்பிடமாகும்.  இவ் ஓவியங்கள் இம் மக்களின் ஓவியங்கள் என உறுதியாகக் குறிப்பிடலாம்.  சான்றாக, இன்றைய கர்நாடகப் பகுதிகளில் இருந்து பெருங் கற்கால காலக் கட்டத்தில் புலம்பெயர்ந்தவர்கள்,  இவர்களே பெருங்கற்கால நினைவுச் சின்னங்களை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தியவர்கள் என வரலாற்று ஆய்வாளரான சுந்தராவின் ஆய்வு உறுதிப்படுத்துகிறது. இம் மலை அடிவாரங்களில் இன்றளவும் குருமன்ஸ் மக்களே வசிக்கின்றனர்.  மேலும், அப் பகுதியில் இம் மக்களின் வழிபாட்டுத் தலமான காட்டுக் கோயில்கள் உள்ளன.  அதேபோல, குருமன்ஸ் மக்களின் பரம்பரைத் தொழிலான ஆடுமேய்த்தலுக்காக அமைக்கப்படும் ஆடு அடைக்கப்படும் தறிகள் உள்ளன. 
அவை குருமன்ஸ் தறி என்றே இப்பகுதி மக்களால் அழைக்கப்படுகிறது. இதுபோன்ற ஆதாரங்கள் இவை குருமன்ஸ் இன மக்களின் ஓவியங்கள் என்பதை உறுதிப்படுத்துகின்றன என்றார்.

More from the section

பெரியாம்பட்டியில் ரூ.2.25 கோடியில் பள்ளிக் கட்டடம் கட்டும் பணி தொடக்கம்
இளம் வயதில் திருமணம் செய்யக் கூடாது: ஆட்சியர் சு.மலர்விழி
ஜெருசலம் பயணத்துக்கு நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்
பிப்ரவரி 22 மின்தடை
விபத்துக்குள்ளான வேனில் இருந்த புகையிலைப் பொருள்கள் பறிமுதல்